சிறப்புக் களம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் என்ன? வருவாய் ஏது? அதிகாரம் என்ன? ; விரிவான பார்வை

Veeramani

தமிழகத்தில் எற்கனவே ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து பார்ப்போம்...

தேர்தல் களம் காணும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:

தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அதன்பின்னர் பல்வேறு அரசியல் மற்றும் சட்டசிக்கல்கள் காரணமாக தள்ளிப்போடப்பட்ட உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது, இதில் விடுபட்ட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் இடங்கள், 138 நகராட்சிகளுக்கான 3,843 வார்டு உறுப்பினர் இடங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் இடங்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த 3 அமைப்புகளிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்பட்டு, வார்டுகளில் வாக்காளர்களால் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவராகவும், ஒருவர் துணைத் தலைவராகவும் மறைமுகமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

மாநகராட்சிகள்:

தமிழகத்தில் வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன. 10 இலட்சம் மக்கள் தொகை அல்லது அதிக வருவாய் தரும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் முதலில் 6 மாநகராட்சிகள் மட்டுமே இருந்தன, அதன்பின்னர் தற்போது படிப்படியாக 21 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது.

இம்மாநகராட்சிகளுக்கு அதன் மாநகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் மூலமாக பணிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் இவ்வகையிலேயே பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

நகராட்சிகள்: மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் நகராட்சிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு சட்டத்தின் 74 வது திருத்தச் சட்டம் 1992ன் விதிகளின் படி இயங்குகிறது.

பேரூராட்சிகள்: தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் மூன்றாம் நிலை பேரூராட்சி, இரண்டாம் நிலை பேரூராட்சி, முதல் நிலை பேரூராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி, சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் மூன்றாம் நிலை பேரூராட்சி என்பது பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையதும், இரண்டாம் நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாயும், முதல் நிலை பேரூராட்சி என்பது இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேலும், தேர்வு நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும், சிறப்பு நிலை பேரூராட்சி என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது என இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. என நகராட்சியைப் போலவே அதன் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்படுகிறது. மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் தன்னிச்சையாக செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள்:

⦁ பொது சுகாதாரம் - துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை
⦁ மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
⦁ குடிநீர் வழங்கல்
⦁ தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு 
⦁ கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
⦁ தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
⦁ பிறப்பு/இறப்பு பதிவு
⦁ மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.
⦁ சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்
⦁ பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு
⦁ மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல்


வருவாய் ஆதாரங்கள்:

⦁ சொத்து வரி
⦁ தொழில் வரி
⦁ கேளிக்கை வரி
⦁ விளம்பர வரி
⦁ பயனீட்டாளர் கட்டணம்
⦁ நிருவனத்தின் மீதான வரி
⦁ நுழைவு வரி
⦁ வணிக வளாகங்கள் வாடகை
⦁ பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய்
⦁ அரசு மானியம்
⦁ மாநில நிதி பகிர்வு
⦁ மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி