சிறப்புக் களம்

தலைவலியில் இத்தனை வகைகள் இருக்கா! உங்களுடையது எந்த வகை? - காரணங்களும், இயற்கை தீர்வுகளும்

தலைவலியில் இத்தனை வகைகள் இருக்கா! உங்களுடையது எந்த வகை? - காரணங்களும், இயற்கை தீர்வுகளும்

Sinekadhara

உலகளவில் தினசரி மில்லியன் கணக்கான மக்கள் தலைவலியால் சிரமப்படுகின்றனர். துடிதுடிக்க வைக்கும், கூரிய வலியை உண்டாக்கும், தலைமுழுவதும் வலிக்கும் அல்லது மந்தமானதாக இருக்கும். இப்படி தலைவலியானது பல வகைகளாக இருந்தாலும், இதற்கான காரணங்களும் பல வகைகள்தான். மன அழுத்தம், உணர்ச்சி அதிகரித்தல், நீரிழப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல காரணங்களால் தலைவலி வருகிறது. தலைவலியின் அளவும் மிதமான, தீவிர, அதி தீவிர, பொறுத்துக்கொள்ளமுடியாத என பல அளவுகளில் வரும். இது சிலருக்கு எப்போதாவது வரலாம். சிலருக்கு அடிக்கடி, ஏன் தினசரி கூட வரலாம்.

பலருக்கும் தலைவலியானது மிகுந்த அசௌகர்யத்தை கொடுக்கும். பொதுவாக தலைவலியானது மூளையிலிருந்து உருவாவதாகவே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் வலியானது மூளைக்கு வெளியிலிருந்தே உருவாவதாக கூறுகின்றனர் நிபுணர்கள். ஏனெனில் மூளையில் எந்த வலி ஏற்பிகளும் இல்லை.

பல்வேறு வகையான தலைவலிகள் ஒன்றுடன் ஒன்று சேர்வதால், நிறைய நேரங்களில் தலைமுழுவதும் கடுமையான வலியை உணர நேரிடும். தலைவலியின் வகைகளை தெரிந்துகொண்டால் நீங்கள் என்ன மாதிரியான தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் உடனடியாக குணம்பெறலாம்.

Cluster தலைவலி

Cluster என்றால் கொத்தாக என பொருள்படுவதைப்போல், இந்தவகை தலைவலிகளானது சுழற்சி முறையிலோ அல்லது குறிப்பிட்ட காலங்களிலோ ஏற்படக்கூடியவை. இது மிகவும் வலிதரக்கூடிய தலைவலிகளில் ஒன்று. இந்த வகை தலைவலியானது தூக்கத்திலிருந்து எழ வைத்துவிடும். ஏனெனில் ஒரு கண்ணை சுற்றியோ அல்லது தலையின் ஒரு பக்கத்திலோ கடுமையான வலி ஏற்படும்.

இந்த தலைவலியானது அடிக்கடி தலையில் அடிபடுவதால் வரக்கூடியது. இது சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட இருக்கலாம். பொதுவாக சிகிச்சை காலங்களில் இந்த வலி இருக்கும், அதன்பிறகு இவை குணமடைந்துவிடும். இவை உயிருக்கு ஆபத்தானவை இல்லையென்றாலும், இது மிகுந்த அசௌகர்யத்தை ஏற்படுத்தக்கூடியது.

ஒரு கண்ணின் பின்னால் அல்லது சுற்றி மிகுந்த வலியை ஏற்படுத்தும் க்ளஸ்டர் தலைவலியின் தாக்கத்தால் முகம், தலை மற்றும் கழுத்து பகுதிகளிலும் வலி தெரியும். இந்த வலியால் ஓய்வின்மையை உணருவதுடன், பக்கவிளைவாக சில நேரங்களில் ஒரு கண் சிவந்துபோகும். மேலும் இதனால் கண்களைச்சுற்றி வீக்கம் மற்றும் கண் இமைகள் வீங்குதல் போன்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.

மைக்ரேன்ஸ்

இது பொதுவாக நிறையப்பேருக்கு வரக்கூடிய தலைவலிகளில் ஒன்று. ஒளியால் வரக்கூடிய ஒற்றை தலைவலி இது. இது மிகவும் உணர்வுடன், பார்வையை தொந்தரவு செய்யக்கூடியது. அதாவது இந்த தலைவலி வந்தவர்களால் ஒலி மற்றும் ஒளியை சகித்துக்கொள்ள முடியாது. இந்த தலைவலி வந்தால் தலைமுழுவதும் வலிக்காமல் ஒரு பக்க முகம் மட்டும் வலிக்கும். இதனால்தான் இதனை ஒற்றை தலைவலி எனவும் குறிப்பிடுகின்றனர்.

தலைசுற்றல், ஒலி மற்றும் ஒளிக்கு உணர்வுத்தன்மை அதிகரித்தல் மற்றும் இந்த தலைவலியால் நகரமுடியாமல் அவதிப்படுவர். மைக்ரேன் தலைவலி வந்தவர்கள் அடிக்கடி மனநிலை மாறுதல், மன அழுத்தம், கழுத்து அசைவின்மை, நீர்கோர்த்தல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளாலும் அவதிப்படுவர்.

டென்ஷன் தலைவலி

இது பெரும்பாலும் வரக்கூடிய தலைவலிகளில் ஒன்று. இது தலைமுழுவதும் பரவி, மந்தமான நிலையை உருவாக்கி, நெற்றி முழுவதுமே தீவிர வலியை ஏற்படுத்தக்கூடியது. டென்ஷனால் வரக்கூடிய தலைவலியை tight band of pressure across the forehead என்கின்றனர். அதாவது நெற்றிப்பகுதியில் இறுக்கமான அழுத்தம் கொடுப்பதுபோன்ற உணர்வு என குறிப்பிடப்படுகிறது. டென்ஷன் தலைவலி எதனால் ஏற்படுகிறது? என்பதை சரியாக கணிக்கமுடியாவிட்டாலும், மன அழுத்தம் அல்லது கோபம் அல்லது காலநிலை மாற்றம் போன்றவற்றால்கூட டென்ஷன் தலைவலி ஏற்படலாம்.

டென்ஷன் வகை தலைவலியானது எபிசோடிக், அதாவது 30 நிமிடங்கள் முதல் ஒரு வாரம் வரைகூட இருக்கலாம். அடிக்கடி ஏற்படும் எபிசோடிக் டென்ஷன் வகை தலைவலியானது ஒரு மாதத்தில் 15 நாட்களுக்குள்ளாக ஏற்படும். இப்படி குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஏற்படும்.

ஹைபர்டென்ஷன் தலைவலி

உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு இந்தவகை தலைவலி வருகிறது. ரத்தநாளங்களின் சுவர்களில் அதீத அழுத்தம் கொடுக்கப்படுவதால் தலைவலி வருகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவில்லை என்றால், இந்த தலைவலியானது மோசமானது மற்றும் அபாயகரமானதும்கூட. தீடீரென மிகவும் கடுமையான தலைவலியால் அவதிப்படுபவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பார்வை மங்கலைடதல், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, மூக்கில் ரத்தம் வழிதல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை இந்த தலைவலியின் அறிகுறிகள் என்கின்றனர் நிபுணர்கள்.

மருந்துகளால் தலைவலி

வேறு உடல்நல பிரச்னைகளுக்காக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு பக்கவிளைவாக தலைவலி வருவதுண்டு. இது நாள்பட்ட தலைவலியாகக்கூட மாறலாம். ஒருவர் அடிக்கடி ஒரு மாத்திரையை எடுத்துக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு தலைவலி வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே அடிக்கடி தலைவலி வந்தால் பிற பிரச்னைகளுக்கு உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் அளவை குறைப்பது நல்லது. குறிப்பாக தலைவலியை ஏற்படுத்தும் மருந்துகளை குறைப்பது மிகவும் நல்லது.

குமட்டல், ஓய்வின்மை, ஞாபக சக்தி பிரச்னை, அடிக்கடி எரிச்சல் உணர்வு மற்றும் கவனச்சிதறல் போன்றவை இந்த வகை தலைவலியின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

தலைவலியை இயற்கையாக குறைப்பது எப்படி?

  • தலைவலிக்கு பல்வேறு மருந்து மாத்திரைகள் இருந்தாலும், சில இயற்கை வழிமுறைகள் தலைவலியிலிருந்து குணமடைய உதவும்.
  • உடல் வறட்சியால் தலைவலி வராமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  • மக்னீசியம் நிறைந்த வாழைப்பழம், அவகேடோ, டார்க் சாக்லெட் மற்றும் மீன் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஆல்கஹால் மைக்ரேன் தலைவலியை உருவாக்கும் என்பதால் முடிந்தவரை அதனை தவிர்ப்பது நல்லது.
  • தூக்க பற்றாக்குறையும் தலைவலிக்கு காரணம் என்பதால் தினமும் நன்றாக தூங்கவேண்டும்.
  • நல்ல வாசனை நிறைந்த பல்வேறு தாவரங்களிலிருந்து எடுத்த தாவர எண்ணெய்களை பயன்படுத்துவது தலைவலிக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
  • காபி குடிக்கலாம். இதிலுள்ள கஃபைன் மனதை விழிப்புடன் வைப்பதுடன், அழற்சியை குறைக்கிறது.
  • யோகா பயிற்சி செய்வது அழுத்தத்தை குறைத்து, உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
  • இஞ்சி சாப்பிடலாம். இதிலுள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் உடலுக்கு நன்மை பயக்கும்.