வாழ்க்கை எல்லோருக்கு அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு எண்ணியபடி எளிதில் அமையும். சிலருக்கு தடைகளை உடைத்து.. போராட்டம்.. உழைப்பு.. என எல்லாவற்றையும் தாண்டி உச்சத்தை அடைவார்கள். இதற்கு ஜெனிதா ஆண்டோ விதி விலக்கல்ல. மாற்றுத்திறனாளியான ஜெனிதா, செஸ் போட்டியில் 6வது முறையாக ‘உலக சாம்பியன்’ ஆகியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜெனிதா ஆண்டோ. 19வது உலக
மாற்றுத்திறனாளிகளுக்கான தனிநபர் சதுரங்க போட்டி ஸ்லோவாக்கியா நாட்டில் ஜூன் 27ம் தேதி முதல் கடந்த 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 13
நாடுகளை சேர்ந்த 44 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த ஜெனிதா ஆண்டோ கலந்து கொண்டு
ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி உலக சாம்பியனானார்.
செஸ் உலகில் பல சாதனைகள் படைத்து வருகிறார் ஜெனிதா ஆண்டோ. 3 வயதில் போலியோ தாக்கியதால், உடல் பகுதி செயலிழந்தாலும். மன உறுதியில்
மலையளவு உயர்ந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார். திருச்சியை சேர்ந்த ஜெனிதா ஆண்டோவிடம் கலந்துரையாடினோம். அவர் கூறுகையில்,
‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2013ல் இருந்து 2017 வரை தொடர்ந்து 5 முறை தங்கம் வென்றேன். சென்ற வருடம் வெண்கலம்தான் வென்றேன். 6வது
முறை தங்கம் வெல்ல முடியாமல் போய்விட்டது. அதனால், இந்தமுறை தங்கம் வென்றே ஆக வேண்டும் என்கிற வெறியோடு பயிற்சி எடுத்தேன். தற்போது
6வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், விஸ்வநாதன் ஆனந்த் சார் 5 முறை
‘உலக சாம்பியன்’ ஆகியிருக்கிறார். அவரின் சாதனையை தாண்ட உழைத்தேன். அதன்படி, 6வது முறையாக தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.’
என்று பேச்சை தொடர்கிறார்.
சாதனை பயணம் தொடங்கியது எப்போது?
‘9 வயதில் எனக்கு ஆர்வம் தொடங்கியது. அப்பாதான் எனக்கு முதல் ஊக்கம். அவர் ஆசிரியராக பணிபுரிந்த போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஆங்கில
பாடம் நடத்தினார். அந்த பாடம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் எப்படி விளையாட்டு போட்டிகளில் ஜொலிக்கிறார்கள் என்பதை பற்றியது. அப்பாவுக்கு அப்போது
தோன்றியது, ஏன் எனக்கு விளையாட்டு சொல்லித்தர கூடாது என்று. அன்றைய தினமே அப்பா என்னிடம் வந்து, ‘நான் உனக்கு ஒரு விளையாட்டு சொல்லி
தருகிறேன், அதை நீ சரியாக பயின்றால் சாம்பியனாகலாம். விளையாடுகிறாயா?’ என்றார். அதற்கு நான், என்னால் எப்படிப்பா விளையாட முடியும் என்றேன்.
உன்னால் நிச்சயம் விளையாட முடியும் என ஊக்கப்படுத்தினார். அப்போது வரை பிறர் விளையாடுவதை பார்ப்பதுதான் விளையாட்டு என்று இருந்த எனக்கு,
என்னையும் விளையாட வைத்தார் என் அப்பா.
செஸ் கற்றுக்கொண்ட 3 மாதங்களிலேயே திருச்சியில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அது பெரும் ஊக்கமாக அமைந்ததால், என்னால் தொடர்ந்து
சாதிக்க முடியும் என எனக்குள் தன்னம்பிக்கை உதிர்த்தது. சமீப காலமாகதான் மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் பிரிவு கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பு
எல்லா பிரிவு வீரர்களிடமும் போட்டியிட்டு வென்று படிப்படியாக மாநில அளவு, தேசிய அளவு என முன்னேறினேன்.’ உலக அளவில் பெண்கள் பிரிவில்
முதல்முறை தொடர்ந்து 6 முறை சாம்பியனாக ஜெனிதா முடிசூடப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி குறித்த டிப்ஸ்?
‘தினமும் பயிற்சியாளரிடம் 4 மணி நேரம் பயிற்சி எடுப்பேன். பின் தனியாக நானும் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 மணி நேரம் பயிற்சி எடுப்பேன், என்னதான்
பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்தாலும், தன்னம்பிக்கையை அதிகரிக்க நானும் தனியாக பயிற்சி எடுத்துகொள்வேன். மன அமைதி, மன நிலையை சம அளவில்
வைத்து, குறிக்கோளுடன் எப்போதும் விளையாட தொடங்குவேன்.
வாழ்நாள் லட்சியம்?
‘என்னுடைய வாழ்நாள் லட்சியம் ‘கிராண்ட்மாஸ்டர்’ ஆகிவிட வேண்டும் என்பதே. விஸ்வநாதன் ஆனந்த் எனக்கு மிகவும் பிடித்த மனிதர். என்னை ஒருமுறை
அவரது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து செஸ் குறித்த பல வழிகாட்டுதல்களை காட்டினார். ஒருமுறை என் அழைப்பை ஏற்று திருச்சிக்கு வந்திருந்தார் என்பது
மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்.’ எனக்கூறி மகிழ்கிறார் ஜெனிதா.
முதல் இன்ஸ்பிரேஷன்?
என் முதல் இன்ஸ்பிரேஷன் அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ராபர்ட் ஜேம்ஸ் ஃபிஷ்ர். 1972ம் ஆண்டு உலக சாம்பியன் ஆனார். அவருக்கு பின் விஸ்வநாதன்
ஆனந்த்.
அரசிடம் இருந்து போதுமான உதவிகள் கிடைக்கிறதா?
இந்திய விளையாட்டு துறையிடம் இருந்து எனக்கு 2015க்கும் பின் எல்லா போட்டிகளுக்குமான உதவி தரப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டுத் துறையிடம்
இருந்தும் உதவிகள் தரப்படுகிறது.
அடுத்த திட்டம்?
2022ல் சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் வெல்லவேண்டும் என்ற நோக்குடன் அதற்கு தயாராகிக்
கொண்டிருக்கிறேன். எனது அல்ட்டிமேட் எய்ம், ‘கிராண்ட்மாஸ்டர்’.
நம்பிக்கை வார்த்தைகள் சில..?
இந்த உலகில் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை. எதுவுமே கடினமல்ல. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என
மனதில் நினைத்துகொண்டே முயன்றால், நிச்சயம் வெல்ல முடியும். அதற்கு நம் உடல் தடையல்ல; மனதை உறுதி வேண்டும்.
5 முறை உலக சாம்பியனாகி திருச்சியை பெருமைப்படுத்திய ஜெனிதா, 6வது முறையாக மீண்டும் திருச்சியை பெருமைப்படுத்தி உள்ளார். தங்கம் வென்று நாடு
திரும்பிய ஜெனிதா ஆண்டோவுக்கு திருச்சி விமான நிலையத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சூழ உற்சாக வரவேற்பு தரப்பட்டது. உலக அரங்கில் தமிழகத்தை
பெருமைப்படுத்திய இந்த திருச்சி பெண் மென்மேலும் சாதனைகளை புரிய நாம் வாழ்த்த வேண்டிய தருணமிது.