மேற்குத் தொடர்ச்சி காடுகளில் மலை ஏற்றம் என்பது சாகசமல்ல என ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் தெரவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர். கொழுக்குமலைப் பகுதியில் இருந்து நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் அடிவாரத்துக்கு திரும்பியபோது, திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதில் இரு குழுவினரும் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 21 பேரை மீட்கும் பணி விடியவிடிய நடைபெற்று வருகிறது.
இது குறித்து புதிய தலைமுறை இணையதளத்துக்கு ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியது "குரங்கணி மலை ஏற்றத்தை கேரளம் - தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த ஏற்பாட்டாளர்களுக்கு காடுகள் குறித்தும் காட்டுயிர் குறித்தும் எந்த அடிப்படை அறிவும் இல்லை. அவர்களுக்கு மலை ஏற்றம் என்பது வெறும் சாகசம் மட்டுமே. அங்குதான் தவறுகள் ஆரம்பிக்கிறது. வெளிநாடுகளில் பனி மலைகளில் ஏற்றம் என்பது சாகசம், அதற்கு பயிற்சி வேண்டும். ஆனால், நம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சாகச நிகழ்ச்சி எதுவம் செய்யக்கூடாது.
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது அடர் வனம், விலங்குகள் நிறைந்த பகுதி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் மலை ஏற்றம் என்பது காட்டையும், காட்டுயிர்களையும் புரிந்துக்கொள்ள ஒரு சோதனை முயற்சிக்காக மட்டுமே மலை ஏற்றத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த ஏற்பாட்டாளர்கள் இதனை சாசகசப் பயணமாக மாற்றிவிடுகின்றனர். இதற்கு முன்புக் கூட பல்வேறு நிகழ்வுகளில் சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டாளர்கள் ஐ.டி. ஊழியர்களை குறி வைத்தே மலை ஏற்றம் பயணத்தை ஒருங்கிணைக்கிறார்கள். ஐ.டி. ஊழியர்களுக்கு வேலை பலு காரணமாக அவர்கள் ஒரு ரிலாக்சேஷனுக்காக விரும்பி செல்கின்றனர். முதலில், மலை ஏற்றத்துக்கு 15 பேருக்கு மேல் செல்லக் கூடாது. காடுகள் இல்லாத மலையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம் தவறில்லை.
வனவிலங்கு கணக்கெடுப்புக்கு செல்லும்போது கூட தன்னார்வலர்களுக்கு விசில், லைட்டர், டார்ச் ஆகியவை பாதுகாப்புக்கு கொடுத்து அனுப்பப்படும். மேலும் காட்டுக்குள் பயணம் மேற்கொள்ளும் போது, உள்ளூர் ஆட்களின் துணை இல்லாமல் பயணிப்பதே இதுபோன்ற சிரமங்களுக்கு காரணம். எவ்வளவு அனுபவம் இருந்தாலும் உள்ளூர் மக்களின் துணையின்றி காட்டிற்குள் போக் கூடாது. 10 பேரில் இருவர் உள்ளூர் மக்களாக இருக்க வேண்டும். காலடி வைக்கும் ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காடு என்பது வேறு உலகம், வேறு அனுபவம். குரங்கணி மலைக்கு சென்ற குழுக்களில் உள்ளூர் மக்கள் இருந்திருந்தால், காட்டுத்தீ புகை வாசனைக் கொண்டே எச்சரித்து இருப்பார்கள். மேலும், அவர்களுக்கு காட்டின் வழிகள் தெரியும், அவர்கள் முழுமையாக உதவியிருப்பார்கள். இலையுதிர் காலம் முடிந்து சருகுகள் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் காலம், எப்போது வேண்டுமானாலும் தீ பரவக் கூடும்" என்றார் காளிதாசன்.