“இறைவனால் படைக்கப்பட்டது இந்த உலகம். உலகத்தில் உள்ள அத்தனை வளங்களும் இங்கு வாழும் எல்லோருக்குமே பொதுவானது. ஆனால் இந்திய அரசானது, சிறுபான்மை பாலின மக்கள் மீது பாரபட்சம் காட்டி ஆணுக்கும், பெண்ணுக்கும் கிடைக்கின்ற அடிப்படை உரிமைகளைக் கூட எங்களுக்கு தர மறுக்கிறது. அதனால் இந்திய அரசாங்கத்தின் கைகளால் மடிவதை நான் பெருமையுடன் கருதுகிறேன். எனவே என்னை கருணைக்கொலை செய்துவிடுவிங்கள்” எனக் கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் திருநங்கை ஷானவி பொன்னுசாமி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி. வயது 26. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 2010ம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார்.இவர் வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரியும் கூட. சக மாணவர்களின் நக்கல், நையாண்டி, கிண்டல் என சகலவற்றையும் சகித்துக்கொண்டு படித்தால் மட்டுமே இந்தப் பூமியில் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தனது பெண் தன்மையை மறைத்தே அவர் இன்ஜினியர் ஆகியிருக்கிறார். கல்வியால் இந்தப் பூமியில் உயர்ந்த இடத்தில் நின்று ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த அவரை, இந்த அரசு கருணைக் கொலையை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டியிருக்கிறது.
பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார் இந்த ஷானவி. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பணிபுரிந்த பின்னர், முறையான பாலியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். பின் தனது பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவி அதனை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்திருக்கிறார். இவர் பெண்ணாக மாறியதை அறிந்த பெற்றோர்கள் ஷானவியை ஏற்க மறுத்துவிட்டனர். ஆசை ஆசையாக வளர்த்த தம்மை பெற்றோர்கள் ஏற்காததற்கு காரணம், அவர்களிடம் சரியான புரிந்துணர்வு இல்லாமைதான் என வேதனைப்படுகிறார் ஷானவி. பெற்றோர்கள் கைவிட்டாச்சு.. சரி, நம்பிகைதான் வாழ்க்கை என மீண்டும் பொருளாதாகப் போராட்ட வாழ்க்கையில் களமிறங்கியிருக்கிறார் ஷானவி.
அந்த நேரத்தில் தான் ஏர் இந்தியாவில் இருந்து மீண்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ஒரு முறை.. இருமுறை அல்ல.. மொத்தமாக நான்கு முறை.. ஆனால் நான்கு முறையும் வேலைக்கு தேர்வானவர்களின் இறுதிப்பட்டியலில் ஷானவி பெயர் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறையும் ஏமாந்து போன ஷானவி இறுதியாக ஏர் இந்தியா, மற்றும் விமான போக்குவரத்து அமைச்சத்திடம் இது குறித்து முறையிட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அளித்த பதில் ஷானவியை மேலும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. எங்களது ஆட்சேர்ப்பு கொள்கை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே தவிர திருநங்கைகளுக்கு அல்ல என கைவிரித்துவிட்டனர்.
“எனக்குத் தகுதி இருக்கிறது. வேலை பார்த்த அனுபவமும் உண்டு. எல்லோவற்றையும் தாண்டி நான் இந்திய நாட்டின் பிரஜை. ஆனால் என்னுடைய பாலியல் தன்மையை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. இதில் தகுந்த நடவடிக்கை வேண்டும்” எனக்கூறி உச்சநீதிமன்றத்தின் கதவை இறுதியாக தட்டியிருக்கிறார் ஷானவி. உச்சநீதிமன்றமும் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 17 தேதி உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இன்று வரை விமானப் போக்குவரத்துத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் எந்த பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் தன்னை கருணைக் கொலை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் ஷானவி.
இது குறித்து ஷானவி நம்மிடம் பேசும்போது, “இப்போது மும்பையில்தான் வசித்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் வேலைக்காக நேர்முகத் தேர்விற்கு தமிழ்நாட்டில் இருந்து தான் டெல்லிக்கு சென்றுவந்தேன். பெற்றோர்கள் கைவிரித்துவிட்டதால் அப்போதே மிகுந்த சிரமத்திற்கு மத்தியில்தான் டெல்லிக்கு சென்று வந்தேன். இந்திய அரசாங்கம் ஒவ்வொருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் கிடைப்பதை உறுதி செய்வதாக சொல்லி வருகிறது. ஆனால் எங்களுக்கு இதில் எதுவுமே கிடைக்கவில்லை. படித்த படிப்பிற்கு வேலை இல்லை. வேலை இருந்தால் தானே உணவு கிடைக்கும். எனக்கு தேவையான துணிமணிகளை வாங்கிக் கொள்ள முடியும். இந்திய அரசாங்கமே எங்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாவிட்டால் தனியார் நிறுவனங்கள் எங்களுக்கு எப்படி வேலை கொடுக்கும்..?. கொஞ்ச காலம் போராடுவார்கள். பின்னர் பாலியல் தொழில் செய்தும், பிச்சை எடுத்தும் அவர்கள் போக்கில் அவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்ற மெத்தனப்போக்கில் விமானப் போக்குவரத்து துறை பதிலளிக்காமல் உள்ளது. இந்த வழக்கை தொடர வேண்டும் என்றால் இன்னும் எனக்கு அதிகப்படியான பணம் தேவைப்படுகிறது. அதனால்தான் கருணைக் கொலை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என வேதனையுடன் கூறுகிறார்.
வேலைக்கு வேண்டியது சரியான தகுதிதான். முறையான படிப்பு. இந்த இரண்டும் ஷானவியிடம் உள்ளது. ஆக, அவர் விரும்பும் அந்த வேலையை செய்ய அவர் ஆணாகவோ பெண்ணாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை. மூன்றாம் பாலினம் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுக்க எதிரொலித்துக் கொண்டிக்கும் காலத்தில் காதைப் பொத்திக் கொண்டிருப்பது இந்திய அரசுக்கு கெளரவமா என்ன?