சிறப்புக் களம்

“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம்

“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம்

Rasus

தன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது இத்தனை ஆண்டுகளாக சுமத்தப்பட்ட களங்கத்திற்கு நமது சமூகம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவிக்க, எல்ஜிபிடி சமூகத்தினர் கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்கின்றனர். நாடெங்கும் உள்ள எல்ஜிபிடி சமூகத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தலைமுறை இணையதளத்திலிருந்து நடிகையும், சமூக செயல்பாட்டாளருமான திருநங்கை கல்கியிடம் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினோம். அவர் பேசும்போது, “பாலியல் சிறுபான்மையினர், தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுடைய காதலை குற்றப்படுத்திய இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377ஐ நீக்கிய இந்தத் தீர்ப்பானது நாங்கள் இந்தச் சமூகத்தில் பயமின்றி வாழ வழிசெய்யும்.

ஒரு திருநங்கையான என்னைப் போன்றவர்களுடைய காதல் உறவை இனி சட்ட ரீதியாக குற்றப்படுத்த இயலாது. நான் விரும்பிய காதலித்த ஆணுடன் நான் சேர்ந்து வாழலாம்.  சட்டம் அதை தவறென்று சொல்லாது. இரண்டு ஆண்களுக்கிடையான, இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் உறவையும் இனி குற்றம் எனக் கருத இயலாது. 

இந்தத் தீர்ப்பு நாங்கள் சமூகத்தில் மதிப்புடன் வாழ வழிசெய்யும். இந்தத் தீர்ப்பால் சமூக அங்கீகாரம் உடனடியாக வந்துவிடாது, ஆனால் படிப்படியாக நடக்கும். குடும்பங்கள் எங்களை புறக்கணிப்பது மெல்ல குறையும். 

நாங்கள் பல ஆண்டுகளாக இத்தகைய தீர்ப்புக்காக போராடிருக்கிறோம். இனி கொண்டாடும் நேரம். இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. ஒரு இந்திய குடிமகளாக நான் பெருமிதம் கொள்கிறேன். இந்திய தண்டனைச்சட்டம் 377-ஐ நீக்கியதன்மூலம் இந்தியா உலக அரங்கில் உயர்ந்துள்ளது. ஒரு திருநங்கையாக, பால் புதுமையினராக, ஒரு பெண்ணாக இந்த நாட்டில் குடிமகளாக இருப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன்.” என்றார்.

இப்போதும் ஒரு சார்பினர் எதிர்க்கிறார்களே எனக் கேட்டபோது, “எதிர்ப்பாளர்கள் மனித உரிமைகள் பற்றி தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது சரியல்ல; சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர்.” என்கிறார். 

இதேபோல எல்ஜிபிடி சமூகத்திற்காக தொடர்ந்து போராடி வரும் பேஷன் டிசைனர் ஏசு ராஜாவிடம் கேட்டோம், “வரவேற்கத்தக்க தீர்ப்பு. 10 வருஷம் தீர்ப்பை தள்ளி போட்டு வந்தனர். இதனால் மன அழுத்தம்.. அதனால் ஏற்பட்ட துன்பம் போன்றவற்றால் தன்பால் ஈர்ப்பு கொண்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடும் எனக் கருதி மாற்று காரணம் சொல்லப்பட்டது. இப்போது சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டதால் எல்ஜிபிடி சமுதாயத்தினர் பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்த முதல் நிலை”என்கிறார்.
 
இப்பவும் கூட சிலர் எதிர்க்கிறார்களே..?

“மக்கள் நிறைய படித்துள்ளனர். ஆனால் எல்ஜிபிடி சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு இல்லை. முடிந்த வரை நாங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்போம். அப்படியும் எதிர்க்கிறவர்களை தூக்கிப்போட்டு போக வேண்டியதுதான்.”

பொதுவெளியில் இந்த அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறதா? 

“ஒரு பையன் மற்றொரு பையனை காதலிக்கிறான்னு சொன்னாலே ஏளனமாக பார்க்கிறார்கள். வீட்டில் சொன்னாலும் நாங்கள் தற்கொலை செய்துக் கொள்வோம் என சிலர் மிரட்டுகின்றனர். சில இஞைர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் மனசுக்குள்ளே புழுங்கி கல்யாணம் வரை செல்கின்றனர். பின்னர் ஒரு பெண் வாழ்க்கையும் கெடுகிறது. இப்போது குற்றமல்ல எனத் தீர்ப்பு வந்துள்ளதால் மக்கள் தைரியமாக தங்கள் பால் அடையாளத்தை வெளிப்படுத்த முடியும்” என்றார் ஏசு ராஜா.