சிறப்புக் களம்

ஐபிஎல்- தொடரில் அதிரடி சாதனைகள்: ஒரு பிளாஷ்பேக் ரிப்போர்ட்!

ஐபிஎல்- தொடரில் அதிரடி சாதனைகள்: ஒரு பிளாஷ்பேக் ரிப்போர்ட்!

webteam

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது, பதினோறாவது ஐபிஎல் திருவிழா. மைதானம் தாண்டும் சிக்சர்களுக்கும் மண்டையை பதம் பார்க்கும் பவுண்டரிகளுக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், பல சாதனைகள் காத்திருக்கின்றன. அதற்கு முன், கடந்த கால சாதனைகளை மறந்துவிட முடியுமா என்ன? 
சின்ன பிளாஷ்பேக்:


1. ஐபிஎல்-லில் அதிக ரன்களை குவித்திருப்பவர் ’சின்னத் தல’ சுரேஷ் ரெய்னாதான். 4540 ரன்கள் குவித்துள்ள சுரேஷ் ரெய்னா, ஒரு சதமும் 31 அரைச் சதங்களும் எடுத்துள்ளார். அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரரும் இவர்தான். 

2. ரெய்னாவை அடுத்து அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார் விராத் கோலி. அவர் 4418 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த வருட ஐபிஎல்-லில் இருவருக்கும் காத்திருக்கிறது பலமான போட்டி!

3. முதல் ஐபிஎல் தொடரில் (2008), கொல்கத்தா அணிக்காக விளையாடிய பிரெண்டன் மேக்குலம் (நியூசிலாந்து) பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 73 பந்துகளில் விளாசிய 158 ரன்கள் மறக்க முடியாத அபாரம். இதில் 13 சிக்சர்களும் அடங்கும்!

4. பெங்களூர் அணிக்காக ஆடிய கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)தான் ஒரு போட்டியில் அதிக, ரன் குவித்த வீரர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். கொஞ்ச நஞ்சமல்ல, 175 ரன்கள்! 66 பந்துகளில் புனேவுக்கு எதிராக அவர் விளாசிய இந்த ரன் மழையில், ஆடிப் போனார்கள்
பந்துவீச்சாளர்கள். 2013-ல் நடந்தது இது. இதன் மூலம் மெக்குலமின் ஐபிஎல் சாதனையை முறியடித்தார் கெய்ல். (இப்படி விளாசிய கெய்லை, இந்த ஏலத்துல கண்டுக்காம விட்டுடுச்சே, பெங்களூரு).

5. ஐபில் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மும்பைக்காக ஆடிய லசித் மலிங்கா (இலங்கை). 110 போட்டிகளில் 154 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் மலிங்ஸ்! அவரது சிறந்த பந்துவீச்சு, 2011-ல் டெல்லிக்கு எதிராக 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது. (இப்படிப்பட்ட சிங்கத்தை இந்த வருஷம் சாய்ச்சுப்புட்டாய்ங்களே).

6. ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், பாகிஸ்தானின் சோஹைல் தன்வீர். 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் எடுத்த 6 விக்கெட்டுகள்தான் ஐபிஎல்-லின் ஒரு பந்துவீச்சாளரின் தனி நபர் பெஸ்ட்!

7. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றிருக் கிறது. 2008-ல் நடந்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா, 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில்தான் மெக்குலம் 158 ரன்கள் குவித்தார்.

8. ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். 2013-ல் புனேவுக்கு எதிராக 263 ரன்கள் குவித்தது.

9. மிகவும் குறைந்த ஸ்கோர், 49. இந்த சாதனையையும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிதான் வைத்திருக்கிறது. 2009-ல் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆடியபோது 49 ரன்களுக்குள் சுருண்டது பெங்களூரு!

10. அதிகப் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டவர், தோனி. 2008- 2017 வரை 143 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டிருக்கிறார்.