சிறப்புக் களம்

டாப் 10 ஆப்கன் அப்டேட்ஸ்: தலிபானின் 'பழிவாங்கல்' அச்சம் முதல் வெளியேற்றப்படும் மக்கள் வரை

டாப் 10 ஆப்கன் அப்டேட்ஸ்: தலிபானின் 'பழிவாங்கல்' அச்சம் முதல் வெளியேற்றப்படும் மக்கள் வரை

Veeramani

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது முதல், ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழலின் டாப் 10 அப்டேட் தகவல்கள்:

  1.  ஆண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி - பெண்கள் விளையாட்டு பற்றி தெளிவு இல்லை: ஆப்கானிஸ்தான் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் தலையிட மாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய வெற்றிகளை குவித்த கிரிக்கெட் விளையாட்டு நிறுத்தப்படாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அதிகாரி கூறுகிறார். இருப்பினும், மகளிர் கிரிக்கெட் திட்டங்களின் நிலைபற்றி தெளிவான தகவல் இல்லை. "தலிபான்களுக்கு கிரிக்கெட்டில் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் திட்டமிட்டபடி எங்கள் பணியை தொடரலாம் என்று அவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்" என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊடக நடவடிக்கைகளின் தலைவர் ஹிக்மத் ஹசன் கூறினார்.
  2. டாய்ச் வெல்லேவின் நிருபரின் உறவினர் தலிபான்களால் கொல்லப்பட்டார்: தலிபான்கள், டாய்ச் வெல்லே பத்திரிகையாளரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றனர் மற்றும் மற்றொருவரை கடுமையாக காயப்படுத்தியுள்ளதாக ஜெர்மன் அதிகாரி தெரிவித்தார். தற்போது ஜெர்மனியில் பணிபுரியும் பத்திரிகையாளரை கண்டுபிடிக்க தலிபான்கள் வீடு வீடாக தேடுதல் நடத்தியதாக டாய்ச் வெல்லே (DW) தெரிவித்தது. 
  3. ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தும் தலிபான் பழிவாங்கும் பயம்: தலிபான்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் பணிபுரிந்த மக்களை இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று தேடி வருகிறார்கள். காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தலிபான்கள் மக்களை சோதனை செய்தே அனுப்புகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  4. அமெரிக்கா மேலும் 3,000 பேரை வெளியேற்றியது: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை சுமார் 350 அமெரிக்க குடிமக்கள் உட்பட 3,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 16 சி -17 விமானங்களில் ஏறக்குறைய 3,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியது" என்று ஊடக அறிக்கையில் கூறினார். ஆகஸ்ட் 14 முதல் இராணுவத்தால் சுமார் 9,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
  5. பொதுமக்கள் மசூதிகளுக்குள் நுழைய அனுமதி: ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  6. தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து 18,000 பேர் வெளியேற்றம்: ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் காபூல் விமான நிலையத்தில் இருந்து 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக நேட்டோ அதிகாரி தெரிவித்தார்விமான நிலையத்திற்கு வெளியே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், தப்பி ஓட மக்கள் விரும்புகின்றனர் என்றும் அந்த அதிகாரி கூறினார். காபூலில் இருந்து தங்கள் குடிமக்கள் அல்லது ஊழியர்களை வெளியேற்ற உதவிக்காக பல நாடுகளும் அமைப்புகளும் தலிபான் தலைவர்களை அணுகியுள்ளதாக ஒரு தலிபான் அதிகாரி கூறினார். 
  7. விமான நிலையத்தில் அமெரிக்க வீரர்களை நிறுத்த முடிவு: ஆப்கானிஸ்தானில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரம் குறித்தும், அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்துவது குறித்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடம் ஆலோசனை நடத்தினார். அதில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை அமெரிக்க ராணுவத்தை காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க அவர் முடிவு எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ராணுவ மேஜர் ஜெனரல் ஹங் டெய்லர், பொதுமக்களை வெளியேற்ற வசதியாக காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,200 அமெரிக்க வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஒரு நாளில் 9,000 பேர் வரை வெளியேற்ற போதுமான விமானங்கள் கைவசம் இருப்பதாகவும், கடந்த 14 ஆம் தேதி முதல் இதுவரை 7,000பேரை விமானம் மூலம் வெளியேற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
  8. தொடரும் தலிபான்களின் தாக்குதல்கள்: ஆப்கானிஸ்தானில் சுதந்திர தின விழாவையொட்டி அந்நாட்டு தேசியக் கொடி ஏந்தி பேரணி சென்ற மக்கள் மீது தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஆப்கனின் முக்கிய நகரங்களில் ஒன்றான அசதாபாத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். அப்போது தலிபான்கள் திடீரென மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தொடர்பான தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை
  9. பெண் செய்தியாளரை பணி நீக்கம் செய்த தலிபான்கள்: ஆப்கானிஸ்தானில் அரசு செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் செய்தியாளரை தலிபான்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், ஷரியத் சட்டப்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அங்கு நிலைமை நேர்மாறாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ஷப்னம் தவ்ரான் என்ற பெண் செய்தியாளர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் வழக்கம் போல அலுவலகத்துக்கு சென்ற போது, பெண்களுக்கு இங்கே பணியில்லை நீங்கள் திரும்பி செல்லலாம் என தலிபான்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.பெண்களுக்கு இந்த அலுவலகத்தில் இனி பணி கிடையாது என தலிபான்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
  10. தலிபான் தலைவர்களில் ஒருவர் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்: தலிபான்களின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் ஷேர் முகமது அப்பாஸ், இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது. 1971ஆம் ஆண்டு முதல், இந்திய ராணுவ அகாடமி ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. அதன் படி 1982ஆம் ஆண்டு டேராடூனில் ஆப்கான் ராணுவத்தில் இருந்து பயிற்சிக்கு சேர்ந்தவர் ஷேர் முகமது அப்பாஸ். இங்கு ராணுவம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் பெற்று நாடு திரும்பிய ஷேர் முகமது அப்பாஸ், 1996ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகி தலிபான்களிடம் சேர்ந்துவிட்டார். அவரது ஆங்கில பேச்சுத்திறமையால், 1997ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது தலிபான்களில் சக்திவாய்ந்த ஏழு தலைவர்களுள் ஒருவராக ஷேர் முகமது அப்பாஸ் கருதப்படுகிறார்.