சிறப்புக் களம்

’எம்.ஜி.ஆர் முதல் தனுஷ் வரை’ தலைமுறைகள் கோலோச்சிய கவிஞர் வாலி பிறந்தநாள் இன்று..!

’எம்.ஜி.ஆர் முதல் தனுஷ் வரை’ தலைமுறைகள் கோலோச்சிய கவிஞர் வாலி பிறந்தநாள் இன்று..!

Veeramani

எம்ஜிஆர், ரஜினி, விஜய், சிம்பு என்று நான்கு தலைமுறைகள் பாடலாசிரியராக கோலோச்சிய கவிஞர் வாலியின் பிறந்தநாள் இன்று..!

கவிஞர் வாலியின் பாடல்கள் எல்லோர் இதயத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவை. 1960 களின் தொடங்கிய கவிஞர் வாலியின் பாடலாசிரியர் பயணம் அவர் இறக்கும் 2013 ஆம் ஆண்டு வரை நீண்டு கொண்டே இருந்தது. 1958 ஆம் ஆண்டு ’அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில்தான் தனது முதல் பாடலை எழுதினார் வாலி. அதன்பிறகு தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பல பிரபலமான, புகழ்பெற்ற பாடல்களை எழுதி முத்திரை பதித்தவர் வாலி. குறிப்பாக எம்ஜிஆரின் பிளாக்பஸ்டர் பாடல்களான “ நான் ஆணையிட்டால்”, “ மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” போன்ற பல பாடல்களை எழுதியவர் வாலிதான். ” கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை நான் மறவேன்” என்ற வாலியின் பாடல் ஒலிக்காத இடமே இருக்க முடியாது என சொல்லலாம். நடிகர் சிவாஜிக்கும் பல புகழ்பெற்ற பாடல்களை இவர் எழுதியுள்ளார்.

பக்தி, நட்பு, காதல், தத்துவம், சோகம், இளமை என அனைத்து தளங்களிலும் அட்டகாசமான பாடல்களை கொடுத்தவர் வாலி. ரஜினி-கமல் காலத்திலும் இவரது பாடல்கள் புகழில் உச்சியில் இருந்தன. காட்டுக்குயிலு மனசுக்குள்ள, அம்மா என்றழைக்காத உயிரில்லையே போன்ற இவரது பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். அதன்பிறகு விஜய்-அஜித் தலைமுறைக்கும் வெற்றிகரமாக பாடல்களை எழுதிக்குவித்தவர் வாலி, நிறைவாக சிம்பு-தனுஷ் காலம் வரை சிறப்புடன் நீண்டது இவரது பயணம். எல்லா தலைமுறைக்கும் ஏற்ற வெற்றிகரமான பாடல்களை எழுதியதுதான் இன்றும் இவரை பெருமையுடன் நினைவுகூற வைக்கிறது. இவர் மொத்தமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார், மேலும் பல புகழ்பெற்ற கவிதை தொகுப்புகளையும், நூல்களையும் படைத்துள்ளார். பத்மஸ்ரீ விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாலி பெற்றுள்ளார்.

1931 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். இவர் 2013 ஆம் ஆண்டு ஜீலை 18 ஆம் தேதி மரணமடைந்தார்.