இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் இன்று. இவர்தான் சென்னை சட்டசபையின் முதல் பெண் உறுப்பினர், முதல் பெண் துணைத்தலைவர் போன்ற பதவிகளை அலங்கரித்தவர். அடையாறில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை உருவாக்கியவரும் இவர்தான். தேவதாசி முறை ஒழிப்பு, பால்ய விவாக ஒழிப்பு, பெண்கள் சொத்துரிமை உள்ளிட்ட பல சட்டங்கள் இயற்ற போராடியவர் இவர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதிக்கு 1886 ஆம் ஆண்டு ஜீலை 30 ஆம் தேதி மகளாக பிறந்தார். பெண்கல்விக்கு எதிரான மனநிலை நிலவிய அந்த காலத்தில் பல தடைகளை தாண்டி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்தார். பின்னர் 1907ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இவர் மருத்துவம் பயில தொடங்கினார்.
1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்ற இவர், பிறகு எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராகவும் பணியாற்றினார். பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற பெண்கள் மாநாடுகளில் கலந்துகொண்டார். சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் இவர்தான். பின்னர் 1925 ஆண்டு சென்னை மாகாண சட்டசபையின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்கள் சொத்துரிமை சட்டம், பால்யவிவாக சட்டம் போன்ற புரட்சிகர திட்டங்களை நிறைவேற்ற இவர் பாடுபட்டார்.
அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கிய இவர்தான், சென்னை அடையாறில் புற்றுநோய் சிகிச்சை மையத்தையும் அமைத்தார். 1956 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூசன் விருது வழங்கப்பட்டது.