திமுக தலைவருக்கு அடுத்தப்படியாக அதிகாரமிக்கப் பதவிகளான பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகனும் டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், "திமுகவில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளை அடைவதற்கு பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களிலேயே தகுதியும் திறமையும் கொண்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால், திமுக கொடுக்காது. அங்கு சாதிக்கொரு நீதிதான்” என்றக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார், திமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், பாஜகவின் தற்போதைய மாநிலத் துணைத் தலைவருமான வி.பி துரைசாமி. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டி.கே.எஸ் இளங்கோவன் எம்.பியிடம் பேசினோம்,
’திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளை பட்டியல் இனத்தவருக்கு கொடுக்காது. அங்கு சாதிக்கொரு நீதிதான்’ என்றிருக்கிறாரே வி.பி துரைசாமி?
திமுகவில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் சீனியாரிட்டிப் பார்த்தே நியமிக்கப்படுகிறது. இப்பதவிகளில், இதுவரை மூத்த தலைவர்களே இருந்துள்ளனர். திமுக பட்டியலின மக்களுக்கு எதிரி அல்ல. பொதுச்செயலாளருக்கு அடுத்து துணைப்பொதுச் செயலாளர் பதவிகளில் பட்டியல் இனத்தவர், மகளிர், பொதுப்பிரிவினர் என்று இட ஒதுக்கீட்டை கொடுத்து வருகிறது. பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சியிலும் இட ஒதுக்கீடு முறை கிடையாது. திமுகவில் மட்டும்தான் இருக்கிறது. வி.பி துரைசாமி திமுகவை களங்கப்படுத்தவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகத்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்.
பாஜகவில் தலைவர் பதவியே பட்டியல் இனத்தவருக்கு கொடுக்கும்போது திமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கொடுக்கலாம் என்கிறாரே?
திமுகவில் பதவிகள் தேர்தல் வைத்து பொதுக்குழு மூலம்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், பாஜகவில் அப்படியா தேர்ந்தெடுக்கிறார்கள்? முதலில் அவர்களுக்கு ஜனநாயம் என்றால் என்னவென்று தெரியுமா? நீண்ட கட்சி அனுபவமும் அரசியல் பக்குவமும் கொண்ட சீனியர்களாக இருப்பதால்தான் துரைமுருகனுக்கும், டி.ஆர் பாலுவுக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டன. இவர்களைப் போன்ற சீனியர்கள் பட்டியல் இனத்தவர்களில் இருந்தால் அவர்களுக்கும் கட்டாயம் கொடுப்போம். தேர்தல் மூலம் இல்லாமல், அப்படியே நியமிப்பது பாஜகவின் பழக்கம்.
ஒரு பதவியை கொடுப்பதற்கும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பாஜக மாதிரி எங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒருவரை நியமிப்பதில்லை. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் திமுகவிற்கு களங்கம் உண்டாக்கக்கூடிய குற்றச்சாட்டுகள். எந்தப் பதவியும் சாதிப் பார்த்து பங்குப்போட்டு கொடுப்பதில்லை. வி.பி துரைசாமிக்குப் பதில் அவர், சமூகத்தையேச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜூக்குத்தான் கொடுத்தோம். அதனால், பாஜக சென்றுவிட்டார். இவருக்கு கொடுக்கவில்லை என்றதும், பட்டியல் இனத்தவரையே மதிக்கவில்லை என்கிறார். எல்.முருகனை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள்? ஜே.பி நட்டாவை எந்த தேர்தல் வைத்து தலைவராக்கினார்கள்? பாஜகவில் பட்டியல் இனத்தவரை தலைவராக நியமித்து அவமானப்படுத்தும் வரலாறுகள் இருப்பதை மறந்துவிட வேண்டாம்.
இது ‘பெரியார் மண்’ என்று சொல்லும் திமுகவில் பெண்களுக்கும் இப்பதவிகள் இதுவரை கொடுக்கப்படவில்லையே?
பொதுச்செயலாளர் பொருளாளர் பதவிகள் கட்சியின் தலைமையை நிர்வகிக்கும் வேலை. வழிநடத்த வேண்டிய வேலை. அதனால், கட்சியில் மூத்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள், கொள்கை பிடிப்புள்ளவர்களுக்கு கொடுக்கிறோம். டி.ஆர் பாலு 1978 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறார். துரைமுருகன் 1965 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போராடி ஒரு மாணவராக இருந்து வந்திருக்கிறார். இந்த மூத்தத் தலைவர்களை எப்படி புறக்கணிக்க முடியும்? பெண்களில் துணைப் பொதுச்செயலாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் இருக்கிறாரே? திமுகவுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. தேர்தல் நடத்தி பொதுக்குழு மட்டும்தான் அனைத்தையும் முடிவு செய்யும். அதற்கான தலைமைப்பண்புடன் அனுபவம் உள்ளவர்களை வழிநடத்துபவர்களை தேடவேண்டியுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு கொடுக்கிறோம். எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகளில் மட்டும்தான் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது. பெண்களையும் பட்டியல் இனத்தவரையும் மதிக்கின்ற கட்சி திமுகதான். புறக்கணிக்கும் கட்சி அல்ல.
யாருமே போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யவில்லையே? போட்டியிட தடுக்கப்பட்டதா?
எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டார்கள் என்றுதானே அர்த்தம்?
கனிமொழிக்கும் பதவி கொடுக்கவேண்டும் என்று தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளார்களே?
கனிமொழி விரும்பவேண்டும் அல்லவா? பதவி என்பது இவர்களுக்கு கொடுக்கவேண்டும், அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். எனக்குக்கூட இருக்கும். ஆனால், கட்சியில் மரபு என்று வைத்துள்ளோம். அனுபவஸ்தர்களை அழைத்து வந்தால் கட்சியை சிறப்பாக நடத்த முடியும் என்று நினைக்கிறோம்.
ஆண்களுக்கு இருக்கின்ற அதே தகுதி, திறமை எல்லாம் பெண்களுக்கும் இருக்கிறதல்லவா?
தகுதி, திறமை என்பதில்லை. சீனியர் என்பதால் தான் கொடுத்திருக்கிறோம். கனிமொழி அரசியலுக்கு காலதாமதமாக வந்தவர். மூத்த தலைவர்களை எப்படி புறக்கணிப்பது? நாங்கள் யாரையும் இவருக்கு கொடுக்ககூடாது என்று நினைத்ததில்லை.
- வினி சர்பனா