சிறப்புக் களம்

தேர்வு சமயத்தில் ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள்!

தேர்வு சமயத்தில் ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள்!

Sinekadhara

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் என்றாலே தேர்வுகாலம் என்று குறிப்பிடுவோம். மற்ற நாட்களைவிட இந்த தேர்வுகாலங்களில் மாணவர்கள் தங்கள் அதிகநேரத்தை புத்தகங்கள் முன்பு செலவிடுவர். படிக்கும்போது கவனச்சிதறல் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஞாபகசக்தியை ஊக்கப்படுத்தி உடல்நலக்குறைபாடுகளைத் தவிர்க்க சில உணவுகளைப் பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட காலை உணவு

ஒருநாளை நன்றாகத் தொடங்க காலை உணவு மிகமிக அவசியமானது. எனவே அந்த உணவு வீட்டில் செய்யப்பட்டதாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவைக் கொடுப்பதை உறுதிசெய்யவேண்டும். எனவே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மற்றும் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. ஏனென்றால் அவற்றிலுள்ள செயற்கை மூலக்கூறுகள் மூளை மற்றும் உடல் செயல்பாட்டுக்கு உதவாததால் நாள்முழுதும் ஒருவித மந்தத்தன்மை ஏற்படும். எனவே எளிதாக செரிக்கக்கூடிய உணவுகளான அவல், உப்புமா, இட்லி மற்றும் காய்கறிகளை மாணவர்களுக்குக் கொடுக்கலாம். முக்கியமாக நட்ஸ்களை கொடுப்பதை மறக்கக்கூடாது.

நெய்

நெய்யில் எண்ணற்ற ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. எனவே நெய்யை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். மேலும் நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால், ஞாபகசக்தியை ஊக்கப்படுத்துவதுடன், மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

தயிர்

தேர்வு சமயங்களில் எந்தவித செரிமானப் பிரச்னைகளும் ஏற்படாமல் இருக்க குடல் ஆரோக்கியம் மிகமிக அவசியம். அதற்கு தினசரி தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதால், அது மகிழ்ச்சியை தரும் செரட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே தேர்வு சமயங்களில் தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

சர்க்கரை

சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை குழந்தைகளுக்கு கொடுப்பது அவசியம். அதாவது லட்டு, கடலைமிட்டாய், கோகம் பழ ஜூஸ் மற்றும் எலுமிச்சை சர்பத் போன்றவற்றை குழந்தைகள் உணவில் சேர்ப்பது அவசியம். இது குழந்தைகளின் ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கும்.

அரிசி சாதம்

அரிசி சாதம் வயிற்றை இதமாக வைப்பதுடன், வயிற்றில் மந்தத் தன்மை ஏற்படுவதையும் தடுக்கிறது. அரிசியிலுள்ள ப்ரீ-பயோட்டிக்கானது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் வளருவதை ஊக்கப்படுத்துகிறது. எனவே பருப்பு - சாதம், கிச்சடி மற்றும் தயிர்சாதம் போன்வற்றை குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.