சிறப்புக் களம்

தமிழ் சினிமாவின் த்ரில்லர் கிங்: மிஷ்கின் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவின் த்ரில்லர் கிங்: மிஷ்கின் பிறந்தநாள் இன்று!

sharpana

படத்தின் துவக்கத்தில் ஆரம்பித்து இறுதிவரை லப் டப் ஹார்ட் பீட்டை ‘திக்..திக்’ என மாற்றி திக்குமுக்காட வைத்துவிடுபவைதான் இயக்குநர் மிஷ்கினின் படங்கள். இன்று அவரின் 49-வது பிறந்தநாள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயக்குநர் மிஷ்கினின் உண்மையான பெயர் சண்முக ராஜா. இவர் செப்டம்பர் 20, 1971-ஆம் ஆண்டு பிறந்தார். ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கியின் நூலால் ஈர்க்கப்பட்டு, அதில் வரும் இளவரசனின் பெயரான மிஷ்கின் பெயரை தனது பெயராக்கிக்கொண்டார். சிறுவயதிலிருந்து நல்ல வாசிப்பு பழக்கம் கொண்ட மிஷ்கின் உள்ளூர் எழுத்தாளர்கள் முதல் உலக எழுத்தாளர்கள் வரை தனது நாளின் பெரும் பகுதியை வாசிப்புகளிலேயே கழித்தவர். சினிமா மீதான ஆர்வத்தால், இயக்குநர்கள் வின்சென்ட் செல்வா மற்றும் கதிரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

இவரின் முதல் படமான ’சித்திரம் பேசுதடி’ 2006-ஆம் ஆண்டு  வெளியாகி தமிழக மக்களை பேசவைத்தது. அந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் தமிழ் சினிமாவிற்கு மிஷ்கின் என்ற படைப்பாளியையும் அடையாளம் காட்டியது. அதிலிருந்து தமிழின் முன்னணி இயக்குநர் ஆனார், மிஷ்கின். அதற்கடுத்து, வெளியான அஞ்சாதே பல்வேறு விருதுகளைக் குவித்தது. நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன்,சைக்கோ என்று இந்த 14 வருடத்தில் குறைவான படங்களே இயக்கியிருக்கிறார்.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கமர்ஷியல் படங்கள்தான் வெற்றி பெறும். ஆனால், அதிலிருந்து மிஷ்கின் படங்கள் மாறுபட்டவை. அவரது, சில படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெறாத போதும், கமர்ஷியல் பாதைக்கு மாறவில்லை. சினிமா தன்னை கைவிடாது என்ற நம்பிக்கைக் கொண்டவர். ஏனென்றால், தனது முதல் படத்திலிருந்து ஜானரை விட்டு மாறாத இயக்குநர்களில் மிஷ்கினும் ஒருவர். கமர்ஷியல் படங்களுக்காக தனது கதைகளை, கதாநாயகர்களை மாற்றிக்கொள்ளவில்லை. அனைத்தும் மிஷ்கின் பாணிதான்.

கதைகளிலும் மட்டுமல்ல; அனைத்து நடிகர்களிலும் மிஷ்கின் முத்திரைதான்.  மிஷ்கின் படங்களில் ஹீரோக்கள் பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசமாட்டார்கள். அனைத்தும் கலந்த மசாலா படமாக இருக்காது. வில்லன்கள் குறித்த பில்டப்கள் இருக்காது. எல்லாவற்றிலும் மிஷ்கினே நிறைந்திருப்பார். இவரின் பெரும்பாலான படங்கள் குற்றப்பின்னணி கொண்ட த்ரில்லர் படங்கள்தான். படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை இதயத்தை பதைபதைக்க வைப்பவை.

நீங்கள் ஏன் தொடர்ச்சியாக குற்றப்பின்னணி கொண்ட படங்களையே எடுக்கிறீர்கள் என்று மிஷ்கினிடம் கேட்டபோது, ”குற்றம் என்பதுதான் எனது கதைகள். வருடத்திற்கு ஒரு படம்தான் இயக்குகிறேன். அந்த ஒரு வருடத்தில் ஒருக்கதையை எடுத்துக்கொண்டு ஆழமாக இறங்குகிறேன். கதையை 150 ரூபாய் கொடுத்து பார்த்துவிட்டு போகிறவர்கள் ‘ஹும் பார்த்தேன். ஜாலியா இருந்துச்சி’ன்னு சொல்றதுக்கு நான் படமே எடுக்காமல் போலாம். நான் கதைச் சொல்லும் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கிறேன். அப்படி இருக்கும்போது நம் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்பதைக் காட்டுகிறேன். மனிதனின் ஆழ்மனதில் இருக்கக்கூடிய பிரச்னைகளைப் பேசுகிறேன்” என்றார்.