சிறப்புக் களம்

“அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்வேன்”- ஸ்ருதி ஹரிஹரன்

webteam

இது ஒரு எச்சரிக்கை மணிதான் என்று நடிகர் அர்ஜுன் மீது மீ டூ புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து மீதான சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்தில் மீ டூ பரபரப்பானது. தமிழ் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு புகார் நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த புகார். இது குறித்து ஸ்ருதி ஹரிஹரன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தில், “பலமுறை நான் பாலியல் அத்து மீறல்களுக்கு உள்ளாகியுள்ளேன். வளரும் கலைஞர்களுக்கு வரும் அதே பிரச்னைதான் எனக்கும் வந்தது. 

2016 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்னை மனரீதியாக பாதித்து விட்டது. நடிகர் அர்ஜுன் உடன் இருமொழியில் தயாராகும் படமொன்றில் அப்போது நடித்துக் கொண்டிருந்தேன்.  ஒத்திகையின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார். முன்கூட்டியே எதுவும் சொல்லாமலே, என்னுடைய அனுமதி இல்லாமல், என்னை அவர் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார். உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா எனக் கேட்டேன். பதில் இல்லை. சினிமாவின் இது யதார்த்தம் என்பதை உணர்ந்தேன். இது தவறு என்பதையும் உணர்ந்தேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை’’ என்று பதிவிட்டிருந்தார்.

தன் மீதான புகாரை நடிகர் அர்ஜுன் மறுத்து பதிலளித்தார். அதில் “பல ஆண்டுகளாக நான் சினிமா துறையில் இருக்கிறேன். 60 முதல் 70 நடிகைகளுடன் நடித்துள்ளேன். ஒருவரும் இதுபோன்ற புகாரை கூறியதில்லை. அவர்கள் என்னை மதிக்கிறார்கள். இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்றார்.

இதனிடையே ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க சிலரோ, ஸ்ருதி ஹரிஹரன் விளம்பர நோக்கில் பொய் புகார் கூறுவதாக தெரிவித்தனர். ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் அர்ஜுன் ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பை உருவாக்கி அதன்மூலம் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்ததாக கூறப்பட்டது. 

இது குறித்து தி நியூஸ் மினிட்டுக்கு பேசியுள்ள ஸ்ருதி எனக்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. வந்தால் நிச்சயம் என்னுடைய கருத்தை பதிவு செய்வேன். அன்று என்ன நடந்தது என அர்ஜூனுக்கு தெரியும். இங்கு பலர் பலமாதிரி யோசிக்கிறார்கள், பேசுகிறார்கள். பெண்கள் தங்கள் பிரச்னைகளை தைரியமாக வெளிப்படுத்த இந்த மீ டூ பிரச்சாரம் கைகொடுக்கிறது. இனி பெண்களிடத்தில் தவறாக நெருங்க நினைப்பவர்களுக்கு மீ டூ பிரச்சாரம் நிச்சயம் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும். எது செய்தாலும் தப்பித்துவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அது தவறு என்பதை மீ டூ நிரூபிக்கும் என்று தெரிவித்தார்.

ஸ்ருதி புகழுக்கான தன் தந்தை மீது புகார் தெரிவித்துள்ளார் என்று நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஸ்ருதி, என்னிடம் நடந்து கொண்டது போல் தன் மகளிடம் அர்ஜூன் நடந்து கொள்ளவில்லை என்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இங்கு பல அப்பாக்களுக்கு தங்கள் மகளிடம் கூட எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது தெரியவில்லை. அந்த வகையில் அர்ஜூன் நல்ல அப்பா. எனக்கு எதிராக அர்ஜூன் வழக்கு தொடர்ந்தால் அதை நான் எதிர்கொள்வேன். அவருக்கு முன்னதாக நான் எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.