சிறப்புக் களம்

பகலில் கட்டிடத்தொழிலாளி; இரவில் மொழிபெயர்ப்பாளர்: எளிய எழுத்தாளர் ஷபியின் கதை

பகலில் கட்டிடத்தொழிலாளி; இரவில் மொழிபெயர்ப்பாளர்: எளிய எழுத்தாளர் ஷபியின் கதை

rajakannan

கேரளாவை சேர்ந்த கூலித் தொழிலாளியான ஷபி தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களின் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளார். தோப்பில் முகமது மீரான், பெருமாள் முருகன், கந்தசாமி, சல்மா, திலகவதி, சோ. தர்மன், பாலபாரதி, ஆ.மாதவன், மேலாண்மை பொன்னுசாமி,  சுப்பிரபாரதி மணியன் ஆகியோரது நூல்களை மொழி பெயர்த்துள்ளார். 

இவ்வளவு மொழிபெயர்ப்புகள் செய்திருந்தாலும் தன்னை ஒரு முழு நேர எழுத்தாளராக அவர் சொல்லிக் கொள்ள மறுக்கிறார். யாராவது தன்னிடம் வந்து நீங்கள் யார் என்று கேட்டால், கூலித் தொழிலாளி என்றே சொல்கிறார். கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்திலுள்ள கிராமம்தான் அவரது சொந்த ஊர்.

ஷபியின் தந்தை ஒரு மீன் விற்பனையாளர். அவர்களுடைய குடும்பம் கடுமையான வறுமையில் இருந்தாலும், சிறு வயதில் இருந்தே எப்படியோ புத்தகங்களை படிக்க வாங்கி வந்துவிடுவார் ஷபி.  பால்ய காலம் குறித்து நியூஸ் மினிட் செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், “கிராமத்தில் உள்ள பொது நூலகம் எனக்கு உதவியாக இருந்தது. கிடைத்த புத்தகங்களை எல்லாம் படித்தேன். புத்தகம் வாங்குவதற்காக அனைத்து வகையான வேலைகளையும் செய்தேன். தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் சிலர் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்கள். அதன் பின்னர் நான் எழுத வேண்டும் என்பதற்கு எவ்வித ஊக்குவிப்பும் இல்லை. என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் இந்த இடத்திற்கு கொண்டுவந்து சேர்த்தார்கள்” என்று நினைவு கூர்ந்தார்.

பள்ளிப் படிப்பை முடிக்காமல் பாதியில் விட்டுவிட்டு பெங்களூருவிற்கு சென்றார் ஷபி. சாலையோரம் உள்ள டீக் கடை ஒன்றில் வேலை செய்து, அதில் கிடைத்த சிறிய வருமானத்தைக் கொண்டு புத்தகங்களை வாங்கிப் படித்ததாக கூறுகிறார். ‘என்னுடைய குடும்பம் எப்படி வாழ்க்கை நடத்தும்? இரவில் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ, அதனை வீணடிக்காமல் பயன்படுத்துவேன்’ என்கிறார் ஷபி.

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வாழும் விவேக் நகரில் உள்ள டீ கடையில் 1980 களில் வேலை செய்துள்ளார். அப்போது தமிழ்ப் பேச கற்றுக் கொண்டார். தமிழ் போஸ்டர்கள், செய்தித் தாள்கள், வார, மாத இதழ்கள் ஆகியவற்றை படிக்கக் கற்றார். பின்னர் தமிழில் புத்தகங்களை படிக்கத் தொடங்கினார். தமிழில் படித்தவற்றை தன்னுடைய தாய் மொழியான மலையாளத்தில் மொழி பெயர்க்கவும் தொடங்கினார். 

ஷபி மொழிபெயர்த்த சிறுகதை ஒன்று மலையாளம் செய்திதாளில் முதன் முதலில் வெளியானது. அதன் பின்னர், பெங்களூருவில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான கன்னூருக்கு திரும்பினார். கன்னூர் திரும்பிய பின்னர், எழுத்தாளர்களுக்கு போன் செய்து அவர்களது புத்தகங்களை மொழி பெயர்ப்பு செய்வதற்கான அனுமதியை வாங்கினார். 

தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்த தோப்பில் முகமது மீரான் எழுதிய சிறுகதைகளை அனந்த சயனம் தலைப்பில் மொழிபெயர்த்தார். இந்தப் புத்தகம் 2008ம் ஆண்டு வெளியானது. இதுதான் அவரது முதல் மொழிப் பெயர்ப்பு புத்தகம். 10 ஆண்டுகளில் நாவல்கள், சிறுகதைகள் என மொத்தம் 14 புத்தகங்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். அதில், சா.கந்தசாமியின் ‘விசாரணை கமிஷன்’, மேலாண்மை பொன்னுசாமியின் ‘மின்சார பூ’,  திலகவதியின் கல்மரம் ஆகிய 3 புத்தகங்கள் முக்கியமானவை.

எழுத்துப் பணி குறித்து ஷபி பேசுகையில், “நான் ஒரு கட்டுமான தொழிலாளி. என்னுடைய பணி காலை 8 மணிக்கே தொடங்கும். இரவு மட்டுமே எழுதுவதற்கு நேரம் கிடைக்கும். இருப்பினும் மகிழ்ச்சியுடன் எழுத்துப் பணியை செய்வேன். எழுதும் போது சில சந்தேகங்கள் எழுந்தால், எழுத்தாளருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன். தொடக்கம் முதலே அனைத்து எழுத்தாளர்களும் சந்தோசமாக என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைத்தார்கள். அனைத்து எழுத்தாளர்களுடன் நான் நல்ல உறவில் உள்ளேன். மீரான் என்னுடைய வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்” என்று கூறினார்.

திருப்பூர் இலக்கிய விருது, நல்லி திசை எட்டும் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் ஷபியின் பணிகளுக்காக கிடைத்துள்ளது. “தற்போது இலக்கியத்தில் ஈடுபாட்டுடன் இருப்பவர்கள் பலர் என்னுடைய வீட்டிற்கு வருகிறார்கள். என்னுடைய கலந்துரையாடுகிறார்கள். இதுதான் என்னுடைய வாழ்வின் லட்சியம்” என்று கூறுகிறார் ஷபி.