சிறப்புக் களம்

நீங்கள் பயன்படுத்துகிற சானிடைசர் பாதுகாப்பானதா? - இவற்றை கவனியுங்கள்!

Sinekadhara

முன்பெல்லாம் அதிகபட்சமாக 20% மட்டுமே சானிடைசர் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், கொரோனா வைரஸ் ஒரே வருடத்தில் சானிடைசர் பயன்பாட்டை நடைமுறைப்படுத்திவிட்டது. அரசாங்கமும் சானிடைசர், மாஸ்க் கட்டாயம் என்று கூறிவருகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு பாதுகாப்பற்ற சானிடைசர்களை பலர் கடைகளில் விற்பனை செய்கின்றனர். கொரோனா பயத்தால் பொதுமக்களும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சானிடைசர்களை வாங்கும்போது அவை பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சானிடைசர் மட்டுமல்ல; மற்ற எந்த சுத்தப்படுத்திகளை பயன்படுத்தும்போதும் கவனமாக இருக்கவேண்டும்.

நாம் அடிக்கடி சானிடைசர் மற்றும் க்ளீனர்களை பயன்படுத்துவதால் பொருட்களின் தன்மை மற்றும் தரமான பிராண்டுகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும்.

நாம் கடைகளில் பார்க்கும் எல்லா பொருட்களுமே கிருமிகளின்மீது செயல்படும் என்று நாம் நினைக்கக்கூடாது. கடைகளில் அடுக்கி வைத்திருக்கும் ஒரே வகையான பொருட்களில்கூட 99%, 98% பயன் தரக்கூடியது என்று எழுதியிருப்பதை நம்மால் பார்க்கமுடியும். அவை உண்மையில் அதில் குறிப்பிட்டுள்ளபடி பயன் தருகிறதா என்பதை தெரிந்து வாங்கவேண்டும்.

சில சுத்தப்படுத்திகள் சரும பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சில சுத்தப்படுத்திகளில் குறிப்பிட்டுள்ள ரசாயனங்கள் சருமத்தின்மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவற்றை கவனியுங்கள்!

  • நாம் வாங்குகிற சானிடைசர்கள் மற்றும் க்ளீனிங் ஸ்ப்ரேக்களில் குறைந்தது 60%வது ஆல்கஹால் இருப்பது அவசியம். அதிக ஆல்கஹால் கிருமிகளை அழிக்க உதவும். அதேசமயம் அது சருமத்தின்மீது எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் கவனிப்பது அவசியம்.
  • சானிடைசர்கள் கடுமையான அல்லது தனித்துவமான வாசனையைக் கொண்டிருக்கவேண்டும். நீங்கள் வாங்கும் சானிடைசரில் நறுமணம் வீசினால் அதை தவிர்த்துவிடுவது சிறந்தது.
  • பிராண்டுகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். கொரோனா தொற்றுக்குப்பிறகு புதிய புதிய பெயர்களில் சானிடைசர்கள் விற்பனைக்கு வருகிறது. ஆனால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறி என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
  • ஆல்கஹால் அவசியம்தான் என்றாலும் அதுதவிர க்ளிசரின், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் ஸ்டெரைல் வாட்டர் போன்றவையும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
  • காலாவதி தேதி கவனிக்கப்படவேண்டும். நாட்கள் செல்ல செல்ல ஆல்கஹால் ஆவியாகிவிடும். அதன்பிறகு சானிடைசர் பயன்படுத்தினாலும் பலன் கிடைக்காது. அது கிருமிகள் மற்றும் பாக்டீரியாவை அழிக்காது. எனவே காலாவதி தேதிக்குள் பார்த்து வாங்கவேண்டும்.
  • சில சானிடைசர்களில் மெத்தனால் கலந்துவருகிறது. மெத்தனால் என்னும் ரசாயனமானது சருமத்தின்மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே ஐசோப்ரபைல் ஆல்கஹால் மற்றும் எத்தில் ஆல்கஹால்(எத்தனால்) இருப்பதாக பார்த்து வாங்கவேண்டும்.