சிறப்புக் களம்

மேற்கு மண்டலம் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் செய்கிறார்கள் - தங்கம் தென்னரசு நேர்காணல்

மேற்கு மண்டலம் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் செய்கிறார்கள் - தங்கம் தென்னரசு நேர்காணல்

kaleelrahman

புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் நடத்திய சிறப்பு நேர்காணலை இங்கு பார்க்கலாம்

கேள்வி: மே 7ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியபோது அடுத்த இரண்டு வாரங்களில் நமது ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஆக்சிஜன் தேவை கட்டுக்குள் இருக்கிறதா?

பதில்: ஆக்சிஜன் தேவையை பொருத்தமட்டில் தமிழ்நாட்டின் தேவையை நாம் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், முதலமைச்சர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய காரணத்தால் இன்றைக்கு நமது ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் டன்னாக இருக்கிறது.

வருங்காலத்தில் நமது தேவை 850 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கலாம் என்ற நிலையில், இப்போதைய தேவையான ஆக்சிஜன் நம்மிடத்தில் இருக்கிறது. வருங்காலத்தில் தேவைப்படும் ஆக்சிஜன் அளவை அடைவதில் அரசு முனைப்புடன் உள்ளது.

கேள்வி: நீங்கள் பொறுப்பேற்ற அந்த சமயத்தில் மிகக் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. பல மருத்துவமனைகளில் அன்று இரவே எப்படி நாம் சாமாளிக்கப்போறோம் என்ற சூழ்நிலை இருந்தது. எப்படி அதை எதிர்கொண்டீர்கள். பெருமளவு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு இல்லை என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

பதில்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு வந்திருந்தால் உங்களது ஊடகத்திலேயே அதை சொல்லியிருக்க முடியும். அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சரும் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு இல்லை என்பதை நிச்சயமாக நான் சொல்ல முடியும்.

மிகவும் கடுமையான சூழ்நிலையில்தான் நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். அப்போது 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தான் நமக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைத்தது. அதேபோல இங்கிருக்கும் உற்பத்தி மையங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி இல்லாமல் இருந்தது. இதனால் எங்காவது அசம்பாவித சம்பவம் நடந்துவிடுமோ என்ற பதற்றம் அனைவரிடமும் இருந்தது.

அப்போதுதான் முதலமைச்சர் சொன்னார் எங்கெங்கு இருந்தெல்லாம் ஆக்சிஜன் கொண்டுவர முடியுமோ அங்கிருந்தெல்லாம் கொண்டுவாருங்கள் என்றார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கூறிய நிலையில், செயல்படாமல் இருந்த பல உற்பத்தி நிலையங்களை செயல்பட வைத்து அதன் மூலம் ஆக்சிஜனை பெற்றோம். உற்பத்தி செய்த நிறுவனங்களில் உற்பத்தியை அதிகப்படுத்தி இருக்கிறோம்.

கேள்வி: உற்பத்தியாளர்கள் சொன்னது என்னவென்றால் ஆக்சிஜன் இருக்கு. ஆனால் அதை கொண்டு செல்ல கண்டெய்னர்கள் தான் இல்லை; அதுதான் பெரிய சிக்கல் என்றார்கள். அதை ஏற்பாடு செய்துவிட்டீர்களா இப்போது இருக்கக்கூடிய சூழல் என்ன?

பதில்: நீங்கள் சொன்னதுபோல் வெளி மாநிலங்களில் ஆக்சிஜன் இருந்தது. ஆனால், அங்கிருந்த இங்கே கொண்டு வர கண்டெய்னர்கள் வேண்டும். நெதர்லாந்தில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்தபோது அதிலிருந்து நான்கு கண்டெய்னர்கள் வந்தது. மத்திய அரசிடமிருந்து நான்கு கண்டெய்னர்கள் வந்தது. மேலும் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவருவதற்காக சீனாவில் இருந்த 12 கண்டெய்னர்களை நாம் இறக்குமதி செய்தோம். அதேபோல தைவான் நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்துள்ளோம்.

இப்போது ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல தேவையான சிலிண்டர்களை சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்துள்ளோம். சிப்காட்டில் இருந்து பத்தாயிரம் சிலிண்டர்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆக்சிஜனை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கான வசதிகள் இப்போது நம்மிடத்திலே இருக்கிறது. அதனால் இப்போது எந்த பிரச்னையும் எழவில்லை.

கேள்வி: சென்னை மாதிரியான மாநகரங்களில் தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அதனால் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவையும் குறைந்துள்ளது. ஆனால், கோவை மாதிரியான மாவட்டங்களில் அதன் தேவை அதிகரித்திருக்கிறது. இப்போது எப்படி ஆக்சிஜனை விநியோகம் செய்றீங்க. அதேபோல இன்னும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கு.. படுக்கை வசதிகள் இல்லை என எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டை எப்படி பாக்குறீங்க?

பதில்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. அந்த பகுதிகளுக்கு முதலமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தேவையான உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆக்சிஜன் தேவை எங்கே அதிகமாக இருக்கிறது என்பதை நாள்தோறும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறுகிறோம். அதன்படி தேவைக்கேற்ப ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.

கோவைக்கு அதிகமாக தேவைப்படும் போது ஒடிசாவில் இருந்து நேரடியாக ரயில் மூலம் ஆக்சிஜன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எங்கு அதிகமாக தேவை இருக்கிறதோ அந்த தேவைக்கேற்ப அனுப்பப்படுகிறது.

கேள்வி: அரசு மருத்துவமனை மற்றும் பெரிய மருத்துவமனைகளுக்கு தேவைபடும் ஆக்சிஜன் கிடைத்துவிடுகிறது. ஆனால் சிறிய மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் சிறிய மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுப்பதாக தெரிகிறது. இன்றைய நிலைமை என்ன?

பதில்: நீங்கள் சொல்வதுபோல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த சூழ்நிலை இருந்தது. அப்போது நமக்கு கிடைத்த ஆக்சிஜன் அளவை கொண்டு முன்னுரிமை அடிப்படையில் கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்ப அந்த சூழ்நிலை இல்லை. இதில் எந்த அரசியலும் இல்லை. அரசியல் கட்சியினர் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று சொல்வதில் உண்மை இல்லை..

கேள்வி: மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பாஜகவினர் எங்கள் தொகுதிகளுக்கு கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். அதேபோல மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் போன்றோர் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அப்படியொரு பாரபட்சம் காட்டப்படுகிறதா?

பதில்: நிச்சயமாக ஒருபோதும் பாரபட்சம் கிடையாது. இந்த அரசு கோவைக்கு மதுரைக்கு மட்டுமான அரசு இல்லை. இந்நிலையில் முதலமைச்சர் இரண்டுமுறை கோவை சென்றுள்ளார். மேற்கு மண்டலத்திற்கு சென்று பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இதிலிருந்தே மேற்கு மண்டலத்திற்கு எந்த அளவிற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் தருகிறார் என்பது தெரியும்.

கேள்வி: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்கவேண்டும் அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள் இதற்கு மத்திய அரசு என்ன சொல்கிறது?

செங்கல்பட்டில் உள்ள இந்த நிறுவனம் 700 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. என்ன தேவைக்காக அந்த நிறுவனம் தொடங்கப்பட்டதோ அதை செயல்படுத்தாமல் பெரும் தொற்று காலத்தில் மக்கள் அல்லல் படும்போது அனைத்து வசதிகளும் உள்ள ஒரு நிறுவனம் செயல்படாமல் உள்ளது.

இதை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும். நீங்கள் முன்வராத பட்சத்தில் தமிழக அரசு நடத்த தயாராக இருக்கிறது. நீங்கள் அந்த வாய்ப்பை எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் தடுப்பூசியை தயாரித்து மக்களுக்கு கொடுக்கிறோம் என்று கேட்டிருக்கிறோம். நல்ல பதிலை சொல்வதாக மத்திய அரசு சொல்லியிருக்கிறது.