இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் எந்தெந்த அணி முந்தியிருக்கிறது, எவையெல்லாம் பின் தங்கியிருக்கிறது என்பதையும், எந்தெந்த அணிகளால் "ப்ளே ஆஃப்" சுற்றுக்கு முன்னேறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதையும் சற்றே விரிவாக பார்க்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ்: இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6-இல் வெற்றிப்பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது டெல்லி அணி. டெல்லிக்கு இன்னும் 6 லீக் போட்டிகள் பாக்கியிருக்கிருக்கும் நிலையில் அந்த அணி இன்னும் 2 போட்டிகளில் வெற்றிப் பெற்றுவிட்டால் "ப்ளே ஆஃப்" சுற்றுக்கு எளிதாக தகுதிப்பெற்றுவிடும். ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி அணி அமீரகத்தில் தன் அடுத்தடுத்தப் போட்டிகளில் ஹைதராபாத், ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுடன் மோதவிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்: 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் சிஎஸ்கேவுக்கு மிக மோசமாகவே இருந்தது. ஆனால் இந்தாண்டு ஐபிஎல் சிஎஸ்கே விஸ்வரூபம் எடுத்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 இல் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. "ப்ளே ஆஃப்" சுற்றுக்கு தகுதிப்பெற சிஎஸ்கேவுக்கு இன்னும் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றால் போதுமானதாக இருக்கும். அமீரகத்தில் இன்னும் 7 போட்டிகள் சிஎஸ்கேவுக்கு பாக்கியிருக்கிறது. இதில் மும்பை, பெங்களூரூ, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத்துடன் மோதவிருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு ஆர்சிபி அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருக்கிறது. இதுவரை 7 இல் 5 இல் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது கோலி தலைமயிலான ஆர்சிபி. இந்தாண்டு நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் களமாடி வருகிறது ஆர்சிபி. அந்த அணியும் சிஎஸ்கே போலவே இன்னும் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றால் "ப்ளே ஆஃப்" வாய்ப்பை உறுதி செய்யும். அந்த அணி இன்னும் ஹைதராபாத், ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை அணிகளுடன் அமீரகத்தில் மோதவிருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ்: நடப்பு சாம்பியனும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி இம்முறை சற்று தடுமாற்றமாவே இருக்கிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 இல் தோல்வி 4 இல் வெற்றிப்பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 4 ஆம் இடத்தில் இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற குறைந்தபட்சம் மும்பை அணி இன்னும் 4 வெற்றிகளை பற வேண்டியிருக்கிறது. அந்த அணிக்கு அமீரகத்தில் இன்னும் 7 போட்டிகள் பாக்கியிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி சீரான வெற்றிகளை பெற போராடி வருகிறது. அந்த அணி 7 போட்டிகளில் இதுவரை 3 இல் வெற்றியும் 4 இல் தோல்வியும் கண்டுள்ளது. இதனால் 6 புள்ளிகள் பெற்று, பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்துள்ளது. ராஜஸ்தானால் இப்போதும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற முடியும். ஆனால் அமீரகத்தில் தனக்கு இருக்கும் எஞ்சிய 7 போட்டிகளில் 4 இல் ராஜஸ்தான் வெற்றிப்பெற்றால் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த அணி பஞ்சாப், பெங்களூரு, சிஎஸ்கே, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் அணிகளுடன் மோத இருக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ்: ஏறக்குறைய புள்ளிகள் பட்டியலில் பாதாளத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் 3 இல் வெற்றிப்பெற்று 5 இல் தோல்வி கண்டுள்ளது. இதனையடுத்து 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6 ஆம் இடத்தில் இருக்கிறது. அமீரகத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் அந்த அணிக்கு இன்னும் 6 ஆட்டங்களே மீதமிருக்கும் நிலையில் 5 இல் வெற்றிப்பெற்றால் மட்டுமே பிளே ஆஃப்க்கு தகுதிப்பெறலாம். அந்த அணி அமீரகத்தில் ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை அணிகளுடன் மோதவிருக்கிறது கே.எல்.ராகுல் தலைமயிலான பஞ்சாப்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: படுமோசமான நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறது இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி. இதுவரை நடைபெற்றுள்ள 7 ஆட்டங்களில் 5 இல் தோல்வி, இரண்டில் வெற்றி என 4 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறுவது பெரும் கனவாகத்தான் இருக்கும். கொல்கத்தாவுக்கு மீதமிருக்கும் 7 போட்டிகளில் 5 இல் வெற்றிப்பெற்றால்தான் ஓரளவுக்கு தகுதிப்பெறும் வாய்ப்பை பெறும். அமீரக்கத்தில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான், மும்பை, சென்னை அணிகளுடன் மோதுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 ஆட்டங்களில் 1 இல் வெற்றிப்பெற்று 6 இல் தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடம் பிடித்திருக்கிறது ஹைதராபாத் அணி. ஹைதராபாத் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது இயலாத காரியம். ஏனென்றால் அமீரக்ததில் நடைபெற இருக்கும் மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் அந்த அணி வெற்றிப்பெற வேண்டும். அமீரகத்தில் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா அணிகளை சந்திக்கவிருக்கிறது.