சிறப்புக் களம்

'விண்டோஸ் வெற்றி நாயகன்'.. பில்கேட்ஸ் பிறந்தநாள் பகிர்வு

'விண்டோஸ் வெற்றி நாயகன்'.. பில்கேட்ஸ் பிறந்தநாள் பகிர்வு

webteam

1977ஆம் ஆண்டு... அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் ஒரு பெண் புதிதாக பணிக்கு சேர்ந்திருந்தார். அவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அலுவலகத்துக்குள் வந்த ஒரு இளைஞன் முதலாளி அறைக்குள் வேகமாக நுழைந்தான். அதைக்கண்ட அந்தப்பெண், “நீங்கள் யார்? முதலாளி ஊரில் இல்லை. அவர் இல்லாத போது அவர் அறைக்குள் போகக்கூடாது” என உரக்க குரல் கொடுத்தார்.

ஆனால் அந்த இளைஞன் அவரை கண்டுகொள்ளாமல் முதலாளி அறையில் இருந்த கணினியில் கவனம் செலுத்த தொடங்கினான். என்ன செய்வதென தெரியாமல் திகைத்த அந்தப்பெண் அலுவலகத்தில் இருந்த மற்றொருவரிடம் சென்று, யாரோ ஒரு இளைஞன் முதலாளியின் அறைக்குள் சென்றுவிட்டான் எனக்கூறினார். அதைக்கேட்ட அந்த நபர் சிரித்துக்கொண்டே சொன்னார், அந்த இளைஞன்தான் இந்நிறுவனத்தின் முதலாளி பில்கேட்ஸ் என்று.

மிக இளம் வயதில் பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிவிட்டார் என்பதை குறிக்கும் வகையில் சொல்லப்படும் தகவல் இது. இன்று அந்த அசாத்திய இளைஞரின் 61-வது பிறந்தநாள் இன்று!

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வில்லியம் கேட்ஸ் - மேரி கேட்ஸ் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பில்கேட்ஸ். அவரது முழுப்பெயர் மூன்றாம் வில்லியம் ஹென்றி கேட்ஸ். சிறு வயது முதலே அறிவியல் மீது அலாதி ஆர்வம் கொண்ட கேட்ஸ், சியாட்டிலின் புகழ்பெற்ற கல்வி நிலையமான லேக் சைட் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்த பெரிய சைஸ் கணினிதான் பிற்காலத்தில் பில்கேட்ஸ் பில்லியனராகக் காரணம். பில்லுக்கும் அவரது பள்ளித்தோழர் பால் ஆலனுக்கும் கணினி மீது காதல்.

கணினி மொழியை கற்ற இருவரும் நண்பர்களுடன் இணைந்து சிறு சிறு புரோகிராம்களை எழுதி அதன்மூலம் பணம் ஈட்டத்தொடங்கினர். அந்தச் சிறுவர்கள் தங்களை லேக் சைட் புரோகிராமர்ஸ் என அழைத்துக் கொண்டனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் சட்டம் பயில அனுப்பப்பட்டார் பில்கேட்ஸ். அதில் அவருக்கு பெரிய ஈடுபாடு இல்லை. பெரிய சைஸ் கணினிகளை சிறியதாக்கி ஒவ்வொரு மேசையிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே அவரது கனவு. அந்த நேரத்தில் மற்றொரு நிறுவனம் மைக்ரோ கம்யூட்டரை அறிமுகப்படுத்த பில்லும் ஆலனும் இணைந்து அதற்கு புரோகிராம் எழுதிக்கொடுத்தனர்.

பின்னர் 1975ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினர். 1980-ல் ஐ.பி.எம். தயாரித்த பெர்சனல் கம்யூட்டரில் இடம்பெற்ற ஓ.எஸ். மைக்ரோசாட் உடையது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே 1985-ல் விண்டோஸ் 1.0-வை வெளியிட்டார் கேட்ஸ். மேலும் மைக்ரோசாப்ட் வேர்டு, எக்சல், பவர்பாயிண்ட் போன்ற மென்பொருட்களையும் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து 1990-ல் விண்டோஸ் 3.0, 1995-ல் விண்டோஸ் 95 ஆகியவை வெளியாகின. ஜன்னல் என பொருள்படக்கூடிய விண்டோஸ் என்ற வார்த்தையை பெயராக வைத்ததாலோ என்னவோ அனைத்து தரப்பு மக்களும் கணினி வானைக் காண மைக்ரோசாப்ட் காரணமானது. அதன் விளைவாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம்பிடித்தார் பில்கேட்ஸ்.

தான் சம்பாதித்த பெரும்பணத்தை தொண்டு நிறுவனம் மூலம் செலவு செய்து சமூக சேவையிலும் பலருக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் விண்டோஸ் வெற்றி நாயகன்.

- மு.கவியரசன்