தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அரசு மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட ஒரு இடம் குறைவாக உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 135. திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1. தற்போது அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் தினகரன் தரப்பை ஆதரிக்கின்றனர். அவர்களைக் கழித்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசின் பலம் 116 ஆகக் குறைகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 இடங்கள் தேவை என்ற நிலையில், ஒரு எம்.எல்.ஏ. குறைகிறார்.
இது தவிர திவாகரன் தன்னிடம் தனியாக எட்டு எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதாகக் கூறுகிறார். மேலும், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர்களும் அதிமுக கணக்கில்தான் வருவார்கள். அவர்களும் டிடிவி தினகரன் தரப்பை ஆதரிப்பதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களையும் திவாகரன் கூறியுள்ள எட்டுப் பேரையும் சேர்த்தால் அதுவே 11 ஆகி விடுகிறது. ஆக ஏற்கனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19-ஐ இந்தப் பதினோரு எம்எல்ஏக்களுடன் சேர்த்தால் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்ற கணக்கில் 30 எம்.எல்.ஏ.க்கள் வருகின்றனர். அதைக் கழித்தால் எடப்பாடி அரசின் பலம் 105 தான். எனவே எடப்பாடி அரசு நெருக்கடியில் உள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எடப்பாடி அரசுக்கு 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்காத நிலையில் சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மற்றும் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையைச் சேர்த்து ஸ்டாலின் 22 எனக் குறிப்பிட்டிருக்கிறார்.