சிறப்புக் களம்

சல்மான் ஒன்றும் போர் வீரர் அல்ல..எதற்கு இத்தனை கொண்டாட்டம்

rajakannan

ஏப்ரல் 5ம் தேதி தேசிய ஊடகங்களின் கேமிராக்கள் சல்மான் கானை சுற்றியே சுழன்று கொண்டிருந்தன. ஒரு நிமிடம் கூட அவரை விட்டு அகலவில்லை. சல்மான் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார், காரில் ஏறிவிட்டார், நீதிமன்றம் வந்துவிட்டர், நீதிமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார் இப்படி ஒவ்வொரு நொடியும் அவரை பற்றிய செய்திகளே நிறைந்திருந்தது. 

சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது இது மிகவும் அதிகமான தண்டனை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அவரது ரசிகர்கள் வேதனையில் மூழ்கினர். சக பாலிவுட் நட்சத்திரங்கள் வருந்தினர். உடனடியாக சிறையில் சல்மான் அடைக்கப்பட்டார். நீதியின் நம்பிக்கை கொண்ட சிலர் நீதி வென்றுவிட்டது என்றனர்.  அதேபோல், ‘நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராஜஸ்தான், உத்திரபிரதேச மருத்துவமனையில் உயிரிழந்ததற்கு கைது இல்லை, நடவடிக்கை இல்லை, தண்டனை இல்லை. ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு மானை வேட்டையாடியதற்காக 5 ஆண்டு சிறைதண்டனையா?’ என்று சல்மானுக்கு ஆதரவான குரல்களும் ஒலித்தன. ஆனால் இவை எல்லாம் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. இப்போது சல்மான் சிறையில் இல்லை. ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டார். 

ஆனால், நீதி வென்றது என நம்பிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளா?, நீதி விலைக்கு வாங்கப்பட்டதா? விலங்குகளின் உயிர்கள் பெரிதல்ல என்ன மனப்பான்மையா? எது சல்மானின் விடுதலைக்கு காரணம் என்று பலரும் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஒரு ஏழைக்கு நீதி தாமதமாதல் நம்முடைய அமைப்பு பொறுத்துக் கொள்ளும், ஆனால் ஒரு பணக்காரனுக்கு என்றால் அப்படி இல்லை. எல்லாம் பணம்தான் முடிவு செய்கிறது’ என கொந்தளிக்கிறார்கள்.

இந்தியாவில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 623 பேர் சிறையில் உள்ளனர். இதில் 1,34,168 பேர் குற்றவாளிகள். 2,82,076 பேர் விசாரணைக் கைதிகள். அதாவது இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 67 சதவீதம் பேர் குற்றவாளி என்று உறுதி செய்யப்படாதவர்கள். இப்படி இருக்கையில், 2015ம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இரண்டு மணி நேரத்தில் சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது. தற்போது மானை வேட்டையாடிய வழக்கில் 2 நாட்களில் ஜாமீன் கிடைத்துள்ளது. நட்சத்திரம் என்பதால் சல்மானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என நேற்று கூறியவர்கள் எல்லாம் தற்போது, நட்சத்திரம் என்பதால் சல்மானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தியாவிற்கு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் கிடைத்தை விட சல்மானுக்கு ஜாமீன் கிடைத்ததைதான் ஊடகங்கள் கொண்டாடுகிறது எனவும் நெட்டிசன்கள் கதைக்கிறார்கள். அதான் ஜாமீன் கிடைத்துவிட்டதே இப்பொழுதாவது காமன்வெல்த் போட்டியில் நம்முடைய உண்மையான ஹீரோக்களை கவனியுங்கள் என்று சிலர் வருத்தத்துடன் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

ஒருபுறம் சல்மான் ஜாமீனில் விடுதலை ஆனதற்கு எதிரான மனநிலையை பலர் வெளிப்படுத்த, மற்றொரு புறமோ அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறார்கள். சந்தோஷமாக நடனமாடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அவரது சக பாலிவுட் நட்சத்திரங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அவர் நல்லவர் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள். 

‘சல்மான் தற்போது ஜாமீனில் தான் விடுதலை ஆகியுள்ளார். அவரை ஒரு போர் வீரனை போல் காட்டாதீர்கள்’ என்று ஒலிக்கும் சாமானியனின் குரலை நாம் புறம்தள்ளிவிட முடியாது. அதேபோல், ‘ஒரு ரசிகனாக சல்மான் விடுதலை மகிழ்ச்சி அளித்தாலும், ஒரு இந்திய குடிமகனாக வருத்தம் அளிக்கிறது’ என்ற குரலும் அப்படிதான்.