சிறப்புக் களம்

சாதாரண தொழிலாளி டூ சீனாவின் புதிய பிரதமர்! படிப்படியாக உயர்ந்த “லி கியாங்”! யார் இவர்?

சாதாரண தொழிலாளி டூ சீனாவின் புதிய பிரதமர்! படிப்படியாக உயர்ந்த “லி கியாங்”! யார் இவர்?

webteam

நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் அந்நாட்டின் புதிய புரதமராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3வது முறையாக ஜின்பிங் அதிபராகத் தேர்வு

சீனாவில், அதிபர் ஜி ஜின்பிங், 3வது முறையாக அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சீனாவின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) மட்டுமே அரசியல் கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது) மாநாட்டில் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதாவது, அக்கட்சியிலுள்ள உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் நபர்தான் அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் அமர முடியும். அதன்படி அதிபர் ஜி ஜின்பிங் அதிகப்படியான ஒப்புதலுடன் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

உயர்நிலைப் பதவிகளில் ஜின்பிங் ஆதரவாளர்கள்

அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முடிவை அப்படியே அங்கீகரிக்கும் அந்நாட்டு நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸ், ஜி ஜின்பிங் தேர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் சீன அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜின்பிங் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோவுக்கு பிறகு 2 முறைக்கு மேல் அதிபராகியிருக்கும் முதல் தலைவர் ஜி ஜின்பிங் ஆவார்.

முன்னதாக ஜின்பிங், கடந்த 2018இல் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற சட்டத்தை நீக்கினார். இதன்மூலம், அவர் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. அவர், கடந்த 2012இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தனது போட்டியாளர்களை ஓரங்கட்டி, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைப் பதவிகளை தனது ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்பியதாக கூறப்படுகிறது.

புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லி கியாங்

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சீனாவின் பிரதமராக இருந்தவர் லி கெகியாங். இவருடைய பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு நேற்று (மார்ச் 11) கூடியது. இதில், அதிபர் ஜி ஜின்பிங், தன் நம்பிக்கைக்கு உரிய லி கியாங்கை முன்மொழிந்தார். மொத்தம் உள்ள 2,947 செயற்குழு உறுப்பினர்களில், 2,936 பேர் லி கியாங்குக்கு ஓட்டு அளித்தனர். இதையடுத்து, லி கியாங் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

யார் இந்த லி கியாங்?

சீன அதிபர் ஜின்பிங்கின் நெருங்கிய நண்பரும், அந்நாட்டின் பிரபல அரசியல்வாதியுமான லி கியாங், 1959ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெஜியாங் மாகாணத்தில் பிறந்தவர். மயூ மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன பம்ப் நிலையத்தில் சாதாரண ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய கியாங், 1983ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பிறகு, அக்கட்சியின் உயர்ந்த பதவிகளில் இடம்பிடித்தார். 2004 முதல் 2007 வரை ஜின்பிங்கின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார். 2011 - 2016 வரை, ஜெஜியாங் மாகாணக் குழுவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளராக கியாங் பணியாற்றினார்.

பொலிட்பீரோ நிலைக்குழுவில் நம்பர்-டூ 

ஷாங்காய் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் கியாங் பணியாற்றியுள்ளார். புதிய பிரதமராக கியாங்கை, தேர்வு செய்யும் பொருட்டு, அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொலிட்பீரோ நிலைக்குழுவில் நம்பர்-டூ ரோலில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் கியாங், 1976க்குப் பிறகு நேரடியாக பிரதமர் பதவிக்கு வந்த முதல் அரசியல் தலைவர் ஆவார்.

முதலீடுகளை ஈர்ப்பதில் லி கியாங் நிபுணர்

புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் லி கியாங், ஜிஜியாங் மாகாணத்தின் நிர்வாகத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். மேலும் அதிபர் ஜின்பிங் உடனான வெளிநாட்டு பயணங்களில், தவிர்க்க முடியாத நபராக உடன் சென்றவர்களில் லி கியாங் முக்கியமானவர். தனியார் நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் லி கியாங் நிபுணர் எனக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், கொரோனா காலத்தில் சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, மக்களை துன்புறுத்தியதாக இவர்மீது குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது. என்றாலும், கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின் கடுமையாகப் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க லி கியாங் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பார் எனச் சொல்லப்படுகிறது.

சீனாவில் பிரதமரை, ‘பிரீமியர்’ என்று அழைப்பார்கள். சீனாவில் அதிபருக்கு அடுத்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பதவி பிரீமியர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பத்து ஆண்டுகளாக, தன்னுடைய ஆட்சிக் காலத்தில், நாட்டின் முக்கிய பதவிகளில் தனது நெருங்கிய நண்பர்களையே அதிபர் ஜி ஜின்பிங் நியமித்தார் வருகிறார் என்பதும், அதில் கியாங்கும் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்