சிறப்புக் களம்

அதீத நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல்... கனடாவில் மீண்டும் பிரதமர் ஆவாரா ஜஸ்டின் ட்ரூடோ?

webteam

கனடாவில் இன்னும் 7 நாள்களில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோவே ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், வெளிவரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவும் கனடா தேர்தல் முடிவை வேறுவிதமாக மாற்றுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இது தொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகம் அறிந்த வெளிநாட்டுத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவில் இருக்கும் இந்தியர்கள் மீதான மதிப்பு, குறிப்பாக தமிழ்ப் பண்டிகைகளைக் கொண்டாடுவது போன்றவை ஜஸ்டின் ட்ரூடோ மீதான புகழை இந்தியாவில் அதிகரித்தது. இதனிடையே, கடந்த 6 ஆண்டுகளாக கனடா பிரதமராக பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது மூன்றாவது முறையாக பொதுத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.

வழக்கமாக, கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடைபெறும். இதில் கடந்த இரண்டு முறையாக தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறார் ட்ரூடோ. 2015-ல் தனது லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக கனடா நாட்டின் இளம்வயது பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்றார். அதன்பின் 2019 தேர்தலில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடம் கிடைக்காமல் போனாலும் சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்று பிரதமரானார்.

கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இரண்டாம் முறை ஆட்சியை நடத்தி வந்தவர், தனது ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், சமீபத்தில் தனது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இன்னும் 7 நாள்களில் அதாவது இம்மாதம் 20-ஆம் தேதி கனடா நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. வழக்கம்போல லிபரல் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஜஸ்டின் ட்ரூடோவும், எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எரின் ஓ டூல் என்பவரும் இம்முறை போட்டியிடுகின்றனர்.

முன்கூட்டியே ஏன் தேர்தல்? உலகை உலுக்கிய கொரோனா தொற்று கனடாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதோடு, விரைவாக அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டது. லாக்டவுன் விதிமுறைகள், தடுப்பூசி என கொரோனா விவகாரத்தில் ஜஸ்டின் ட்ரூடோ அரசு நல்ல பெயரை மக்கள் மத்தியில் பெற்றது. தற்போது கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் இருக்கும் கனடா வெகுவாக கொரோனா பாதிப்பை குறைத்துள்ளது.

எனினும், ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலம் முடிவடையும் தருணத்தில், அதாவது இன்னும் இரண்டு ஆண்டுகளில் கொரோனா நான்காம் அலை ஏற்படும் என கருதப்படுகிறது. அப்போது பாதிப்பு உச்சத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அந்த நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது என்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்துகிறோம் என்கிறது ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தரப்பு. இதற்கேற்ப பேசியுள்ள ட்ரூடோ, "இரண்டாம் உலகப் போரைப் போல தொற்றுநோய் கனடாவை மாற்றியுள்ளது" என்று கூறியுள்ளார்.

உண்மையான காரணம் என்ன? கொரோனா தொற்றுநோய் மட்டும்தான் தற்போதைய தேர்தலுக்கு காரணமா என்றால், 'இல்லை' என திட்டவட்டமாக மறுக்கிறார்கள் கனடா அரசியல் நோக்கர்கள். கடந்த முறை கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ, தனது கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஒவ்வொரு முடிவையும் எடுக்க கூட்டணி கட்சிகளைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலைமையில் உள்ளார். இது கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. இதனை சரிசெய்ய தேர்தலே ஒரே முடிவு என்று களமிறங்கியுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ தைரியமாக தேர்தலுக்குச் செல்ல காரணம், அவரின் அரசு எடுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கையும் தடுப்பூசி திட்டங்களும், அதற்கு கிடைத்த மக்கள் வரவேற்பும்தான். இந்த வரவேற்பை தனக்கான ஆதரவாக மாற்ற தீர்மானித்து தேர்தல் களம் காண்கிறார். மேலும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் எரின் ஓ டூலுக்கு எதிராக மக்கள் அதிருப்தி நிலவுவதாக ட்ரூடோவின் எண்ணமும் தேர்தலுக்கு வித்திட்டது.

ட்ரூடோ வெற்றிபெறுவாரா? மக்கள் ஆதரவு தனக்கு இருக்கும் என்ற தனது கணிப்பின் விளைவாக தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ. எதிர்பார்த்தபடி மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறதா என்றால், 'இல்லை' என்றே பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் சொல்லும் யதார்த்தம். கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ட்ரூடோ பின்தங்குவதுடன், எரின் ஓ டூல் முன்னிலை வகிக்கிறார். இந்த வாரம் வெளியான ஆங்கஸ் ரீட் கருத்துக்கணிப்பு, மிக மூத்த மற்றும் அதேநேரம் இளைய வயது வாக்காளர்களிடையேயும், ட்ரூடோவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பெண்களிடையேயும் அவருக்கு உண்டான புகழ் குறைந்து வருவதாக சுட்டிக்காட்டி இருக்கிறது.

அனைத்து கருத்துக்கணிப்புகளிலும், இந்தமுறை தேர்தல் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மிகவும் சிரமத்தை கொடுக்கும், அவர் தோல்வி அடையவே நிறைய வாய்ப்பு இருப்பதாக சுட்டி இருக்கின்றன. இந்த நிலை ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக ஏற்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக, கொரோனா சுகாதாரப் பேரிடரை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற ஜஸ்டின் ட்ரூடோ முயற்சிப்பதை மக்கள் விரும்பவில்லை என்பது. இதற்கேற்ப இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்தக்கூடாது என்று 60 சதவீதம் மக்கள் கருத்துக்கணிப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனை ஒருவழியாக மக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்ததாலும், ஏன் தேர்தல் என்பதை தனது பிரசாரங்கள் மூலமாக மக்கள் மத்தியில் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டுசேர்க்க சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். இது அவருக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றால் எழுந்த பணவீக்கம், நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு போன்றவற்றை பற்றி ஜஸ்டின் ட்ரூடோ பெரிதாக கவலைப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் தரப்பிலான பிரசாரமும் அவருக்கு எதிராக திரும்புவதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் சில இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளன. இந்தப் போராட்டத்தின் விளைவாக அவர் செல்லும் இடங்களில் கல்வீச்சு போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளது கனடா தேர்தல் களத்தை, குறிப்பாக ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக பதற்ற நிலையிலேயே வைத்துள்ளது.

- மலையரசு