சிறப்புக் களம்

“கனவுகளுக்கு வண்ணம் தீட்டிய பெட்டி” – உலக தொலைக்காட்சி தினம் இன்று

Veeramani

ஐக்கிய நாடுகள் சபையால் 1996 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 21ஆம் தேதி உலகத் தொலைக்காட்சி தினமாக அங்கீகரிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சமூகத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

90 களுக்கு வண்ணம் சேர்த்த தொலைக்காட்சி பெட்டிகள்:

நமது ஒட்டுமொத்த வாழ்விலும் நிரம்பி வழிவது தொலைக்காட்சிகளின் பிம்பங்கள்தான். செய்திகள், பொழுதுபோக்கு, திரைப்படங்கள், கல்வி, இசை, விளையாட்டு என எல்லாமும் தொலைக்காட்சிகளின் வழியேதான் நம்மை அடைகின்றன. 90 களின் இறுதியில்தான் தமிழகத்தின் கிராமங்களையெல்லாம் தொலைக்காட்சிகள் தொட ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில் தூர்தர்சன் அலைவரிசை மட்டும்தான், அதற்கும் ஆண்ட்டனாவை அங்குமிங்குமாக திருப்பியபடியே இருக்க வேண்டும். ஒளியும் ஒலியும், சக்திமான், மகாபாரதம், ராமாயணம் என தூர்தர்சனின் ஆஸ்தான தொடர்களும், சச்சின் டெண்டுல்கர், அசார், ஜடேஜா, கங்குலி, டிராவிட் போன்ற வீரர்கள் ஜாலம் செய்யும் கிரிக்கெட்டும் இன்னமும் அந்த காலத்தை கடந்தவர்களால் மறக்கவே முடியாது.

இப்போதைய பொது குடிநீர் தொட்டிகளைப் போல, அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரின் மையத்திலும் பொது தொலைக்காட்சி பெட்டியும், அதற்கு என பிரத்யேகமான அறையும், அதனை இயக்குவதற்கு ஒரு ஆபரேட்டரும் இருப்பார்கள். அவர்கள்தான் மாலைப்பொழுதுகளில் தூர்தர்சன் மட்டுமே ஒளிபரப்பாகும் இந்த தொலைக்காட்சியை ஆன் செய்வார்கள், செய்திகள், பொழுதுபோக்கு, விளையாட்டு என அனைத்திற்குமே அந்த தொலைக்காட்சிதான். பொது தொலைக்காட்சி பெட்டி அறையின் முன்னே மாலைப்பொழுதுகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படித்தான் தமிழகத்தில், 90 களில் தொலைக்காட்சி அறிமுகமானது.

தமிழகமும், தொலைக்காட்சிகளும்:

கதவுகள் வைத்த கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி, பெட்டி போன்ற தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சிகள்தான் ஆரம்பம். சாலிடர், பிபிஎல் போன்ற நிறுவனங்கள்தான் அப்போது பிரபலமான நிறுவனங்கள். 2000 ஆண்டிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் ஆக்கிரமிக்க தொடங்கின. அப்போது தனியார் தொலைக்காட்சிகளும், கேபிள்களும் கிராமங்களை எட்ட தொடங்கி விட்டன. 2006 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியது. அது அனைத்து வீடுகளுக்கும் தொலைக்காட்சி பெட்டியை கொண்டு சேர்த்தது. பின்னர் பிளாஸ்மா டிவி, எல்சிடி டிவி, எல்இடி என பலவகை தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. ஆண்டனா, கேபிள் தொடங்கி தற்போது டிடிஎச்கள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொலைக்காட்சி சேவைகளை வழங்குகிறது.

தூர்தர்சன் பொதிகை மட்டுமே என இருந்த அலைவரிசை, தற்போது நூற்றுக்கணக்காக மாறிவிட்டன. தமிழிலும் உலகத்தரத்தில் 24*7 செய்தி தொலைக்காட்சிகள், இசை, பொழுதுபோக்கு, திரைப்படங்கள், காமெடி, விளையாட்டு, குழந்தைகள் உள்ளிட்ட பல வகை தொலைக்காட்சிகள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. டிஜிட்டல் மீடியாக்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும்கூட தொலைக்காட்சிகளுக்கான மவுசு இன்னும் குறையவே இல்லை. மக்களின் நம்பிக்கைக்குரிய தகவல் சாதனமாக தொலைக்காட்சிகள் இருப்பதே அதற்கான காரணம்.  இந்தியாவில் உள்ள சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் 90 முதல் 95 சதவீத குடும்பங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன.

தொலைக்காட்சியும், புள்ளி விவரங்களும்:

ஐக்கிய நாடுகள் சபையால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டுக்குள் உலகில் தொலைக்காட்சியைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை தோராயமாக 1.73 பில்லியனாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2021 நிலவரப்படி, நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 214 மில்லியனாக உள்ளது. எனவே டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் இயங்குதளங்கள் தொலைக்காட்சியின் எண்ணிக்கையை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவின் தொலைக்காட்சி கண்காணிப்பு அமைப்பான பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சிலின் (BARC) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சுமார் 210 மில்லியன் இந்திய குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருக்கிறார்கள், 2018 இல் 197 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 6.9% அதிகரித்துள்ளது. டிவி பார்ப்பவர்கள் 2018 இல் 836 மில்லியனில் இருந்தது, தற்போது 6.7% அதிகரித்து 892 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொலைக்காட்சியின் வரலாறு:

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஃபிலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வொர்த் II என்ற 21 வயது இளைஞனால் அந்த கால தொலைக்காட்சி வடிவமைக்கப்பட்டது, ஆனால் 1922இல்தான் ஜான் லோகி பேர்ட் என்ற ஸ்காட்டிஸ் பொறியாளர் முழுமையான தொலைக்காட்சியை வடிவமைத்தார். 1920 களுக்கு பின்னர் ஆய்வு ரீதியாக உலகின் பல இடங்களில் தொலைக்காட்சிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அதன்பின்னர் 1940 களில் உலகப்போர் செய்திகள் பலவற்றை தெரிந்துகொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளில் தொலைக்காட்சிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1950 களின் பெரும்பாலான உலக நாடுகளில் தொலைக்காட்சிகள் அறிமுகமானது.

இந்தியாவில் 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று ஒரு பரிசோதனை முயற்சியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது. அப்போது ஒரு வாரத்திற்கு இரண்டு மணிநேரம் மட்டுமே தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பானது. ஆரம்பத்தில் தொலைக்காட்சிகள் அகில இந்திய வானொலி நிலையத்தின் AIR (All India Radio) ஒரு பிரிவாகவே இருந்தன.

இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியான தினசரி ஒளிபரப்பு 1965 இல் தொடங்கியது, அப்போது தினசரி ஒரு மணிநேர சேவை தொடங்கியது.1970களில் நாட்டின் பிற பகுதிகளிலும் தொலைக்காட்சி மையங்கள் திறக்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு அதுவரை அகில இந்திய வானொலியின் தொலைக்காட்சிப் பிரிவாக இருந்த தூர்தர்ஷன் தனித் துறையாக மாறியது. அதன்பின்னர்  1982 இல், தூர்தர்ஷன் INSAT LA செயற்கைக்கோளைப் பயன்படுத்தி 9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பியது. அதன்பிறகு தொலைக்காட்சி வசதிகள் வேகமாக விரிவடைந்தன. நவம்பர் 19, 1984 இல், இரண்டாவது சேனல் புது தில்லியில் தொடங்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 1, 1993 இல் மெட்ரோ பொழுதுபோக்கு சேனல் தொடங்கப்பட்டது. 1997 இல், பிரசார் பாரதி என்ற சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டது.

சிஎன்என் டிவி வளைகுடா போரை ஒளிபரப்பிய பிறகு 1990களில் இந்தியாவில் தனியார் சேனல்களின் வருகை தொடங்கியது. 1995 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் " தொலைக்காட்சி ஒளிபரப்பு இந்திய அரசின் ஏகபோக உரிமை இல்லை" என்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.  அதன்பின்னர் Star, Zee, Aaj-Tak, CNN, BBC, Discovery, sun network போன்ற தனியார் தொலைக்காட்சி சேனல்கள் தொடங்கப்பட்டன.

தற்போதைய தரவுகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு டிவி பார்ப்பதில் செலவிடும் 3 மணி 46 நிமிடங்களாக உள்ளது. இதில் 77 சதவீதம் பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட சேனல்கள் பார்க்கவே செலவிடுகிறார்கள். இந்தியாவில் 43 சதவீத தொலைக்காட்சி சேனல்கள் செய்தி சேனல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பொதுமுடக்கத்தின் போது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகரித்தனர்.