மாதத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டில் தங்கியிருந்து தேன் மற்றும் வன மகசூல் பொருட்களை சேகரித்து வந்து ஊர்ப்புறங்களில் விற்று வாழ்கின்றனர் பளியர் பழங்குடி மக்கள்.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருக்கு உட்பட்ட தலையணை, கோட்டமலை, கருப்பாநதி ஆகிய வனப்பகுதிகளில் பளியர் எனும் பழங்குடி மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இவர்கள் 1980ஆம் ஆண்டிற்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குகைகள், பாறை இடுக்குகள், மரத்தின் மேல் அமைந்த பரண், ஓலைக் குடிசைகளில் நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். நாகரிக வளர்ச்சியை நாடு அடைந்தபோதிலும், அதிலிருந்து விலகிய இம்மக்கள் காடுகளில் தனிமைப்பட்டு, உணவு தேடும் நிலையிலே இருந்திருக்கிறார்கள்.
1980க்கு பிறகு காடுகள் பாதுகாப்புச் சட்டம், மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் அமலாகின. இதையடுத்து மலைப்பகுதியிலிருந்த பழங்குடி மக்களை மீட்டு, ஊர்ப்பகுதிகளுக்கு அருகாமையில் இருந்த மலையோர பகுதிகளில் வீடுகள் கட்டி குடியமர்த்தியது அரசு. இவர்கள் மலைத்தேன், வன மகசூல் சேகரிப்பது தவிர எந்தத் தொழிலிலும் பழக்கப்படாமல் வாழ்ந்தவர்கள். இன்றும் அதேதொழில்களை செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் இன்று வரையிலும் வன வாழ்க்கையிலிருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. இன்றும் இவர்கள் வாழ்வாதாரத்திற்காக வனத்திற்குள் தான் செல்ல வேண்டும். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டில் தங்கியிருந்து தேன் மற்றும் சாம்பிராணி, ஈச்ச மட்டை, தேற்றான் கொட்டை உள்ளிட்ட வன மகசூல் பொருட்களை சேகரித்து வந்து ஊர்ப்புறங்களில் விற்று வாழ்கின்றனர். இதில் கிடைக்கும் சொற்பத் தொகைதான் அவர்களது வருமானம். இவர்களுள் ஒருசிலர் மட்டுமே ஆடு வளர்ப்பதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின் கூறுகையில், ‘’பளியர் பழங்குடி மக்கள் மலைப்பகுதியில் வாழ்ந்துவந்தபோது வெளியுலகுடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இப்போது அரசு மலையடிவாரத்தில் வீடுகள் கட்டி குடியமர்த்தியதன் மூலம் இவர்களின் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லத் துவங்கியுள்ளனர். சிலர் கல்லூரிப் படிப்பும் முடித்துள்ளனர். தலையணை பகுதியிலேயே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கல்வியறிவற்ற மக்கள் காட்டையே நம்பி வாழ்கின்றனர். ஆனால் அவர்களின் குழந்தைகள் இப்போது படிக்க செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கல்வியறிவு வளர்ச்சி தென்பட்டுள்ளது. வரும் காலங்களில் இங்கு கல்வியறிவு விகிதம் அதிகரித்து பளியர் பழங்குடி மக்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள் என்பது உறுதி’’ என்கிறார் அவர்.
பளியர் பழங்குடிகளின் கோரிக்கைபளியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த உமா கூறுகையில், ‘’தலையணை பளியர் குடியிருப்பில் 36 குடும்பங்கள் உள்ளன. ஆனால் 15 குடும்பங்களுக்குத்தான் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு வீடு கட்டித்தர வேண்டும்’’ என்கிறார் அவர்.
பளியர் ஊர்த் தலைவர் பால் தினகரன் கூறுகையில், ‘’10 வருடங்களுக்கு முன்புவரை மலைப்பகுதியில் வசித்து வந்தோம். பின்னர் அரசாங்கம் மலையடிவாரத்தில் 15 தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுத்து இங்கே குடியமர்த்தியது. ஆனால் இந்த 15 வீடுகளுக்கும் எங்களிடம் பட்டாக்கள் இல்லை. வீடு கட்டிக்கொண்டிருக்கும் போதே பணமில்லை எனக்கூறி வங்கியில் அடமானம் வைத்துவிட்டனர். இப்போது இந்த 15 வீட்டுப் பட்டாக்களும் வங்கியில்தான் உள்ளது. பணத்தை செலுத்தக்கூறி வங்கியிலிருந்து அழுத்தம் கொடுகிறார்கள். நீதிமன்றம், வழக்கு என அலைக்கழிக்கிறார்கள். எனவே எங்களது வீட்டுப் பட்டாக்களை அரசு மீட்டுத்தர வேண்டும். பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் பள்ளி செல்லும் எங்கள் பிள்ளைகளுக்கு வசதியாக இருக்கும்’’ என்கிறார் அவர்.
இதையும் படிக்கலாம்: சீமை கருவேலத்தால் விஷமாக மாறிவிடும் நிலத்தடி நீர் - பின்னணி, பாதிப்பு குறித்து ஓர் அலசல்