சிறப்புக் களம்

தாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்கள் மீண்டது எப்படி? திக்..திக்.. நொடிகள்

தாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்கள் மீண்டது எப்படி? திக்..திக்.. நொடிகள்

rajakannan

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே எப்பொழுதும் ஒரு போராட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மனிதன் செய்யும் சில செயல்களுக்காக இயற்கை பாதிக்கப்படுவதும், இயற்கையின் சீற்றத்தால், பேரிடரால் மனிதர்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இயற்கை சீற்றங்கள் வரும் போதுதான், மனிதன் தன்னுடைய அறிவை பயன்படுத்தி, அதில் இருந்து தன்னை முடிந்த அளவிற்கு காப்பாற்றிக் கொள்கிறேன். இப்படியான சீற்றங்கள் வரும் என்ற அனுபவத்தில் இருந்து அதற்கான தொழில்நுட்பங்களையும் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார். 

இப்படியான ஒரு சம்பவம்தான் தாய்லாந்து நாட்டில் அரங்கேறியிருக்கிறது. திடீரென ஏற்பட்ட இயற்கை சீற்றத்தினால் குகைக்குள் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்களும், ஒரு பயிற்சியாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டார்கள். சிறு வயது பிள்ளைகள் 4 கிலோமீட்டர் தூரமுள்ள குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள் என்ற செய்தி வெளியானதும் எல்லோரையும் அது பதற வைத்துவிட்டது. சிக்கிக் கொண்ட சிறுவர்களுக்காக தாய்லாந்து தாண்டி உலகம் முழுவதும் பல இதயங்கள் துடித்தன. 10 கி.மீ. நீளமுள்ள அந்த தாம் லுவாங் மலைக்குகைக்குள் அந்தச் சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ? எந்த நிலையில் இருக்கிறார்களோ? என்ற பல சந்தேகங்கள் எழுந்தன.

எங்கிருந்து தொடங்கியது 

ஒரு சாகச பயணம் செய்யப் போகிறோம் என்ற கனவோடு, உற்சாகத்தோடு கால்பந்து விளையாட்டு சிறுவர்கள் 12 பேர் அந்தக் குகைக்குள் ட்ரெக்கிங் சென்றிருக்கிறார்கள். அவர்களுடன் பயிற்சியாளரும் சென்றிருக்கிறார். கொட்டித் தீர்த்த கனமழையும், அதனால் ஏற்பட்ட காட்டு வெள்ளமும் இப்படியொரு நிலைக்கு தங்களை கொண்டு செல்லும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். ஜூன் 23ம் தேதிதான் அவர்கள் உள்ளே சென்றார்கள். வெளியே சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றவர்கள் வெளியே வர முடியாதபடி சிக்கிக் கொண்டார்கள். குகையில் ஒரு முனையில் வெள்ளம் கரைபுரண்டு உள்ளே ஓட, மறு முனையில் செல்ல வழியில்லாமல் அடைத்துக் கொண்டது. குகைக்குள்ளே தண்ணீர் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் பின்னோக்கி சென்று கொண்டே இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாதுகாப்பாக மேட்டுப் பகுதியில் நின்று கொண்டார்கள். 

நீண்ட நேரமாக சைக்கிள் வெளியே நிற்பதை கண்ட பின்னர்தான், குகைக்குள் ஆட்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் தாய்லாந்து அரசுக்கும், அதன் பின்னர் சர்வதேச அளவிலும் கவனத்திற்கு சென்றிருக்கிறது. குகைக்குள் அவர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் தான் தெரிந்தது. ஆனால் குகைக்குள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்தக் குகை நீள வாக்கில் இருந்தாலும், ஆழமான மேடு பள்ளங்களை கொண்டது. நிறைய இடங்களில் ஆழமான பள்ளமும், சில இடங்களில் உள்ளே நுழைய குறுகலான பாதையும் மட்டுமே இருக்கும். 

தாய்லாந்தில் குவிந்த மீட்புக் குழு

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குகை மீட்புக் குழுவினர் தாய்லாந்தில் குவிந்தனர். குகைக்குள் சிக்கியிருப்பவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே 9 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 9 நாட்களில் உள்ளே இருப்பவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்ற அச்சம் பலருக்கும் வந்திருக்கும். ஒரு வழியாக 4 கி.மீ. தூரத்தில் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. ஆனால், எப்படி மீட்பது என்பது மீட்புக் குழுவினருக்கு பிடிபடவேயில்லை. ஏனெனில் அந்தப் பாதை அவ்வளவு கடந்து செல்ல கடினமானதாக இருந்திருக்கிறது. முதலில் குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதில் பெரிதாக பலன் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும், மீட்புப் பணியின் போது நிறைய இடங்களில் நடந்தே வருவதற்கு இது உதவியது. 

இதனையடுத்து, நீரில் நீந்திச் சென்று மீட்கும் திறன் கொண்ட வீரர்களை உள்ளே அனுப்பலாம் என்று முடிவு செய்தார்கள். முதற்கட்டமாக உள்ளே செல்லும் பாதையை தாயார் செய்யும் பணிகளில் மும்முரமாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டார்கள். துளைகள் போட்டார்கள், கயிறு கட்டும் பணிகள் என விறுவிறுப்பாக எல்லாம் நடந்தது. ஒருவழியாக சிறுவர்கள் இருக்கும் இடத்திற்கு சில மீட்புக் குழுவினர் சென்றார்கள். மீட்புக் குழுவினரை பார்த்த பிறகு தான் உள்ளிருப்பவர்களுக்கு உயிரே வந்திருக்கும். பின்னர், முதற்கட்டமாக உள்ளே இருப்பவர்களுக்கு தேவையான உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டார்கள். 

யாருமே எதிர்பார்க்காத அந்தச் சம்பவம்

இங்குதான் யாருமே எதிர்பார்க்காத அந்தச் சம்பவம் ஜூலை 6ம் தேதி நடந்தது. உள்ளே செல்லும் பாதையை அமைக்கு பணியில் ஈடுபட்ட வீரர் உயிரிழந்தார் என்ற செய்தி எல்லோரையும் திகைக்க வைத்துவிட்டது. அந்த ஒரு உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற இந்த முழு மீட்புப் பணியும் ஒரு துளி துன்பமில்லாமல் முடிந்திருக்கும். ஆனால், சமன் குனன் என்ற வீரர் ஆக்ஸிஜன் பிரச்னையால் உயிரை இழந்துவிட்டார்கள். தாய்லாந்து நாடே அவரது உயிரிழப்புக்கு துக்கம் அனுசரித்தது. அவருக்கு உரிய மரியாதையும் செலுத்தினார்கள்.

இந்த உயிரழப்பால் மீட்புப் பணி மேலும் பாதுகாப்பான முறையை திட்டமிட்டது. இருக்கும் இடம் தெரிந்த அடுத்த 5 நாட்களுக்கு பிறகு ஜூலை 8ம் தேதி தான் மீட்புப் பணியை தொடங்கினார்கள். மீட்புப் பணி தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு மணி நேரமும் திக்..திக்..திக் தான். ஏனெனில், தண்ணீர் வடிந்து நான்கு மாதங்களுக்கு பிறகு தான் உள்ளிருப்பவர்களை மீட்க முடியும். அதுவரை அவர்கள் உள்ளேதான் இருக்க முடியும் என்று தாய்லாந்து ராணுவம் சொன்னதும் எல்லோருக்கும் தூக்கிவாறிப் போட்டது. எப்படி அத்தனை நாட்கள் உள்ளே இருக்க முடியும். அத்தோடுவிட்டார்களா? மேற்கொண்டு மழை வந்தால் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவுதான் என்றும் கூறினார்கள். 

                                                                                                                                                                                                                         photo  courtesy - standard

இத்தனையும் தாண்டி மிகவும் ஆபத்தான அந்தக் குகைப் பாதையில் எப்படி உள்ளே சென்று மீட்பது என்ற திட்டத்தை வகுத்தார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியுடன் கயிறு மூலம் உள்ளே சென்றார்கள். உள்ளே மீட்புக் குழு வீரர்கள் சென்றது முதல் எப்படியும் சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு விட வேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தனை செய்தார்கள். 

ஆக்ஸிஜன் சிலிண்டருடன்...

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வீரர்கள் உள்ளே சென்றார்கள். ஒரு சிறுவருக்கு இரண்டு வீரர் என்று திட்டமிட்டு அழைத்து வந்தார்கள். ஒரு வீரர் முன்னோக்கி செல்ல அவரை பிடித்தவாறு சிறுவன் பின்னே வருவான். சிறுவனின் பின்னால் அவனை பிடித்தவாறு ஒரு வீரர் வருவார். மாணவர்களுக்கு ஆக்ஸிஜன் முகமூடி அணிந்து வந்தார்கள். குறிப்பாக சிக்கலான ஒரு இடத்தில் மட்டும் சிலிண்டரும், வீரரும் ஒரே நேரத்தில் நுழைந்து வரமுடியாது. அதனால், அந்தப் பகுதியில் மட்டும் சிலிண்டரை கழட்டி விட்டு, அதனை மேலே தூக்கியவாறு சென்றார்கள். 

முதற்கட்டமாக 4 சிறுவர்கள், அப்புறம் நான்கு சிறுவர்கள் என படிப்படியாக நாள் தோறும் மீட்கப்பட்டார்கள். இன்று மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் மீட்கப்பட்டுள்ளார். முதல்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி வெளியானதுமே எல்லோருக்கும் நம்பிக்கை பிறந்தது. அந்தச் சிறுவர்களின் உறவினர்கள், அவர்களது பள்ளி நண்பர்கள் மத்தியில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், சிறுவர்களை பார்க்க உறவினர்களுக்கு அனுமதியில்லை. மீட்கப்பட்ட உடன் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுக்கு சில முதலுதவிகள் தேவைப்பட்டதாலும், ஓய்வு தேவைப்பட்டதால் இவ்வாறு செய்தார்கள். 

மெடிக்கல் மிராக்கல் என்று சொல்வார்களே அதேபோல், இது ஒரு அதிசயம் தான். ஏனென்றால் மிகச்சிறந்த வல்லுநர்களே இந்தப் பாதை மிகவும் கடினமானதாக உள்ளது என்று கூறினார்கள். உலகையே பதற வைத்த அந்தக் குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இனி அங்கே யாரும் செல்ல  அனுமதி இல்லை.