சிறப்புக் களம்

பிரைவசிக்கு மரியாதை: நெட்டிசன்கள் 'பிரேவ்' பிரவுசருக்கு மாறுவதற்கு 10 காரணங்கள்

பிரைவசிக்கு மரியாதை: நெட்டிசன்கள் 'பிரேவ்' பிரவுசருக்கு மாறுவதற்கு 10 காரணங்கள்

நிவேதா ஜெகராஜா

இணையத்தில் எப்போதுமே மாற்று சேவைகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. அதிகம் நாடப்படும் அல்லது பிரலமாக இருக்கும் சேவைகளை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை; பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ற சேவைகளை தேர்வு செய்வதே சரியானது. அந்த வகையில், 'பிரவுசர்' பரப்பில் 'கூகுள் குரோம்' மாற்றாக முன்வைக்கப்படும் 'பிரேவ்' (brave) பிரவுசர் பற்றி அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

'குரோம்' போலவே வேகமான செயல்பாட்டை கொண்டிருப்பதோடு, குரோமில் இல்லாத முக்கிய அம்சமான 'பிரைவசி' பாதுகாப்பைக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் 'பிரேவ்', இணைய உலகில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

'பிரேவ்' பிரவுசருக்கு மாறுவது பொருத்தமாக இருக்கும் என கருதப்படும் நிலையில், முன்னணி தொழில்நுட்ப செய்தித் தளமான 'மேக்யூஸாப்', 'பிரேவ்' பிரவுசர் பயனாளிகள் மத்தியில் பிரபலமாகி வருவதற்கான 10 முக்கிய காரணங்களை தொகுத்தளித்துள்ளது.

இந்தக் காரணங்களை பார்ப்பதற்கு முன் 'பிரேவ்' பிரவுசர் பற்றி அடிப்படையான சில குறிப்புகளை பார்க்கலாம். 'பிரேவ்' பிரவுசர் முதல் பார்வைக்கு குரோம் போலவே தோன்றலாம். குரோம் போலவே, குரோமியம் தொகுப்பை அடிப்படையாக கொண்டு பிரேவ் பிரேவ் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் ஓபன் சோர்ஸ் தன்மை கொண்டது. எனினும், பயனாளிகளின் பிரைவசிக்கு மதிப்பு கொடுப்பது பிரேவின் சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைகிறது.

பெரிய நிறுவனங்களுக்கு குட்பை: குரோமுக்கு மாற்றாக பிரேவ் பிரவுசரை பலரும் நாடுவதற்கு முக்கிய காரணம், இணைய உலகில் 'பிக் டெக்' என சொல்லப்படும் கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதுதான். இந்த ஆதிக்கம் புதுமையாக்கம் மற்றும் போட்டித்தன்மைக்கு எதிரானது என கருதப்படுவதால், சுதந்திரத் தன்மையை விரும்புகிறவர்கள், மாற்று சேவைகளை நாடுகின்றனர். அந்த வகையில் 'பிரேவ்' பிரவுசர் விரும்பப்படுகிறது. குரோமை பயன்படுத்துவது என்பது கூகுள் சாம்ராஜ்யத்தின் அனைத்து விதிகளுக்கும் அடிபணிந்து போவதாக கருதப்படுவதோடு, பயனாளிகளுக்கான வாய்ப்புகளும் குறைகின்றன.

பிரைவசிக்கு மரியாதை: கூகுள் உள்ளிட்ட பிக் டெக் நிறுவனங்கள் மீது சொல்லப்படும் மிகப்பெரிய புகார், அவை பயனாளிகள் பிரைவசியை மதிக்காமல், வருவாய் நோக்கில் அவர்களின் தரவுகளை அறுவடை செய்கின்றன என்பதுதான். குரோம் பிரவுசரில் பயனாளிகள் நடவடிக்கை பலவிதமாக பின் தொடரப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தப் போக்கை விரும்பாதவர்களுக்கு 'பிரேவ்' பிரவுசர் ஏற்றது. பயனாளிகள் செயல்பாடு எதுவுமே பின்தொடரப்படுவதில்லை. அத்துடன், மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் அவை பகிரப்படுவதில்லை என பிரேவ் பிரவுசர் உறுதி அளிக்கிறது.

வேகம்: குரோம் வேகமான செயல்பாட்டிற்காக அறியப்பட்டாலும், கம்ப்யூட்டர் ஆற்றலை உறிஞ்சக்கூடியதாக புகார் இருக்கிறது. பிரேவ் பிரவுசர் வளங்களை உறிஞ்சாமலே வேகமான பிரவுசிங் அனுபவத்தை அளிக்கிறது என்கின்றனர்.

ஓபன் சோர்ஸ்: குரோமியம் ஓபன் சோர்சிலானது என்றாலும் அதைக் கொண்டு உருவாக்கப்பட்ட குரோம் மூடப்பட்ட பிரவுசராக இருக்கிறது. ஆனால், பிரேவ் அப்படியில்லை, அது ஓபன் சோர்ஸ் தன்மை கொண்டுள்ளதால் அதன் நிரலை யார் வேண்டுமானால் சோதனை செய்யலாம். இதன் காரணமாக பயனாளிகள் புதிய அம்சங்களையும் சேர்க்கலாம்.

தணிக்கை இல்லை: பொதுவாக இணையத்தில் (வலை) பயனாளிகள் அணுகும் வளங்கள் மையமாக்கப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன. 'பிரேவ்' இதற்கு மாறாக மையத்தில் இருந்து விலக்கப்பட்ட முறையில் சேவையை அணுக வழி செய்வதால், தணிக்கை பிரச்னை கிடையாது.

டிராக்கிங் இல்லை: பிரவுசர்கள் மூலம் பல விதங்களில் பயனாளிகள் இணைய செயல்பாட்டை பின்தொடர்ந்து தகவல்களை சேகரிக்கின்றன. இவற்றின் மூலம் மேம்பட்ட சேவை சாத்தியமானாலும், பிரைவசி நோக்கில் நிறைய வில்லங்கம் இருக்கிறது. பிரேவ், பின்தொடர்தலை தடுப்பதற்கான வழிகளை கொண்டுள்ளது. குரோமில் இதற்கு தனியே நீட்டிப்புச் சேவைகளை நாட வேண்டும்.

பிரேவ் புள்ளிகள்: பிரேவ் பிரவுசர், அதன் பயனாளிகளுக்கு பலவிதமான புள்ளிகளை பரிசளித்து ஊக்குவிக்கிறது. (கிரிப்டோ பரிவர்த்தனை தொடர்பான பரிசளிப்பும் இருப்பதால், விஷயம் அறிந்தே இதை பயன்படுத்த வேண்டும்).

டார் வசதி: இணையத்தில் பிரைவசியை நாட பயன்படுத்தப்படும் டார் நெட்வொர்க் சேவையை பிரேவ் மூலம் எளிதாக பயன்படுத்தலாம்.

ஃபயர்வால்: பிரவுசர் மூலமாக, இணைய பாதுகாப்பிற்கான பயர்வால் அரண் மற்றும் வி,பி.என் வசதியை 'பிரேவ்' வழங்குகிறது.

பிரேவ் சர்ச்: பிரேவ் பிரவுசர் பிரைவசி அம்சம் கொண்ட பிரேவ் சர்ச் தேடியந்திரத்தையும் கொண்டுள்ளது. இந்த தேடியந்திரத்தை பிரேவ் பிரவுர்சில் அணுகலாம். பிரேவ் மொபைல் செயலியும் உள்ளது. மொபைலில் பயன்படுத்தும்போது, 'பிரேவ்' சர்ச் தவிர கூகுளுக்கு பிற மாற்று தேடியந்திரங்களையும் பட்டியலிட்டு தேர்வு செய்துகொள்ள வழி செய்கிறது.

பிரேவ் பிரவுசர் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

- சைபர்சிம்மன்