சிறப்புக் களம்

உச்சம் தொட்ட வேகத்தில் வீழ்ச்சி... மீண்டும் ரிஸ்க் எடுக்கத் தயாராகும் நடிகர் சுனில்!

நிவேதா ஜெகராஜா

சினிமா பலருக்கு ஏற்றத்தை கொடுத்திருக்கிறது. அதேநேரத்தில், புகழின் உச்சியில் இருந்தவர்களை காணாமல் போகவும் செய்திருக்கிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணம் ஆந்திராவின் ஜெகபதி பாபு. ஒருகாலத்தில் எல்லோரும் கொண்டாடப்படும் ஹீரோவாக இருந்தவர் ஜெகபதி பாபு. அவர் செய்த சில தவறுகளால் இப்போது பிரபல நடிகர்களுக்கு வில்லன், அப்பா வேடம் என நடித்துக் கொண்டிருக்கிறார். இவரைப் போலவே திறமை கொண்ட நடிகர், அதே தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த சுனில் வர்மா. தன் திறமையால் படிப்படியாக சினிமாவின் புகழ் உச்சியில் கொண்டாடப்பட்டவர், தற்போது அதே வேகத்தில் மீண்டும் பழைய நிலைக்கே வந்துள்ளார். இவரின் சினிமா வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

2000-களின் தொடக்கத்தில் தெலுங்கு சினிமாவில் காமெடியன்களாக பிரம்மானந்தம், எம்.எஸ் நாராயணா போன்றார் கோலோச்சி கொண்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில் இவர்களை தனது ஆஸ்தான குருவாக நினைத்துக்கொண்டு தனது 20-வது வயதில் காமெடியனாக தெலுங்கு சினிமாவுக்குள் கால்பதித்தார் சுனில். இவரின் சினிமா ஆசைக்கு விதைபோட்டவர் சிரஞ்சீவி. பள்ளிப் பருவத்தில் சிரஞ்சீவி நடித்த திரைப்படங்களை பார்த்து, அவரைப் போல நடனம் ஆடவேண்டும் என்று விரும்பிய சுனில், சில கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு நடனமாடி இருக்கிறார். இந்த நடனமே இவரை பின்னாளில் சினிமாவுக்குள் நுழைத்தது.

1995-ல் நடன கலைஞராக என்ட்ரி. தான் நினைத்த சினிமாவில் வேலை செய்யத் தொடங்கினார் சுனில். அதோடு நிற்க அவருக்கு விருப்பமில்லை. நடிகராக, அடுத்தகட்டத்துக்குச் செல்ல வேண்டும் என உழைக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது உடல்வாகு, தோற்றம் போன்றவற்றால் வில்லனாக நடிக்க நினைத்தவருக்கு, 'செகண்ட் ஹேண்ட்' என்ற படத்தின் மூலமாக முதன்முதலில் அறிமுகம் கிடைத்தது. சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் தனது பல நாள் கனவான கேமரா முன்பு தோன்ற வேண்டும் என்பதை அந்த படம் நிறைவேறும் என்று நினைத்து நடிக்கத் தொடங்கினார். ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாக ஒரு சில காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் அவரின் சினிமா கரியர் சற்று சுணக்கமாகவே ஆரம்பித்தது. ஆனால், சுனில் தனது முயற்சியை கைவிடவில்லை. பல படங்களில் ஒன்றிரெண்டு சீன்களில் தலைகாட்டும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அடுத்து, படிப்படியாக இளம் ஹீரோக்களுக்கு நண்பர்களாக, கல்லூரி மாணவனாக நடித்தவர் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் நாகார்ஜுனா பெரிய ஹீரோக்களின் படங்களில் வீட்டு வேலைக்காரர், தம்பி போன்ற கதாபாத்திரம் என கிடைத்ததில் நடித்து வந்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த சுனிலின் வாழ்க்கையை மாற்றினார் இயக்குநர் ஒருவர். அவருக்குள் இருந்த நகைச்சுவைத் திறனை கணித்த இயக்குநர் விஜயபாஸ்கர் என்பவர் காமெடியனாக சுனிலை நடிக்கவைத்தார். இந்த அறிமுகம் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக சுனிலை மாற்றியது. சுனில் என்ற நபருக்குள் இருந்த நடிகரை வெளிப்படுத்தியது.

அவரின் நகைச்சுவையை மக்கள் ரசிக்க தொடங்க, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். 2000-ம் ஆண்டு சினிமாவில் நுழைந்தவர் 2004-ம் ஆண்டே சிறந்த காமெடி நடிகருக்கான விருதை வென்று அசத்தியதுடன், சினிமாவுக்குள் நுழைந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்துவிட்டார். நாளுக்கு நாள் சினிமாவில் அவரின் புகழ் வளர வளர, நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கத் தொடங்கின. அப்படித்தான் 2006-ல் 'ஆண்டாலா ராமுடு' என்ற திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக ஹீரோவானார் சுனில். இந்தப் படமானது தமிழில் லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியான `சுந்தர புருஷன்' படத்தின் ரீமேக். ரூ.4 கோடியில் தயாரான இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.12 கோடி வசூலித்தது.

ஹீரோவாக நடித்த முதல் படமே தெலுங்கு திரையுலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஒரு பெரிய வெற்றி. இதனால் அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹீரோவாக இரண்டாவது படம் நடிக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். இந்தமுறை அவருக்கு கைகொடுத்தது `பாகுபலி' புகழ் ராஜமவுலி. `மரியாதை ராமண்ணா' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் நகரத்தில் தாய், தந்தையை இழந்த இளைஞனான சுனில் தனது கிராமத்தில் இருக்கும் பூர்வீக சொத்தை விற்க நினைத்து, அந்த கிராமத்துக்கு செல்வதும், கிராமத்தில் சில சிக்கல்களை சந்திப்பார். இந்தக் கதையை நகைச்சுவை பின்னணியில் சொல்லியிருப்பார் இயக்குநர் ராஜமவுலி. சுனிலுக்கே உரித்தான காமெடி கலந்த வேடம் இது. 2010-ல் வெளியான இந்தப் படம் சுனிலின் முதல் படத்தைவிட பிரம்மாண்ட வெற்றி. குறிப்பாக இந்தப் படத்தில் அவரின் நடனம் பல ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் தமிழில் சந்தானம் நடிப்பில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்த வெற்றியால் அடுத்தடுத்து ஹீரோவாகவே நடிக்கத் தொடங்கினார். ஆனால், எதுவும் கைகொடுக்கவில்லை. ராஜமவுலி கொடுத்த வெற்றியை போல அவர் நம்பிய மற்ற இயக்குநர்கள் (ராம் கோபால் வர்மா உட்பட) யாரும் பெரிய வெற்றியைத் தேடித் தரவில்லை. அவர்கள் யாருக்கும் சுனிலின் பலத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்கவில்லை. விளைவு, வருடத்திற்கு 20 படங்கள் வரை நடித்து வந்த சுனில் ஒரு சில ஆண்டுகளில் ஒன்றிரெண்டு திரைப்படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இடையில் 'சிக்ஸ் பேக்' போன்ற பல முயற்சிகளை எடுத்தும் கைகொடுக்கவில்லை. இதனால் ஒரு தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நட்சத்திரமாக இருந்த சுனில், அந்த ரசிகர்களாலேயே மறக்கப்படும் அபாயத்தில் இருந்தார்.

இதனை உணர்ந்த சுனிலும் விரைவாகவே ஒரு முடிவை எடுத்தார். இந்த முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தது. ஹீரோ என்ற அவதாரத்தை விடுத்து, பழையபடி தனக்கே உரித்தான காமெடி நடிகராக நடிக்கப்போவதாக அறிவித்தார். அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளில் 'அரவிந்த சமேத வீர ராகவா', 'கலர் போட்டோ', 'அமர் அக்பர் அந்தோணி' போன்ற படங்களில் துணை நடிகர், காமெடி நடிகர் என பழையபடி கலக்க ஆரம்பித்தார். இதில், 'கலர் போட்டோ' கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அல்லு அர்ஜுனின் 'ஆல வைகுந்தபுரமுலூ' போன்ற படங்களில் அவரின் கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் பழைய பாணியையே தொடர்ந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்ட சுனில், ஹீரோவாக தோல்வி அடைந்ததுக்கு காரணம், அவரிடம் திறமை இல்லை என்பதல்ல. தெலுங்கின் முன்னணி ஹீரோக்களை நன்கு நடனம் ஆட தெரிந்தவர் சுனில். அதோடு நகைச்சுவை திறன் அவருக்கு இருக்கும் இன்னொரு பிளஸ். இதனால் ஹீரோவாக அவர் நடித்த ஆரம்ப காலகட்டங்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அவரின் படங்களை குடும்பங்களாக தியேட்டரில் வந்து பார்க்க தொடங்கினர். ஆனால், சரியான கதை தேர்வு இல்லாதது, தனது திறமையை அறிந்த இயக்குநர்களுடன் சேராதது போன்ற பல்வேறு காரணங்களால் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டார்.

தற்போது மீண்டும் துணிந்து ஹீரோ அவதாரத்தை எடுத்திருக்கிறார். 'புஜ்ஜி... இல ரா' என்ற படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகி இருக்கும் சுனில், இதையடுத்து தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். துணை நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஹீரோவாக நடிக்க இருக்கும் சுனில், இந்த முறை வெற்றியைப் பெறுவாரா என்பதுதான் அவரது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

- மலையரசு