சிறப்புக் களம்

ஐபோன் பயனாளிகள் 'டிஜிட்டல் அடிமைகள்'! - டெலிகிராம் நிறுவனர் காட்டம்

ஐபோன் பயனாளிகள் 'டிஜிட்டல் அடிமைகள்'! - டெலிகிராம் நிறுவனர் காட்டம்

நிவேதா ஜெகராஜா

ஐபோன், 'அந்தஸ்தின் அடையாளம் மட்டும் அல்ல; அதிநவீன போன்' என ஆப்பிள் அபிமானிகள் நினைத்துக்கொண்டிருக்க, டெலிகிராம் மேசேஜிங் சேவையின் நிறுவனரோ, 'ஐபோனை பயன்படுத்துபவர்கள் எல்லாம் ஆப்பிள் நிறுவனத்தின் டிஜிட்டல் அடிமைகள் என அதிரடியாக கூறி அசர வைத்திருக்கிறார்.

வாட்ஸ்அப் பிரைவசி சர்ச்சையை அடுத்து வேகமாக பிரபலமான மாற்று மெசேஜிங் சேவைகளில் ஒன்றான டெலிகிராம் பரவலாக கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், டெலிகிராம் நிறுவனரான பாவல் டுடோவ் (Pavel Durov), ஐபோன் மீதும், ஆப்பிள் நிறுவனம் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

மிகவும் அதிக விலை கொண்ட, காலாவதியான தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் விற்பனை செய்கிறது என்றும், ஐபோனை பயன்படுத்துபவர்கள் எல்லாம் ஆப்பிளுக்கு டிஜிட்டல் அடிமையாக இருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெலிகிராம் சேவையில் உள்ள ஒரு பொது சேனலில் (https://t.me/durov/161) இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளவர், இதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

'தங்களை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாத தொழில்நுட்ப சூழலை உருவாக்கி, கிட்டதட்ட வாடிக்கையாளர்களுக்கு காலாவதியான சாதனங்களை, மிகவும் அதிக விலைக்கு விற்கும் வர்த்தக மாதிரியில் ஆப்பிள் நிறுவனம் சிறந்து விளங்குகிறது' என்று கூறியுள்ளவர், 'ஆப்பிள் ஸ்டோர் அனுமதிக்கும் செயலிகளை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும், அதன் ஐகிளவுட் சேவையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்' என்று ஐபோன் பயனாளிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டும் அல்ல, "ஆன்ட்ராய்டு போன்கள் எல்லாம் 120 Hz டிஸ்பிளே திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஆப்பிள் இன்னமும் 60 Hz திரையை வைத்துக்கொண்டு ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுப்பாடுகளை கொண்ட தேசமான சீனாவுடன் ஆப்பிள் நெருக்கமான வர்த்தக உறவு கொண்டுருப்பதையும் அவர் குறை கூறியுள்ளார்.