கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் 'தீன்காஹோன்' (Teenkahon). பெங்காலி மொழித் திரைப்படமான இது, ஆந்தாலஜி வகையைச் சார்ந்தது. படத்தில் மொத்தம் 3 கதைகள் சொல்லப்படுகின்றன. மூன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கக் கூடியவை. திருமணத்தை மீறிய உறவில் எழும் சிக்கல்களை மையமாக கொண்டு மூன்று கதைகளும் சொல்லப்பட்ட விதத்தில் தனித்து நிற்கிறது.
நபலோக் (Nabalok): வெளியே மழைக் கொட்டிக்கொண்டிருக்கிறது. உள்ளே ஒருவர் செய்தித்தாள் வாசிக்கிறார். மற்றொருவர் அமர்ந்திருக்கிறார். இந்த கறுப்பு - வெள்ளையாக விரியும் முதல் காட்சியே நம்மை ஈர்க்கிறது. இருட்டறையில் அமர்ந்திருக்கும் மூன்று நண்பர்கள் தங்களுக்காக பேசிக்கொள்கிறார்கள். அதில் தாராபதா (Tarapada) தன்னுடைய சிறு வயது காதல் குறித்து விவரிக்கிறார். தான் 8 வயதாக இருக்கும்போது திருமணமான 16 வயதுடைய நயன்தாரா என்ற பெண்ணை காதலித்த அனுபவத்தை பகிர்கிறார்.
தான் கொண்ட ஈர்ப்பின்பால் அந்தப் பெண்ணுக்காக எல்லாவற்றையும் செய்யும் சிறுவன், ஒரு கட்டத்தில் அவரது கணவரையும் பிரிக்க முயல்கிறான். அதன் இறுதி என்னவானது என்பதே நபலோக். உலகப் புகழ்பெற்ற இத்தாலியன் படமான மெலினா (Malena) படத்தை பார்ப்பது போன்ற உணர்வே எழுகிறது. கறுப்பு - வெள்ளை ஃப்ரேம்களில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனன்யா சென் மிளிர்கிறார். சிறுவனாக நடித்திருக்கும் பர்ஷன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேம்களும் ஈர்க்கிறது. படம் பொறுமையாக நகர்கிறது என்ற உணர்வை கொடுத்தபோதிலும், வசனங்களும், காட்சிகளும் அதனை சமன்செய்கின்றன.
குறிப்பாக படத்தின் இறுதியில், 'இப்போது உன்னுடைய சிறுவயது காதலி நயன்தாராவுக்கு வயசாகியிருக்கும்' என்று ஒருவர் கூறும்போது, காதலித்த நபர், 'நயன்தாராக்களுக்கு வயசாவதில்லை' என பதிலளிக்கும் காட்சி அத்தனை அழகு!
போஸ்ட் மார்ட்டம் (Post Mortem): ஒரே அறை. இரண்டே நபர்கள். எந்த சலிப்பும் தட்டாமல் கதையை அழகாக நகர்த்திக்கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் பௌத்தயன் முகர்ஜி. ஒரு கவிதையைப்போல கதை சொல்லியிருக்கிறார். தன் மனைவி தற்கொலை செய்துகொண்டார் என அவரின் முன்னாள் காதலனிடம் கணவரே நேரில் வந்து சொல்கிறார். மனைவியின் தற்கொலையில் இருவருக்கும் பங்கு உண்டு என்று பேச அழைக்கிறார். இருவரும் பேசிக்கொள்கின்றனர். அந்த இருவருக்குமான மொத்த உரையாடல்கள் தான் 'போஸ்ட் மார்ட்டம்'.
இறந்த பெண்ணுடனான தங்களது உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேசிக்கொள்கின்றனர். எந்த இடத்திலும் அந்த பெண்ணைக குறித்து அவர்கள் குற்றம்சாட்டவில்லை. இருவருக்குள்ளான தவறுகள் விமர்சனங்களே மாறி மாறி முன்வைக்கப்படுகின்றன. நாவல் ஒன்றை வாசிப்பது போன்ற அனுபவத்தை தருகிறது 'போஸ்ட் மார்ட்டம்'. இறுதியில் வருகின்ற திருப்பம் நம்மை திக்குமுக்காடவைக்கும்.
டெலிபோன் (Telephone): அடிக்கடி சண்டையிடும் கணவன் - மனைவி உறவுக்குள் மற்றொரு பெண்ணின் வருகை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை டெலிபோன் பதிவு செய்கிறது. ரிதுபர்ணா சென்குப்தாவும், ஆஷிஷ் வித்யார்த்தியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உறவுச் சிக்கல்கள் குறித்தும், சமூகத்தின் இறுக்கங்கள் குறித்தும் படம் பேசுகிறது. இதில் வருகின்ற இறுதித் திருப்பமும் பகீர் ரகம்தான்.
'தீன்காஹோன்' படத்தின் 3 கதைகளும் திருமணத்தை மீறிய உறவு குறித்து 3 வெவ்வேறு கோணங்களிலிருந்து கதை சொல்கிறது. படத்தில் அபிக் முகோபாத்யாயின் ஒளிப்பதிவும், அர்னாப் சக்ரவர்த்தியின் இசையும் கூடுதல் பலம். 3 கதைகளுமே அழகாக தொடங்கி இறுதியில் இருண்ட பக்கங்களுடன் முடிகின்றன.
மனித உணர்வுகள் குறித்து பேசும் இந்தப் படம், சொல்ல வந்த கருத்தை இன்னும் கூடுதல் அழுத்தத்துடன் தெளிவாக சொல்லியிருக்ககலாம் என்றே தோன்றுகிறது. எனினும், நமக்கு எளிதான புரிதலை ஏற்படுத்துவதைக் காட்டிலும், நம் சிந்தனையைத் தூண்டி, காட்சிகளையும் கதைகளையும் அசைப்போட்டு நமக்கு சில தீர்வுகளைக் கண்டடையை வைப்பதில் இலக்கிய சினிமாவாக உருவெடுக்கிறது இப்படம். முழு படத்தைப் பார்த்து முடித்ததும் மூன்று ஆகச் சிறந்த சிறுகதையை படித்து முடித்த உணர்வு மேலெழுவதை உணர முடிகிறது.
இப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. தீவிர சினிமா பார்வையாளர்களுக்கு அட்டகாசமான நல்விருந்து.
முந்தைய அத்தியாயம்: ஓடிடி திரைப் பார்வை 7: Aakashavaani - வித்தியாசமான திரை அனுபவம் விழைவோருக்கு நல்விருந்து!