எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றி தினமும் ஏதாவது ஒரு நிறுவனம் செய்தியை உருவாக்கும். இன்றைய கோட்டா 'டாடா மோட்டார்ஸ்'. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 76-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பேசிய தலைவர் என்.சந்திரசேகரன், "தற்போது டாடா குழுமத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு 2 சதவீதமாக இருக்கிறது. குறுகிய காலத்தில் 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
தற்போது டாடா குழுமத்தின் வசம் இரு எலெட்க்ரிக் வாகனங்கள் உள்ளன. நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய இரு மாடல்கள் உள்ளன. மொத்த எலெக்ட்ரிக் கார் சந்தையில் 77 சதவீதம் டாடா மோட்டார்ஸ் வசம் இருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் மேலும் 10 புதிய ரக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது.
"எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரும் திட்டம் வைத்திருக்கிறோம். தேவைப்படும் நேரத்தில் முதலீட்டை திரட்டிக்கொள்வோம். கடந்த ஆண்டு நெக்சான் இவி அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது வரை 4,000 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுகான முன்பதிவு நன்றாக இருக்கிறது" என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
"அதேபோல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களிலும் டாடா மோட்டார்ஸ் கவனம் செலுத்து வருகிறது. டாடா மோட்டார்ஸ்க்கு வெளியே புதிய உதிரி பாக நிறுவனத்தை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று சந்திரசேகரன் தெரிவித்தார்.
டாடா பவர் நிறுவனத்துடன் இணைந்து சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 25 நகரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க இருக்கிறது.
'சிப்' பிரச்னை இந்த துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் உற்பத்தி, விற்பனை, லாப வரம்பு உள்ளிட்ட பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த நிலைமை சரியாகும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு பிறகும் கொஞ்சம் தட்டுப்பாடு இருந்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு இருக்காது என்றே கணிக்கிறோம்" என்று சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார்.
"டாடா மோட்டார்ஸை 2024-ம் ஆண்டு கடன் இல்லாத நிறுவனமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டு செலவுகளை குறைத்தது உள்ளிட்ட நிர்வாக காரணங்களால் சுமார் ரூ.7,500 கோடி அளவுக்கு கடனை செலுத்தினோம். கடந்த மார்ச் 31 நிலவரப்படி சுமார் ரூ.40,000 கோடி கடன் இருக்கிறது. திட்டமிட்டப்படி கடன் இல்லாத நிறுவனமாக மாற்றுவோம்" என்று சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், "கடந்த நிதி ஆண்டு ரூ.19,800 கோடி அளவுக்கு விரிவாக்க நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்தோம். நடப்பு நிதி ஆண்டில் ரூ.28,900 கோடி அளவுக்கு முதலீடு செய்ய இருக்கிறோம். இதில், பெரும்பாலான முதலீடு ஜாகுவால் ராண்ட் ரோவர் பிராண்டுக்கும் கணிசமான முதலீடு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் இருக்கும்" என டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது.