சிறப்புக் களம்

தமிழக அரசியலில் ’தெறி’... பிப்ரவரி..!

webteam

அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்திய மாதமாக மாறிப் போனது இந்த வருட பிப்ரவரி. ஒருவழியாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்து வெற்றியை கொண்டாடும் தருணத்தில், அரசியலில் பல எரிமலைகள் வெடிக்கத் தொடங்கின.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் கடந்தாண்டு டிசம்பர் 29- ஆம் தேதி, அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார் சசிகலா. பின், அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக பிப்- 5 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்று ஓ.பன்னீர்செல்வம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பினார். பன்னீர்செல்வம் ராஜினமா செய்ததாலும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதாலும் சசிகலா, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக அரசியல் சூழல் மாறி போன நிலையில், ஆளுநர் தமிழகத்தின் முதலமைச்சராக யாரை பொறுபேற்கச் சொல்வார் என்ற ஆவலுடன் இருந்த தருணத்தில், திடீரென முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிப்- 7 ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அதன்பின் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக, என்னை கட்டாயப்படுத்தித்தான் ராஜினாமா செய்ய வைத்தனர் என்று அதிரடியாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்புக்குப் பின்னர், அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இரட்டை இலை இரண்டாக பிளந்து பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என உடைந்தது. பின், அதிமுக தொண்டர்கள் கேட்டுக் கொண்டால், ராஜினாமாவைத் திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாகப் பன்னீர்செல்வம் கூறினார்.

பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி முடிவுக்கு பிறகு சில அதிமுக பிரமுகர்கள் மற்றும் எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த 125 அதிமுக எம்எல்ஏ-க்கள், பிப்- 8 ஆம் தேதி நடைபெற்ற கட்சி கூட்டத்திற்குப் பிறகு கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏ-க்கள் கடத்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் யார் என்று ஆளுநர் அறிவிப்பாரா? என்ற குழப்பத்தில் இருந்தபோது, சசிகலா மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தார் ஆளுநர்.

பிப்-14 ஆம் தேதி பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் தலையெழுத்து மாறவிருந்தது. அன்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது. அதிரடியாகத் தீர்ப்பை வெளியிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. முதல்வர் பதவி போட்டியில் இருந்து ஒருவழியாக சசிகலா நீங்கினார். அதுமட்டுமின்றி, அவர் குற்றவாளியானதால் 4 ஆண்டுகள் உட்பட 10 ஆண்டுகளுக்கு சசிகலாவால் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.

சசிகலா, தண்டனையை அனுபவிக்கச் சென்றதால், அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். திமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் நியமிக்கப்பட்டார். பிப்- 15 ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற சசிகலா, 3 முறை கையால் அடித்து சபதம் செய்துவிட்டு, பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பிப்- 16 ஆம் தேதி, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை, ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். பின்னர் அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் சுமார் 29 ஆண்டுகளு‌க்கு பி‌றகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் முதல் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி கூடியது. பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணம். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுகவினர், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் வெளியேற மறுத்து, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், பேரவையில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர். கிழிந்த சட்டையோடு ஸ்டாலின் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், 122 உறுப்பினர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

பிப்- 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவைச் செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கோரினார். அதற்கு மறுநாள் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம், மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட முக்கியமான ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஒருவழியாக ஆட்சி அமைந்த நேரத்தில், பிப்- 21 ஆம் தேதி தமிழகத்தில் நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தலை, மே 14ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிப்- 24 ஆம் தேதி ஜெயலலிதா எண்ணத்துக்கு எதிராக கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்று விட்டது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார். அன்றைய தினமே, கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ‌அமைக்கப்ப‌ட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்- 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை” என்ற புதிய அமைப்பை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் அவர் தெரிவித்தார். அரசியல் போட்டிகள் வலுவான தருவாயில், புதிதான ஹைட்ரோகார்பன் திட்டம் முளைத்து நெடுவாசல் பகுதியில் போராட்டம் தொடங்கியது. பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களைப் பாழ்படுத்தக் கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம் பற்றிய அப்போலோ அறிக்கை, சீமைக்கருவை மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் வேண்டும், நீட் பிரச்னை, போன்ற பல போருக்கு மத்தியில் தமிழக அரசியலைக் கடந்து சென்றது பிப்ரவரி மாதம்.