சிறப்புக் களம்

தடுப்பூசிக்காக கட்சி பேதமின்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தமிழ்நாடு எம்.பி.க்கள்!

தடுப்பூசிக்காக கட்சி பேதமின்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய தமிழ்நாடு எம்.பி.க்கள்!

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் அமைந்துள்ள செங்கல்பட்டு தடுப்பு ஊசி உற்பத்தி மையத்தில் விரைவாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, அதிமுக மற்றும் மதிமுக இன்று மாநிலங்களவையில் வலியுறுத்தின. கட்சி அரசியல் பேதங்களை கடந்து, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கொரோனா பாதிப்பு குறித்து நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரினர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் காலை முழுவதும் மாநிலங்களவை முடங்கிய நிலையில், மாலையில் கொரோனா நிலவரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திருச்சி சிவா, மத்திய அரசு விரைவாக செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என கோரினார். அதே போல அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து மத்திய அரசு விரைவாக கோவிட் தடுப்பூசி உற்பத்தி தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதே கோரிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் முன்வைத்து மாநிலங்களவையில் பேசினார்.

சிவாவும் தம்பிதுரையும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் ஜி.கே.வாசனும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி வேண்டும் என வலியுறுத்தினார்.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என திருக்குறளை மேற்கோள் காட்டிய திருச்சி சிவா, கோவிட் நுரையீரலை தாக்கும் நோய் என்பதால் மத்திய அரசு முன்கூட்டியே பிராணவாயு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்ட திருச்சி சிவா, மத்திய அரசு மிகவும் தாமதமாக செயல்பட்டதாக கண்டனம் தெரிவித்தார். நமது மக்கள் தொகையில் ஒரு சிறிய சதவீதத்தினருக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது என திருச்சி சிவா மாநிலங்களவையில் பேசினார்.

மக்களை காக்க தடுப்பூசி முக்கியம் என தம்பிதுரை குறிப்பிட்டார். செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதி வீணாகக் கிடக்கிறது என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கே தடுப்பூசி உற்பத்தி செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் திருச்சி சிவா மாநிலங்களவையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தார். தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்தால் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்யலாம் என்றும், இது நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் பேசினார்.

தமிழ்நாட்டுக்கு குறைவான அளவில் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்றும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி தடுப்பூசிகள் தேவை என கடிதம் எழுதியிருப்பதாகவும் திருச்சி சிவா குறிப்பிட்டார்.

இதே கோரிக்கையை வலியுறுத்திய தம்பிதுரை, கோவிட் பாதிப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க எடுக்கப்பட்ட முடிவு சரியானது என்று தம்பிதுரை பேசினார். இந்த வருட இறுதிக்குள் 90 கோடி தடுப்பூசிகளை வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது என்றும அவர் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, ஏழை மக்களுக்கு நிவாரணம் அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தம்பிதுரை தெரிவித்தார்.

கோவிட் பரவலை தடுக்க தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசங்களை அணிவது போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு விளக்க வேண்டும் என தம்பிதுரை கோரிக்கை வைத்தார். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.

கோவிட் பாதிப்பிலிருந்து மக்களை காப்பதில் அரசியலுக்கு இடமில்லை என ஜி.கே வாசன் வலியுறுத்தினார். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தடுப்பூசி திட்டத்தின் வேகத்தை அதிகரித்து விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உலகில் இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பெருந்தொற்றுக்கள் குறித்து பேசிய வைகோ, மூன்றாம் அலை வருவதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நான்காம் அலை கூட வருவதாக பேசப்படுகிறது என்றும், அந்த சமயத்தில் ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் காக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆக்சிஜன் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோர் உயிரிழக்கும் நிலை இனியும் இருக்கக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட் பெரும்தொற்று பாதிப்பை குறைக்க மத்திய அரசு தவறிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டை முன்வைத்தார். இரண்டாம் அலையை சமாளிக்க போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

தடுப்பூசித் திட்டம் மிகவும் பின்தங்கி உள்ளது என்றும், நாட்டின் ஜனத்தொகையில் 5% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி பாதுகாப்பு கிடைத்துள்ளது என்றும் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். கோவிட் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என பல்வேறு காட்சிகளை சேர்ந்தோர் இந்த விவாதத்தின்போது ஆலோசனை அளித்தனர்.

- கணபதி சுப்ரமணியம்