சிறப்புக் களம்

”முதல்வர் ஸ்டாலின் வித்தியாசமா மக்களுக்கு நல்லது செய்றார்; ஆனால்?”: அண்ணாமலை சிறப்புபேட்டி

”முதல்வர் ஸ்டாலின் வித்தியாசமா மக்களுக்கு நல்லது செய்றார்; ஆனால்?”: அண்ணாமலை சிறப்புபேட்டி

sharpana

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று  கடந்த ஏப்ரல்-7 ந்தேதி மு.க. ஸ்டாலின்  முதல்வர் பதவியேற்று சரியாக ஒரு மாதமாகிவிட்டது. 30 நாட்கள் அவரது செயல்பாடுகள் குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் விர்சித்துக்கொண்டிருக்க  , பா.ஜ.கவின் துணைத்தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து கேட்டோம்.

அவர் அளித்த பேட்டியில்,

”தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் ஆட்சி குறித்து மதிப்பீடு கொடுக்க ஒரு மாதம் என்பது குறைவுதான். பாசிட்டிவாக சொல்லவேண்டும் என்றால் எல்லா இடத்திற்கும் முதல்வர் வருகிறார், ஓடுகிறார், அனைவரையும் பார்க்க முயற்சி செய்கிறார். அதனையெல்லாம் தவறு என்று சொல்லக்கூடாது. தடுப்பூசி விஷயத்தில் பிரதமர் மோடியையும் முதல்வர் பாராட்டுகிறார். ஆனால், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், செய்தி தொடர்பாளர்களும் மாநிலத்தின் எந்த தவறைச் சுட்டிக்காட்டினாலும்  ‘போய் மோடியை கேளுங்க’ என்று இன்னும் எதிர்க்கட்சி மனநிலையியிலேயே இருக்கிறார்கள். அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்கிறார்கள், அதனால், எதிர்க்கட்சியாகத்தான் திமுகவினர் எங்களுக்குத் தென்படுகிறார்கள். முதல்வர் மட்டும் மாற்றி பேசுகிறார். மற்றவர்கள் அப்படி பேசுவதில்லை. அப்போ, முதல்வருக்கு கட்சியினர் கட்டுப்படவில்லையா?

ஆரம்பத்தில், மு.க ஸ்டாலின் எல்லோருக்காமான முதல்வராக இருப்பேன் என்றார். அப்படியே முயற்சி செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். சொன்னபடி, அவர் செய்தாலும் கீழிருப்பவர்கள் இணக்கமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. முரணாக இருக்கிறார்கள். அவரின், 30 நாள் ஆட்சிக்கு எங்கள் கட்சியினரும் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். ஆனால், கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களும் மூத்த தலைவர்களின் நடவடிக்கைகளும் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. முதல்வர் ஒரு வித்தியாசமாக மக்களுக்கு நல்லதை செய்ய வேலையை ஆரம்பித்துள்ளார். அதற்கு எப்போதும் பாஜக ஆதரவளிக்கும். அதேசமயம், அவர் வேகமாக கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

ஒரு அரசியல் தலைவரையும் கட்சியையும் சும்மா விமர்சிக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்டக் கொள்கை. உதாரணத்திற்கு, மு.க ஸ்டாலின் கோவை வரும்போது ’கோ பேக் ஸ்டாலின்’ என்று அகில இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள். ஆனால், எங்கள் கட்சியில் எந்தத் தலைவர்களும் அப்படி செய்யவில்லை. ஒரு மாநில முதல்வருக்கு எங்கள் கட்சி எப்போதும் மரியாதைக் கொடுக்கும். ஆனால், பிரதமர் மோடி வருகையின்போது மு.க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தங்களது தனிப்பட்ட சமூக வலைதளங்களிலிருந்தே பதிவு போட்டார்கள். இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். இந்த ஒரு மாதத்தில், முதல்வர் ஸ்டாலின் அனைத்துக்கட்சிக் கூட்டம் போட்டுள்ளார். அது, வரவேற்கத்தக்கது.

அதேசமயம், இன்னும் கொஞ்சம் அவர் எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் செல்லவேண்டும். ஓட்டுப்போடாத பகுதிகளின் மீதும் கவனம் செலுத்தவேண்டும். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எதிர்கட்சிதான். ஆனால், அவர் எங்கு விமர்சிக்கவேண்டுமோ அங்குதான் விமர்சிப்பார். அவர் அணுகுமுறையோ வேறு. ஆனால், தமிழக அரசு ஆட்சிக்கு வந்தும் எதிர்க்கட்சி மனநிலையிலேயே ஆட்சி செய்கிறது. இந்த இமேஜ் என்பதையெல்லாம் மக்கள் 6 மாதத்தில் காலி செய்துவிடுவார்கள்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழக அரசு கூறுவதை  எப்படி பார்க்கிறீர்கள்?

”திமுக என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டு போகட்டும். அதுகுறித்து கவலை இல்லை. இவர்கள் நாடகத்தை மக்கள் பல காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்று அதிகரிப்பு, மக்கள் இறப்பு அதிகரிப்பு போன்றவற்றை திசை திருப்பவே திமுக ஒன்றிய அரசு கோஷத்தை எடுத்திருக்கிறது. இவர்கள் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினால், அதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாறிவிடும் என்று அர்த்தம் இல்லை. மக்களுக்கு என்னவென்று தெளிவாக தெரியும். திமுகவினரும் இதனை புரிந்துகொள்வார்கள். கடந்த 2006 ஆம் ஆண்டெல்லாம் சொல்லாததை புதிதாக தற்போது சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற முயற்சி எடுக்காமல் மக்கள் கோபத்தை திசைதிருப்பி ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள்.

ஆனால், கொரோனா தொற்று குறைந்து வருகிறதே?

    “கொரோனா குறைந்துதான் ஆகும். எல்லா மாநிலத்திலும் குறைந்து வருகிறது. நாங்கள் திராவிட ஆட்சிகளில் இப்படி செய்தோம் அப்படி செய்தோம் என்று கூறிவிட்டு கொரோனா எண்ணிக்கையை அதிகரித்துவிட்டார்கள். கோவையில் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்திற்குமேல் எண்ணிக்கைச் செல்கிறது. கொரோனா குறைந்ததில் இவர்களின் பங்கு எவ்வளவு என்று சொல்ல முடியாது. கொரோனா குறைய என்ன செய்தது இந்த அரசு? மருந்து, தடுப்பூசி அனைத்தையும் மத்திய அரசு கொடுக்கிறது. கொரோனா ஏறும்போது மத்திய அரசு காரணம்? இறங்கும்போது மட்டும் தமிழக அரசு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

- வினி சர்பனா