புரட்சிகரமான பாடல்களாலும், அற்புதமான கவிதைகளாலும் எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சுதந்திர போராட்ட காலங்களில், விடுதலை வேள்வியை தம் பாடல்களால் உருவாக்கி படரவிட்ட, தேசியக் கவியின் பிறந்த தினம் இன்று.
முறுக்கு மீசை. சிகை மறைத்த முண்டாசு. கனல் கக்கும் கண்களே பாரதியார் எனும் கம்பீரத்தின் குறியீடுகள். 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், சிறுவயதிலேயே தமிழ் மீது அதீத பற்று கொண்டிருந்தார். கவிஞராக அறியப்பட்டு, தமிழாசிரியராய் பணி செய்து பின்னர் பத்திரிகையாளர், எழுத்தாளர், சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்த்திருத்தவாதி, சாதி மறுப்பாளர், பெண்ணுரிமைப் போராளி என பாரதியாரின் பன்முகங்கள் நீள்கின்றன.
எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராகவும் பாரதியார் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஜாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும் சாகாவரம் பெற்ற பல பாடல்களைப் இயற்றியுள்ளார் பாரதியார். ஆணுக்கு பெண் நிகரென்றும், குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் என்றும் எடுத்துரைத்தவர் பாரதி. 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய பத்திரிகைகளிலும், 'இந்தியா' வார இதழிலும் பணியாற்றியவர் பாரதியார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட காவியங்களை படைத்த பாரதி, 1912 ஆம் ஆண்டு கீதையையும் மொழிபெயர்த்தார்.
தனது கவிதைகளில் சமூக சீர்திருத்த கருத்துகளையும், தேச பக்தியையும் புகுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்த பாரதியாரின் பணி விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இன்றளவும் கனவு நாயகனாகத் திகழ்கிறார் பாரதியார். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்றும் 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' என்று முழங்கியவர் அவர்.
உச்சரிக்கும்போது உணர்ச்சி பொங்கச் செய்யும் மொழிநடை பாரதியின் கவிதைகளுக்கு மட்டுமே உரியது. நூற்றாண்டுக்கு முன் பாரதியார் எழுதிய கவிதைகள், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துபவையாகவே உள்ளன. சமூகத்தின் மீதான பற்றும், சக மனிதர்கள் மீதான அவரது அக்கறையும் பாரதியாரின் பாடல்களில் எதிரொலிப்பதை அறிய முடிகிறது. திரைப்படங்களிலும், சினிமா பாடல்களிலும் இன்று வரை பாரதியாரின் கவிதைகள் இடம்பெறுவது, அதன் தாக்கத்தையும், தேவையையும் உணர்த்துகிறது.
இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாலும், தனது வாழ்நாளில் பாரதியார் ஆற்றிய தமிழ்ச்சேவை சொல்லிலடங்காது.