சி.எஸ். அமுதன் இயக்கத்தில் 2010 ம் ஆண்டு வெளியான திரைப்படம் தமிழ்படம். அந்தப் படம் வெளியாகும் வரை யாருக்கும் சிவாவை தெரியாது. இயக்குநர் அமுதனையும் தெரியாது. ஆனால் அந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஆடியன்ஸ் சிவாவை கொண்டாடினார்கள். அந்தப் படத்தை கொண்டாடினார்கள்.
இதற்கே அந்தப் படத்தில் யாரும் பெரிய நடிகர்கள் இல்லை. எல்லாம் இரண்டாம் கட்ட நடிகர்கள்தான். இவர்கள் கூட்டணியில் உருவான தமிழ் படம் சினிமா உலகில் யாரையும் விட்டு வைக்காமல் வளைத்து வளைத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் காய்ச்சி எடுத்தது. கெட்டித் தட்டி போய் கிடத்த ‘க்ளிஷே’ காட்சிகளை போட்டு கிழிக்கிழி என்று கிழித்தது. பல வருடங்களாக ஆடியன்ஸ் தங்களின் மனத்தில் சொல்ல முடியாமல் புழுங்கிக் கொண்டிருந்தவற்றை போட்டு உடைத்தது. அந்த ஆண்டு வசூல் ரீதியாக வெற்றிப் படங்களின் வரிசையில் தமிழ்படம் இடம் பிடித்தது.
கரகாட்டக்காரனில் வரும் காட்சிகள், ராஜ்கிரன் படத்தில் வரும் காட்சிகள், ரஜினி படத்தில் வரும் காட்சிகள் என அத்தனை பெரிய நட்சத்திரங்களையும் வம்புக்கிழுத்திருந்ததால் பெரிய எதிர்ப்பை இப்படம் சந்திக்கும் என பலரும் கூறினர். ஆனால் அந்த காமெடியை பலரும் ஆக்கப்பூர்வமாக எடுத்து கொண்டாகள். பல நட்சத்திரங்கள் வெளிப்படையாக சிவாவை பாராட்டினார்கள். அன்று முதல் தமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தை அடைந்தார் சிவா. அதனை தொடர்ந்து அவர் ஒரு நடுத்தர ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்தார். அவரது வளர்ச்சி அத்தனைக்கும் முக்கிய பங்கு வகித்தது இந்த ஒரே படம்தான்.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் சிவா நடித்திருந்தாலும் அவரை இன்றும் மறக்கவிடாமல் காப்பாற்றி வருவது இந்தத் தமிழ் படம்தான். அதே போல இயக்குநர் அமுதனுக்கும் அதிக அங்கிகாரத்தை அள்ளிக் கொடுத்ததும் இந்தப் படம்தான். ஆகவேதான் அந்த வெற்றியை மீண்டும் எட்டிப்பிடிக்க இந்தப் படக்குழு முடிவெடுத்து தமிழ் படம்2 வை எடுக்க தொடங்கியது. முதலில் இதற்கு தமிழ்படம் 2.0 என்றே தலைப்பு வைத்திருந்தார்கள். ஆனால் அதன் பிறகு அது ரஜினியின் படத்தை நேரடியாக காமெடி செய்கிறது என நினைத்ததாலோ என்னவோ தலைப்பை மறுபடியும் ‘தமிழ்படம்2’ என மாற்றினார்கள்.
இந்தப் படத்தின் ஒவ்வொரு புரமோஷன் போஸ்டரும் அதிரடியாக சிலரை கலாய்த்து வருகிறது. மெரினாவில் ஒபிஎஸ் தியானம் செய்த காட்சியை அப்படியே காப்பி அடித்து சிவாவை வைத்து ஷூட் செய்து முதல் போஸ்டர் வெளிட்டார்கள். அந்த போஸ்டர் பலரையும் இந்தப் படத்தின் பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்தது. அதே போல ட்ரம்ப் கூட்டமாக சேர்ந்து கலந்தாலோசிக்கும் படத்தை நக்கல் செய்யும் விதமாக ஒரு போஸ்டரை வெளியிட்டனர்.
அதேபோல இந்தப் படத்தின் ட்ரெய்லர் ‘மெர்சல்’ விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ பாடல் என பல விஷயங்களை வில்லங்கமாக கலாய்த்திருந்தது. அதே போல் சிவா போலீஸ் அதிகாரியாக பதவியேற்கும் போது அழுவதை போன்ற காட்சியை வைத்திருந்தார் இயக்குநர் அமுதன். அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மீண்டும் பதவியேற்ற போது அமைச்சர்கள் கதறி அழுதக் காட்சியை கிண்டல் செய்வதைபோல இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் ‘நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகுதான் கல்யாணம்’ என சொன்ன டயலாக்கைகூட விட்டு வைக்கவில்லை இவர்கள்.
இப்படத்திற்கு யு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த போது அதற்காக ஒரு போஸ்டரை வெளியிட்டார்கள். அதில் பாகுபலியில் சிவ லிங்கத்தை தூக்கி வரும் காட்சியை அப்படியே உல்டாவாக்கி சிவா யு எழுத்தை தூக்கி வருவதைபோல வடிவமைத்து வெளியிட்டார்கள். இப்போது கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ படக் காட்சியை கிண்டல் செய்வதைபோல ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது.
இதற்கெல்லாம் மேலாக ‘டிக்டிக்டிக்’ வெளி வருவதற்கு முன்பே அப்படத்தின் காட்சியை நக்கலடித்து விண்வெளியில் லுங்கிக் கட்டிக் கொண்டு சிவா சீட்டாடுவதை போல ஒரு போஸ்டரை வெளியிட்டு விமர்சித்திருந்தார்கள். படமே வரவில்லை, அதற்குள் ஒரு அப் டேட்டா? என அசர வைத்தது இந்தத் தமிழ்படம்2 படக்குழு. இன்னும் படம் வெளிவரும் வரை யாரை எல்லாம் வச்சு செய்யப் போகிறார்களோ? ஆடிப்போய் உட்கார்ந்திருக்கிறது சினிமா உலகம்.