சிறப்புக் களம்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு தமிழ்த் தம்பி!

தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு தமிழ்த் தம்பி!

webteam

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஜூனியர் டீமில், தமிழ் தம்பி ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட பலர் பல்வேறு நாடுகளில் கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளில் இது அதிகம். அதில் சில தமிழர்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை, ஜிவேஷன் பிள்ளை (Jiveshan Pillay).

அந்த நாட்டின் ஜூனியர் உலகக் கோப்பை அணியில் தொடக்க ஆட்டக்காரராக இடம்பிடித்திருக்கும் இந்த பிள்ளை, சமீபத்தில் திடீரென்று பரபரப்பானது நினைவிருக்கும்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 17-ம் தேதி நடந்த போட்டியின் போது, பேட்டிங் செய்துகொண்டிருந்த பிள்ளை, தனது காலுக்கருகில் வந்த பந்தை கையால் தூக்கி வீசியதற்காக, அவுட் கொடுக்கப்பட்டார். 

’தவறுகளில் இருந்துதானே பாடம் கற்க வேண்டும்’ என்கிற பிள்ளையின் முன்னோர்கள் சென்னையில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.

‘நான் மூன்றாவது தலைமுறை ஆள். சென்னையில் எங்கள் உறவினர்களைக் கண்டுபிடித்து தொடர்புகொள்ள நினைத்தோம். ஆனால், இனி அது கஷ்டம். யார் எங்கே இருக்கிறார்கள் என்பதெல்லாம் எங்கள் நினைவில் இல்லை’ என்கிற பிள்ளைக்கு கிரிக்கெட் ஆர்வம் வந்ததற்கு காரணம், ஆஸ்திரேலியாவின் ஹைடன்.

‘வீட்டில் தற்செயலாக டிவியை பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு உலகக் கோப்பைப் போட்டி. ஹைடன் பந்துகளை விளாசிக் கொண்டிருந்தார். எனக்கு அப்படி ஆட வேண்டும் என்று தோன்றியது. அவர் ஸ்டைலைப் பார்த்தே கிரிக்கெட் ஆடத் தொடங்கினேன். பிறகு சங்ககாரா பேட்டிங் ஸ்டைலை பார்த்து தொடர்ந்தேன். என் வீட்டருகில் இருந்த பள்ளியில் விளையாட்டுக்கான வாய்ப்பில்லை. இதனால் மோரிட்ஸ்பர்க் பள்ளியில் சேர்ந்தேன். ஜாண்டி ரோட்ஸ், கெவின் பீட்டர்சன் ஆகியோர் அங்கு கிரிக்கெட் பயிற்சியளித்து கொண்டிருந்தார்கள். இது பழமையான பள்ளி. புகழ்பெற்ற கிரிக்கெட் மற்றும் ரக்பி வீரர்கள் இங்கிருந்து உருவாகி இருக்கிறார்கள். இங்கு ஐந்து வருட படிப்பு. கூடவே கிரிக்கெட்டையும் கற்றேன். பிறகு, பிரிடோரியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். இங்கிருந்துதான் டிவில்லியர்ஸ், டுபிளிசிஸ், மோர்க்கல், மார்க்ரம், லுங்கி நிகிடி உட்பட பலர் வந்திருக்கிறார்கள். தொடர்ந்து கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டேன். கடந்த ஜூன் மாதம் ஜூனியர் உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் உலகக் கோப்பைக்கான அணியிலும் இடம் கிடைத்தது’ என்கிற பிள்ளை, அந்த நாட்டு சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறார்.

‘இப்போது டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருக்கிற நிகிடி என் நண்பர். இரண்டு பேரும் ஒன்றாக விளையாடி இருக்கிறது. மார்க்ராம் கூடவும் அடியிருக்கிறேன். சிறப்பாக விளையாடினால், சீனியர் அணியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும்’ என்கிற பிள்ளை ஒரு பக்கம் கிரிக்கெட்டையும் மற்றொரு பக்கம் பொருளாதார படிப்படையும் தொடர முடிவு செய்திருக்கிறார்.

இது, பெற்றோர் வேண்டுகோள் என்கிறார், இந்தச் செல்லப் பிள்ளை!