தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக அதிகரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணிகளில் உள்ளவர்களின் ஓய்வுபெறும் வயது இதுவரை 58 ஆக இருந்து வந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இது அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும் என்றும் இந்த மாதத்தில் ஓய்வு பெறவுள்ளவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நேரத்தில் குறிப்பிட்ட துறையில் இருக்கும் அரசுப் பணியாளர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர் அவர்களில் ஓய்வு பெறுபவர்களும் இருக்கிறார்கள். இந்தக் கடினமான சூழலில் அரசு ஊழியர்களை ஓய்வு பெற அனுமதித்தால் மக்கள் பணியில் தொய்வு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இது நிஜமான காரணமாகத் தெரியவில்லை, தமிழக அரசுப் பணியாளர்களில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகள் உண்டு. அவர்களில் இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறவர்கள் எண்ணிக்கை சுமார் 25,000 முதல் 30,000 வரை இருக்கும். அந்த ஊழியர்களுக்கு அரசு வழங்க வேண்டிய ஓய்யூதிய பலன் 5,100 கோடி ரூபாய். கொரோனா நேரத்தில் இந்தப் பணத்தைத் தற்போதைக்கு தராமல் தள்ளிப்போடுவதுதான் அரசின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
ஆனாலும், ஒரு வருடத்துக்குப் பிறகு கண்டிப்பாக இந்த பணத்தைத் தந்தே ஆக வேண்டும். வரும் மாதம் அரசுப் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க போதுமான நிதி இல்லை.மேலும், ஓய்வூதியதாரர்களுக்கும் பெருந்தொகையைக் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, ஓய்வைத் தள்ளிப்போட்டால் அடுத்த மாதம் சம்பளம் கொடுப்பதைச் சமாளிக்கலாம். அதனால்தான் இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளதாகச் சட்டமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த கோடைக்காலத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, அதில் அதிமுக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது வேறு கட்சியின் ஆட்சி வருமா என்பது தெரியாது. புதிதாக ஆட்சிக்கு வருபவர் அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதிய பணமான 5,100 கோடி ரூபாயை எப்படிக் கொடுப்பார் என்பதும் சிக்கலாம விஷயம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
- செய்தியாளர் ரமேஷ்