சிறப்புக் களம்

"எங்கள் மண் எங்கள் உரிமை" - மறந்துபோன தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் தொகுப்பு

"எங்கள் மண் எங்கள் உரிமை" - மறந்துபோன தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் தொகுப்பு

Veeramani

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1700கள் முதலே கிளர்ச்சி குரல்களை எழுப்பியவர்களில் முக்கியமானவர்கள் தமிழர்கள். ஆனாலும் இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் வ.உ.சி, வேலு நாச்சியார், பாரதியார் உருவர் தாங்கிய ஊர்திகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் நிலையில், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பங்களித்த சில தமிழர்களின் வரலாற்றை காண்போம்...

வ.உ.சிதம்பரம் பிள்ளை(1872 - 1936):

இந்திய விடுதலைப் போராட்டத்தில் சுதேசி சுயராஜ்ஜிய நெருப்பேந்திய முதல் நபர் தமிழ்நாட்டை சேர்ந்த வ.உ.சிதான். எல்லோரும் விடுதலைப் போராட்டத்தை மிதவாதம், தீவிரவாதம், ஒத்துழையாமை என்கிற ரீதியில் அணுகிக்கொண்டிருந்த போது வர்த்தக ரீதியாக அணுகியவர் சிதம்பரனார். ஆங்கிலேயர்கள் வணிக நோக்கத்திற்காகவே பல நாடுகளை பிடித்தனர், இந்தியாவையும் அதே நோக்கத்தில்தான் கைப்பற்றினர். எனவே வணிகத்தின் மூலமே அவர்களை எதிர்கொள்ளவேண்டும் என்று தனது சொத்துக்களை விற்று, இன்னும் பலரிடமும் பொருள் திரட்டி ரூ.10 லட்சம் மதிப்பில் 1906ஆம் ஆண்டில் சுதேசி கப்பலை மிதக்கவிட்டார்.

தொழிலாளர்கள் கடுமையான பணி நெருக்கடியில் தவித்த அப்போதைய காலகட்டத்தில் 1908 ஆம் ஆண்டில் சிதம்பரனாரின் முன்னெடுப்பில் தூத்துக்குடி நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் இதுதான். இதுபோல ஆங்கிலேயரின் ஆணிவேரையே அசைத்து பார்த்த சிதம்பரனாரை 1908 முதல் 1912 சிறையில் அடைத்து அவருக்கு கொடும் தண்டனைகளை விதித்தது ஆங்கிலேய அரசு. வழக்கறிஞர் பணி மூலமாக சேர்த்த சொத்தையெல்லாம் நாட்டுக்காக இழந்து தன் இறுதிக்காலத்தில் நோயுடனும், வறுமையுடனும் போராடி உயிர் துறந்தார் சிதம்பரம் பிள்ளை.

பாரதியார்( 1882 - 1921):

தமிழகத்தின் விடுதலை வேள்வியை தீப்பிழம்பாய் எரிய வைத்த அனல் வார்த்தைகள் பாரதியினுடையது. 'உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே' என வீர முழக்கமிட்ட பாரதியாரின் வார்த்தைகள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விடுதலைப்போரை வீறு கொள்ள வைத்தவர். பாடல்கள், கவிதைகள் மூலமாக மட்டுமின்றி சுதேசமித்திரன்,இந்தியா உள்ளிட்ட பல பத்திகைகளிலும் ஆசிரியராக இருந்து மக்களிடம் விடுதலை உணர்வை தட்டி எழுப்பியவர்.

வேலு நாச்சியார்(1730 - 1796):

சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாதரின் மனைவி வேலுநாச்சியார், ஆங்கிலேயரை ஆரம்பம் முதலே எதிர்த்த மன்னர்களில் முக்கியமானவர் முத்துவடுகநாதர். எனவே ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார் இவர். அதன்பின்னர் சிவகங்கை சீமை ஆங்கிலேயரின் ஆளுகையின் கீழ் வந்தது, இந்த சூழலில் 8 ஆண்டுகாலம் திண்டுக்கல், விருப்பாச்சி, அய்யம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு 1780 ஆம் ஆண்டு ஹைதர் அலி மற்றும் மருது சகோதரர்களின் உதவியுடன் மீண்டும் சிவகங்கையை கைப்பற்றினார் வேலு நாச்சியார். இந்திய விடுதலைப்போரில் பங்கேற்ற முதல் பெண்மணியும் இவர்தான். ஆங்கிலேயர்களிடம் இழந்த ஆட்சியை போரிட்டு மீண்டும் வென்ற ஒரே வீரப்பெண்மணியும் இவர்தான்.



தீரன் சின்னமலை(1756 - 1805):

கொங்கு நாட்டின் ஓடாநிலையை ஆண்டவர் தீரன் சின்னமலை, இவர் திப்பு சுல்தானுடன் நல்ல நட்புறவில் இருந்தார். தொடக்கம் முதலே ஆங்கிலேய ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சின்னமலை, 1782இல் திப்பு சுல்தானின் ஆங்கிலேய எதிர்ப்பு போருக்காக 40 ஆயிரம் வீரர்களை திரட்டி சென்று அவருக்கு பெரும் வெற்றியை தேடித்தந்தார். ஆங்கிலேயரை எதிர்க்க நெப்போலியனிடம் உதவிக் கேட்டு திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் ஆங்கிலேயருக்கு எதிரான தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். 1801 இல் ஈரோடு, 1802இல் ஓடாநிலை, 1804இல் அரச்சலூரில் ஆங்கிலேயப்படையை வீழ்த்தினார் சின்னமலை. வழக்கம்போல சூழ்ச்சிகள் மூலமாகவே இவர் கைது செய்யப்பட்டு 1805 ஆம் ஆண்டு ஜூலை 31இல் தூக்கிலிடப்பட்டார்.


மருது சகோதரர்கள்:

மருது சகோதரர்கள் என அழைக்கப்பட்ட பெரிய மருது(1748 -1801), சின்ன மருது ( 1753-1801) வேலு நாச்சியாரின் படைக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயரை தோற்கடித்தவர்கள். வேலு நாச்சியாருக்கு பின்னர் சிவகங்கையை மருதுபாண்டியர் ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சியின் போது கேரளா பழசி ராஜா, திப்பு சுல்தானின் தளபதி தூந்தாகி, தேளி யாதுலர் ,விருப்பாச்சி கோபாலர், ஊமைத்துரை உள்ளிட்டோருடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். ஆங்கிலேயருக்கு எதிராக உருவாக்கப்பட்ட நாடு தழுவிய முதல் கூட்டமைப்பு இதுதான். 1801 இல் ஆங்கிலேயரை விரட்ட சின்னமருது வெளியிட்ட 'ஜம்புத் தீவு பிரகடனம்' நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்று போர் முரசு கொட்டியது. இதன் பின்னர் பல சூழ்ச்சிகள் மூலமாக மருது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 1801 அக்டோபர் 24 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

பூலித்தேவன்(1715-1767):

நெற்கட்டான் செவ்வலை ஆண்ட பூலித்தேவன்தான் 1751 ஆம் ஆண்டிலேயே வெள்ளையனே வெளியேறு என முழக்கமிட்ட முதல் நபர் ஆவார். ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்து 1750,1755,1756,1760, 1766 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து ஆங்கிலேயருடன் நடந்த அனைத்து போர்களிலும் வென்றவர் பூலித்தேவன்.

குயிலி:

சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் மெய்க்காப்பாளராக இருந்தவர் குயிலி, 1780 ஆம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து சிவகங்கையை மீட்க வேலு நாச்சியார் நடத்திய போரில், தற்கொலை படையாக மாறி உடலில் எண்ணெய் பூசிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கிற்கு தீவைத்து தன்னுயிரையே பலியாக்கி சிவகங்கை சீமையின் வெற்றிக்கு உதவியவர் இவர்.


திருப்பூர் குமரன்(1904-1932):

காந்திய கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். 1932 ஆம் ஆண்டு நடந்த அறப்போராட்டத்தில் கலந்துகொண்ட குமரன் , காவலர்கள் தாக்கிய போதும் இந்திய தேசியக்கொடியை கைவிட மறுத்ததால் அவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

அழகு முத்துக்கோன்(1710-1759):

கட்டாலங்குளம் சீமையின் மன்னராக இருந்த அழகு முத்துக்கோன் ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்ததால், மருதநாயகத்தை அனுப்பி அவர் மீது போர் தொடுத்தனர் கிழக்கிந்திய கம்பெனியினர். இந்த போரில் இறுதி வரை போராடி வரிகட்டவும், மன்னிப்பு கேட்கவும் மறுத்து பீரங்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.