குரங்கணி மலையில் தீ வேகமாக பரவுவதை எச்சரிக்கும் செய்திகள் கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது உறுதியாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் மகளிர் தினத்தையொட்டி டிரெக்கிங் சென்றவர்கள், அங்கு தீடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்தக் கொடூரமான விபத்தில் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். தமிழகத்தில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்துகளில் 10 மனித உயிர்கள் பலியாகியிருப்பது அநேகமாக இதுதான் முதல்முறை.
இந்தச் சம்பவத்தில் இரண்டு விஷயங்களில் பெரும்பாலானோர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒன்று, டிரெக்கிங் சென்றவர்கள் குறித்தது. முதலில் 39 பேரும் அனுமதியில்லாமல் டிரெக்கிங் சென்றுள்ளார்கள். இது வனத்துறையில் உள்ள ஓட்டைகளை காட்டுவதாக பலரும் கூறுகிறார்கள். அதேபோல், துளியும் டிரெக்கிங் குறித்த அனுபவம் இல்லாமலும், சிறு வயது பிள்ளைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்கள். மற்றொன்று இரண்டு நாட்கள் தீ பரவியும் எப்படி வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்தது. அதேபோல், வனத்துறையினருக்குத் தெரியாமல் எப்படி இத்தனை பேர் இரண்டு நாட்களாக காட்டிற்குள் நடமாட முடியும். சில மணி நேரங்கள் முன்கூட்டியே சென்றிருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணி வரை டிரெக்கிங் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் அளித்த தகவலில், ‘மதியம் 2 மணியளவில் ஓர் இடத்தில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் கண் முன்னே புகை மண்டலாக தென்பட்டது. பின்னர்தான் தீ பரவி வருவதை நாங்கள் உணர்ந்தோம். உயிர் பிழைக்க சிதறி ஓடினோம்’ என்று கூறியிருந்தனர்.
ஆனால், காட்டுத் தீ பரவுவதை எச்சரிக்கும் ‘அலாட்’ செய்திகள் காலை 11 மணி முதலே தமிழக வன அதிகாரிகளுக்கு அடிக்கத் தொடங்கியது. இந்திய வனத்துறை ஆய்வு மையத்தில் (டேராடூன்) இருந்து இந்த எச்சரிக்கை செய்திகள் செல்லும். வனப்பகுதியின் ரிமோட் கன்ட்ரோல் பகுதிகளில் காட்டுத் தீயின் வெப்பத்தை உள்வாங்கி எச்சரிக்க பல இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கருவிகள் அதிக அளவில் வெப்பம் உருவானதை அறிவிக்க சிக்னல்களை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கும்.
அப்படி குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ குறித்த முதல் எச்சரிக்கை மணி 11.20க்கு அடித்தது. தமிழக வனத்துறையைச் சார்ந்த 200 அதிகாரிகளுக்கு இந்த எச்சரிக்கை மணி குறுஞ்செய்தி மூலம் சென்றது. அடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் இரண்டுக்கும் மேற்பட்ட எச்சரிக்கை செய்திகள் சென்றன. ஆனால், அதிகாரிகள் அதனை அலட்சியப்படுத்தியுள்ளனர். முதல் எச்சரிக்கை மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை சுமார் 5 மணி நேரம் வனத்துறை அதிகரிகள் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வனப்பிரிவு உதவி பாதுகாவலர் மகேந்திரனுக்கு போலீஸ் தரப்பில் இருந்து முதல் தகவல் கிடைத்துள்ளது. டிரெக்கிங் சென்ற சிலர் தங்கள் அலுவலகத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாக போலீசார் அவரிடம் தெரிவித்தனர். இந்தத் தகவல் கிடைத்து இரண்டு மணி நேரம் கழித்துதான் காட்டுத்தீயில் சிக்கியவர்களின் இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் செல்வதற்கு முன்னதாக குரங்கணி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டனர்.
‘SNPP-VIIRS’ மற்றும் ‘MODIS’ என்ற இரண்டு ரிமோர்ட் சென்சார் கருவிகள் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வனத்துறையின் ஆய்வு மையம் உடனுக்குடன் எச்சரிக்கை மணியை வனத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். அதன்படி தங்களுக்கு காலை 11.12க்கு முதல் தகவல் கிடைத்ததாகவும், பின்னர் வனத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு 11.20க்கும் இ-மெயில் மூலம் அந்தச் செய்தி அனுப்பப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் இரண்டாவது இ-மெயில் 2.29, மூன்றாவது 3.38 மணிக்கும் அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.
வனத்துறை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் விக்ரம் கூறுகையில், “ஒரே நேரத்தில் நாடு முழுவதும் வனத்துறையில் பதிவு செய்துள்ள 18,400 பேருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பிவைக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 236 பேரும் அடங்குவர். அதில் பெரும்பாலானோர் மாவட்ட, தேசிய அளவிலான வன அதிகாரிகள். எப்பொழுதெல்லாம் வனப்பகுதியில் அதிக வெப்பம் உணரப்படுகிறதோ, அப்பொழுது உடனடியாக இமெயில் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்படும். அதேபோல், முழு தகவல்களை வனத்துறை ஆய்வு மையத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
பேரிடர்களை கண்காணிக்கும் இந்த ரியல் டைம் அலார்ட் முறையானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் மூலமாகவும் வனத்துறை அதிகாரிகள் ஆபத்து குறித்த தகவலை பெறலாம் என்ற போதும், செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் வன அதிகாரிகளுக்கு கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். தெலுங்கானா மாநிலத்தின் ஷத்நகர் பகுதியில் உள்ள இஸ்ரோவின் மையத்தில், வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் முதலில் பதிவாகும்.
குரங்கணி வனப்பகுதியின் வடக்கு பகுதியில் நேற்று மதியம் 2.30 மணி வரை தீயின் தாக்கம் இருந்ததும் பதிவாகியுள்ளது. ஆனால், தமிழக வனத்துறையின் புவியியல் தகவல் பிரிவு அதிகாரிகள் தகவல்களை புறக்கணித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில்தான் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பால்தேவ் மூத்த அதிகாரிகளை அழைத்து டிரெக்கிங் சென்று சிக்கியவர்களுக்கு உதவி செய்யும்படி கூறியுள்ளார். அதற்குபின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்ப்பதற்குள் கிட்டத்தட்ட அவர்கள் அபாய கட்டத்திற்குள் சென்றுவிட்டார்கள்.
காட்டுத்தீ எச்சரிக்கைகள் 2016ம் ஆண்டை காட்டிலும் 2017-ல் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. 2016 இல் 15,937 ஆக இருந்து, 2017 இல் 35,888 ஆக அதிகரித்தது. தமிழகத்திலும் இது 95ல் இருந்து 301 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் இந்தத் தீ விபத்துகள் ஜனவரி முதல் மே மாதங்களில் ஏற்படுகின்றன.
தகவல்: டைம்ஸ் ஆப் இந்தியா