வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியாகிவரும் செய்திகள் மற்றும் வீடியோக்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் வெறும் வதந்தி என தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் விளக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அச்சத்தால் வட மாநிலத்தவர் பலரும் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. மறுபுறம் தாங்கள் தமிழ்நாட்டில் தாங்கள் பத்திரமாக இருப்பதாக வட மாநிலத்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் பின்னலாடை நிறுவனங்களில், அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல என்றும், திருப்பூர் மாவட்டத்தில் அப்படி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்றும், மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உதவி எண்ணையும் அறிவித்துள்ளார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.
இருப்பினும் அவர்களுக்கு இந்நிலையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பாதிக்கப்பட்ட பீகார் மக்கள் உள்ளிட்டோரை இன்று மற்றும் நாளை பீகார் குழு சந்திக்கவிருப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்காள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மைவிட வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக, வேலைக்காக பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வருவது வழக்கம் எனவும், அவர்களுக்கு தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதிசெய்தி வருகிறது.
இல்லாத ஒரு பிரச்னையை வைத்து இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப்போல பரப்பியதே இதன் தொடக்கமாக அமைந்துள்ளது. இதுகுறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் நேராது என உறுதியாக சொல்லி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைமையகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக பத்திரிகை ஆசிரியர் தெய்னிக் பாஸ்கர், தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் மற்றும் பிரசாந்த் உமாராவ் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கண்டறிந்து கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்செய்தி பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொய்செய்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.