சிறப்புக் களம்

பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்: "வீம்பு வேலை", "சுயநலம்தான் ஆகமம்" - நாராயணன் Vs சுப்புலட்சுமி

பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்: "வீம்பு வேலை", "சுயநலம்தான் ஆகமம்" - நாராயணன் Vs சுப்புலட்சுமி

sharpana

‘பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் அறிவிப்பு வரவேற்புடன் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. இந்த நகர்வு குறித்து 'தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம்' மாநிலத் தலைவர் நாராயணனிடமும், திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனிடமும் பேசினோம்…

நாராயணன் (தமிழ்நாடு பிராமணர்கள் சங்க மாநிலத் தலைவர்): 

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

 “தமிழகத்தில் ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் கோயில்கள், கடைப்பிடிக்காத கோயில்கள் என பலதரப்பட்ட கோயில்கள் உள்ளன. சிவன் கோயில்களில் சிவாச்சாரிய குருக்கள் மட்டுமே அர்ச்சனை செய்வார்கள். அங்கு எல்லா பிராமணர்களும் போய் பண்ண முடியாது. அது, அவர்களின் குடும்ப உரிமை. சாதி உரிமை என்று கெட்ட நோக்கோடு பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள் பகுத்தறிவுவாதிகள். அதேமாதிரி, வைணவ கோயில்களில் பட்டாச்சாரியார்கள் மட்டும்தான் அர்ச்சனை செய்வார்கள். அதுவும் குடும்ப உரிமைதான். அங்கும் போய் மற்ற பிராமணர்கள் போய் அர்ச்சனை செய்ய முடியாது. சிவாச்சாரியார்களும் பட்டாச்சாரியார்களும் இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்பவர்கள் பூசாரிகள். இவர்களின் கோயில்களிலும் பட்டாச்சாரியார்களும் சிவாச்சாரியார்களும் போய் அர்ச்சனை செய்ய முடியாது. அனைத்தும் குடும்ப உரிமைதான். ஆனால், குடும்ப உரிமையை சாதி உரிமை என்று பொய் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். கோயில்களுக்குள் பிராமணர்கள் மட்டுமே செல்கிறார்கள் என்பது தவறு. பிராமண  சமூகத்தினரிலேயே பல பிரிவினர் உள்ளே நுழைய முடியாது. முதலில், இந்த உண்மையை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெண்கள் அர்ச்சகராவதற்கு ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் இடம் கிடையாது. எந்த பக்தர்களும் பெண்களை அர்ச்சகராக்க வேண்டும் என்று எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. விரும்பவும் இல்லை. இவர்கள், சம உரிமை என்பதை மட்டுமே பார்த்து பேசுகிறார்கள். தமிழக கிராமப்புறங்களில் பல பெண்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். மைலாப்பூரிலுள்ள கோயிலில் பெண் அர்ச்சகர் இருந்துள்ளார். ஆகம விதிமுறைகள் பின்பற்றப்படும் கோயில்களில் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது. ஆகம விதிமுறை இல்லாத கோயில்களில் நியமித்துக்கொள்ளட்டும். மேல் மருவத்தூர் பங்காரு அடிகள் நடத்தும் கோயிலில் ஆகம விதிகள் கடைப்பிடிக்கவில்லை. தனியாக கோயிலைக் கட்டி ஆன்மிக சேவை செய்கிறார். இதுபோன்ற கடைப்பிடிக்காத கோயில்களில் பண்ணிவிட்டுப் போகட்டும். ஆனால், ஆகம விதிமுறைகளை கடைபிடிக்கும் கோயில்களில் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள். இது நம்பிக்கை அடிப்படையிலும் பக்தி அடிப்படையிலும் வந்த நடைமுறை. இந்த விஷயத்தில் அரசு தலையிடக்கூடாது. பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பது என்பது உடனடி நடைமுறை சாத்தியமில்லை. எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் ஆன்மிக அறிஞர்களைக் கொண்டு பரிசீலனை செய்து முடிவு எடுக்கலாம்.”

இது, பெண்களின் உரிமைகளை தடுப்பதுபோல் ஆகாதா?

“பெண்கள் யாருமே எங்களை அர்ச்சகர்களாக்குங்கள் என்று கேள்வி கேட்கவே இல்லை. எந்தப் பெண் நான் கருவறைக்குள் செல்கிறேன் என்று கேட்கிறார்? காட்டுங்களேன்?"

தமிழக அரசுதான் பெண்கள் விருப்பப்பட்டால் பயிற்சி கொடுக்கிறோம் என்கிறார்களே?

“முதல் விஷயம் பெண்களுக்கு வழிமுறைகள் மந்திரங்கள் தெரியாது. அப்படியே வந்தாலும், ஆகம விதிகளையே 5 வருடம் படிக்கவேண்டும். இதெல்லாம் வீம்புக்கு பண்ணுகின்ற வேலை. ஒன்னும் ஐடி வேலை, அரசு வேலை போன்றது கிடையாது. வருமானமுள்ள தொழிலும் கிடையாது. தொழிலும் சேவையும் கலந்தப் பணி."

பாஜக தலைவர்கள் எல்.முருகன் - வானதி சீனிவாசன் ஆதரித்துள்ளார்களே?

“அவர்களின் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் கூறுவது நடைமுறை சாத்தியமில்லாத யோசனை. நாங்களும் பெண்களை மதிக்கின்றவர்கள்தான். எங்கள் பிராமணர் சமூகத்தில் பெண்களுக்கு எல்லா விதமான உரிமைகளையும் கொடுக்கின்றோம். தமிழகத்தில் முதன்முதலில் பெண்களை கல்வி கற்கவும் வேலைக்கும் அனுப்பிய சமூகம் எங்களுடையதுதான். ஆனால், எங்கள் சமூகப் பெண்களே அர்ச்சகர்களாகுகிறோம் என்றாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆகம விதிமுறை நம்பிக்கை அடிப்படை. பெண்களை நியமிப்போம் என்பதை சொல்ல அரசுக்கு அதிகாரம் இல்லை.”

சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக, துணை பொதுச்செயலாளர்)

 பெண்கள் அர்ச்சகர்கள் ஆவதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 “பெண்கள் விருப்பப்பட்டால் அர்ச்சகர் பயிற்சியை பெறலாம் என்று அறிவித்துள்ள தமிழக அரசின் முடிவை ஒரு பெண்ணாக ரொம்ப சந்தோஷமாகப் பார்க்கிறேன். எல்லா துறையிலும் தகுதியான பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

அதற்காக, எல்லா பெண்களுக்கும் அல்ல. அர்ச்சகருக்கென்றே படித்த தகுதியானவர்களை நியமிக்கவேண்டும். ஆண் கருவறை உள்ளே செல்லும்போது ஏன் பெண் செல்லக்கூடாது? 21 ஆம் நூற்றாண்டிலும் ஆண் பெண் பாகுபாடு ஏன்?

பிராமணர்களைப் பொறுத்தவரை பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களுக்கே சுதந்திரம் இல்லை. அவர்கள் வீட்டு பெண்களை மற்ற சமூக பெண்களைவிட மோசமாகத்தான் நடத்துகிறார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் மனோபாவம் அவர்களுக்கு என்றுமே உண்டு என்பதால் பெண்கள் ஆண்களைவிட மேலே வருவதற்கு விரும்புவதில்லை. ஆண், பெண் இருவருக்குமே சம உரிமைகொடுக்கப்படவேண்டும். ஆண்கள் அர்ச்சகர்கள் ஆகக்கூடாது என்று எந்தப் பெண்ணாவது தடுக்கிறோமா? தகுதி இருந்தாலே போதும். யார் வேண்டுமென்றாலும் அர்ச்சகர் ஆகலாம். பெண் என்பதால் மட்டுமே புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரோவில் பெண்கள் செயற்கைகோள் அனுப்பவில்லையா?”

ஆனால், ஆகம விதிமுறைப்படி நியமிக்கக்கூடாது என்கிறார்களே?

  “ஆகம விதிகளைச் சொல்லித்தான் நம்மை சூத்திரர்கள் என்று ஒதுக்கி வைக்கிறார்கள்.  அதனையெல்லாம் உடைத்துக்கொண்டுதான் நாம் மேலே வந்துகொண்டிருக்கிறோம். பெண்களுக்கும் ஆகம விதிப்படி பயிற்சிகளைக் கொடுத்து நியமிக்கலாம். பெண்களும் அர்ச்சகராக வந்துவிட்டால் நமது வருமானம் போய்விடுமே என்ற ஒரே காரணத்தினால்தான் அச்சப்படுகிறார்கள். அப்படியே, இவர்கள் பெண்களின் மாதவிடாய் காலங்களை காரணம் காட்டினாலும், அந்த நேரத்தில் மட்டும் பெண்களுக்கு அறிவியல்பூர்வமாக ஓய்வு தேவை என்பதால், ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்.”

இந்த அறிவிப்பை பெண்களே ஆதரிக்கவில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்களே?

”விரும்பும் பெண்கள் வரட்டும். விரும்பாதவர்கள்  வரவேண்டாம். இப்படித்தான், காவல்துறையில் பெண்களை நியமித்தால் பிரச்னை வரும் என்றார்கள். ஆனால், பெண்கள் அதையெல்லாம் உடைத்துவிட்டார்களே? சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களே? ஆண்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற சுயநலம்தான் ஆகமம். சமையலறையில் இருப்பதே பெண்களின் வேலை என்று நினைக்கிறார்கள். பெண்கள் படித்து முன்னேறிவிட்டால் ஆண்களைவிட புத்திசாலிகள். அதனால், தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதை முன்கூட்டியே முடிவெடுத்து ஆகம விதிமுறைப்படி பெண்கள் வரக்கூடாது என்று கொண்டு வந்துவிட்டார்கள்.

ஆகமம் யார் கொண்டுவந்தது? அவர்கள் கொண்டுவந்தது தானே? பெண்கள் விருப்பப்படவில்லை என்று சொல்லி சொல்லி பெண்கள் மனதில் ‘நம்மால் முடியாது போல’ என்ற தவறான சிந்தனைகளை விதைக்கிறார்கள். பெண்களை அர்ச்சகர்களாக நியமித்தால் ஆண்களைவிட இன்னும் சிறப்பாக பணிபுரிவார்கள்.”