2014-ம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் கத்தி. அந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது; காரணம் தயாரிப்பு நிறுவனமான லைகா. லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் வெடித்தது இந்த சர்ச்சை.
தமிழகத்தில் இப்படத்தை வெளியிடக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் படத்தின் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ராஜபக்சேவை கடுமையாக எதிர்க்கும் மக்கள், அவரின் நண்பரான சுபாஸ்கரனின் நிறுவனம் இங்கு நுழையக் கூடாது என்றே கருத்தை பதிவிட்டனர்.
இதனை அடுத்து லைகா நிறுவனம் தங்களுடைய பார்ட்னர் நிறுவனமான ஐங்கரான் பெயரில் படத்தை வெளியிட தீர்மானித்தது. அப்படி நாட்கள் ஓட ஓட இந்த விவகாரம் ஆறியது. அப்போது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கத்தி படக்குழு லைகா என்றே பெயரைக் குறிப்பிட்டு இருந்தது.
பெரிய எதிர்ப்பை சந்தித்த லைகா அதன் பிறகு கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, 2.ஓ, காப்பான், தர்பார் உள்ளிட்ட பல பெரிய படங்களை இயக்கியது. இந்தியன் 2, பொன்னியின் செல்வன் போன்ற படங்களையும் இயக்கி வருகிறது. தற்போது அதே ஈழத்தமிழரின் விவகாரத்தை குறிப்பிட்டே விஜய் சேதுபதியின் 800 திரைப்படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரும், ராஜபக்சேவுக்கு நெருக்காமனவர் முரளிதரன், எனவே அவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை விஜய் சேதுபதி புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே இது குறித்து தர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தையா முரளிதரன் வேடத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் '800' என்ற திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதே தவிர, இதில் எந்தவித அரசியலும் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், லைகா பிரச்னையை சுட்டிக்காட்டி அதுபோல இதுவும் ஒரு கலைசார்ந்த விஷயம் என்றும் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் பலரும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முடிவு எடுத்துள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்பு குரல்களுக்கு விஜய் சேதுபதி செவிசாய்ப்பாரா அல்லது லைகா பிரச்னை போல இதுவும் நீர்த்துபோகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.