சிறப்புக் களம்

தமிழ் சினிமாவில் தலைத்தூக்கும் அரசியல் கதைக்களம்

தமிழ் சினிமாவில் தலைத்தூக்கும் அரசியல் கதைக்களம்

webteam

தமிழ் சினிமாவில் முன்பு எல்லாம் நிறைய கிராமத்து கதைகள் வரும்; எப்போதாவதுதான் அரசியல் கதைகள் வரும். மம்முட்டிக்கு ஒரு ‘மக்களாட்சி’, சத்யராஜூக்கு ஒரு ‘அமைதிப்படை’, பாரதிராஜாவிற்கு ஒரு ‘என் உயிர் தோழன்’. இந்தப் படங்களை என்றைக்குமே மறக்கவே முடியாது. 

இன்று பெரும்பாலான தமிழக கிராமங்கள் நகரங்களாக மாறிவிட்டன. கிராமத்து கலாச்சாரத்திற்கும் நகரத்து நாகரிக வாழ்க்கைக்கும் இப்போது இடைவெளியே இல்லை. ஆகவே தமிழ் சினிமாவிலும் கிராமம் என்பது காணாமல் போய்விட்டது. ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற ஒரு கிராமத்து கதை பார்க்க இனி மக்கள் பல வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும்.

ஏனென்றால் தமிழ் சினிமா அரசியல்மயமாகிவிட்டது. இரண்டு சர்ச்சையான அரசியல் வசனத்தை வைத்தால் படம் ப்ளாக்பாஸ்டர் ஹிட். கொஞ்சம் விமர்சித்தோமா? படத்தை பரபரப்பாக்கினோமா என முன்னேறி வருகிறது சினிமாதுறை. கோடம்பாக்கத்தில் விரைவில் அடுத்தடுத்து பல அரசியல் படங்கள் வெளியாக உள்ளன. அந்தளவுக்கு பல படங்கள் அரசியல் பின்புலத்தை உள்வாங்கிக் கொண்டு உருவாகி வருகின்றன. 

விஜய் ‘சர்கார்’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சர்கார்’ அஃமார் அரசியல் படம் என்கிறார்கள். ஏற்கெனவே தொடர்ச்சியாக சில படங்களில் விஜய் நடித்து வருகிறார். அதன் இன்னொரு வடிவம் இந்த ‘சர்கார்’. இந்தப் படத்தின் கதையை பார்த்து விமர்சிப்பதற்கு முன்பே விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாபெரும் சர்ச்சையாகிவிட்டது. அமெரிக்கவாசியாக இருக்கும் விஜய் இந்தியா திரும்பி பின் என்ன நடக்கிறது? அவர் எப்படி அரசியல்வாதிகளுக்கு எதிராக மாறுகிறார் என்பதே இந்தப் படத்தின் கதை என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். முன்பே ‘மெர்சல்’ அரசியல் சாயம் பூசப்பட்டதால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சர்ச்சையை கிளப்பியது. பின் வெற்றியை ஈடியது. ஆக, முருகதாஸ் இந்தப் படத்தில் இன்னும் அரசியல் ஆழம் பார்த்திருப்பதாக தகவல். இந்தப் படம் வெளியானால் சினிமா வட்டாரத்தில் அனல் பறக்கிறதோ இல்லையோ? அரசியல் களத்தில் சூடு பறக்கும் என்கிறார்கள் பலர். ஆக, இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் ‘சர்கார்’ தீப் பொறிக்கும் என்பது உறுதி.

சூர்யா ‘என்ஜிகே’

செல்வராகவனும் சூர்யாவும் முதன்முறையாக இணையும் திரைப்படம். இந்தப் படமும் ஒரு அரசியல் த்ரிலர் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் அமைந்திருந்தது. சேகுவேராவின் தோற்றத்தில் அவர் தொப்பி அணிந்து கொண்டு காட்சி தந்தார். ‘என்ஜிகே’ என்றால் ‘நந்த கோபாலன் குமாரன்’ என்று கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதன் 60 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விட்டன. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதுவும் தீபாவளிக்குதான் வெளியாக உள்ளது. பொதுவாக அரசியல் கதாப்பாத்திரங்களில் சூர்யா அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ‘ஆயுத எழுத்து’ கூட ஒரு ப்ரீயட் ஃபில்தான். ஆனால் ‘என்ஜிகே’ நேரடி அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பக்கம் ‘சர்கார்’ அந்தப் பக்கம் ‘என்ஜிகே’ என இந்த வருஷ தீபாவளி அரசியல் அதிரடியை அள்ளித் தெளிக்க உள்ளது உறுதி.

மாநாடு’

வெங்கட் பிரபுவின் சிஷ்யன் ரஞ்சித் ‘அட்டகத்தி’யில் தொடங்கி ‘மெட்ராஸ்’, ‘காபாலி’, ‘காலா’ என அரசியல் ஆட்டத்தை திரைக்கதையில் தீயாக தீட்ட ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவரது குருநாதர் வெங்கட் பிரபு காமெடி ஆட்டத்தை மட்டுமே ஆடிக் கொண்டிருந்தார். முதன் முறையாக அவர் அரசியல் களம் காணப் போகும் திரைப்படம் ‘மாநாடு’. ஏற்கெனவே காவிரி பிரச்னை, அரசியல் பிரச்னை குறித்து விநோதமான தீர்வுகளை முன் வைத்து வரும் சிம்பு இதில் இணைகிறார். நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் சிலர். ‘மங்காத்தா’வின் மறுபக்கம் என்றும் கூறுகிறார்கள். இது போதாதென்று படக்குழு வெளியிட்ட போஸ்டரில் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், அம்பேத்கர் என அரசியல் வாடை அதிகம் தெரிந்தது. போஸ்டரில் இருந்த ‘எ வெங்கட் பிரபு பாலிடிக்ஸ்’ வாசம் இந்தப் படம் அரசியல் கதையைதான் முன் மொழிய இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது. 2019 கோடை கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

‘எல்கேஜி’

முதலில் யாரோ ஃபேஸ்புக்கில் ஒரு சுவர் விளம்பரத்தை வெளியிட்டார்கள். அங்கே பற்றிக் கொண்டது அரசியல் தீ. ஆ.ஜே.பாலாஜி தனிக் கட்சி திடங்க இருப்பதாக பலரும் விமர்சிக்க தொடங்கினர். அவரும் அந்த சுவர் விளம்பரத்தை ட்விட்டரில் எடுத்து போட்டு விரைவில் அறிவிப்பேன் என்றார். அப்புறம் சொல்ல வேண்டுமா? கருத்து சொல்ல பலர் கிளம்ப, பாலாஜியை மையம் கொண்டது சர்ச்சை. அதற்கு ஏற்ப ஜல்லிக்கட்டு மாடு, கலர்ஃபுல்லான கொடி என சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தினார் பாலாஜி. பிறகுதான் தெரிந்தது அது அவர் நடிக்க போகும் அரசியல் சினிமா என்பது. இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். பாலாஜியே கதை எழுதி நடிக்கிறார். நாஞ்சில் சம்பத் கூட இதில் நடிப்பதாக தெரிகிறது. ஆக, தமிழ் சினிமா உலகில் ஆர்.ஜே.பாலாஜிகூட அரசியல்வாதியாகி விட்டார். 

‘நோட்டா’

‘அர்ஜூன் ரெட்டி’ மூலம் அதிக செல்வாக்கை சம்பாத்தித்த நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாக இருக்கும் படத்திற்குதான் ‘நோட்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இதன் பூஜை கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தேவரகொண்டா விரலில் மை வைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். ஆக, தேர்தல் அரசியலை முன் வைத்து இப்படத்தின் கதை பின்புலன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ பட நாயகி மெஹ்ரீன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா முதலமைச்சர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு அரசியல் த்ரிலர் திரைப்படம். 

‘அண்ணனுக்கு ஜே’ 

‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள திரைப்படம். இதனை ராஜ்குமார் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர் முழுவதும் அரசியல் நெடியை கிளப்பி விடுகிறது. ‘30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி?’ என நாயகன் கையில் புத்தகத்தை வைத்து படிப்பதைப்போல உருவாக்கப்பட்ட போஸ்டர் பரவலாக கவனிக்கப்பட்டது. காமெடி கலந்த அரசியல் கதையாக இந்தப் படம் இருக்கும் எனக் கூறியிருக்கிறார் இயக்குநர். காமெடி என்றாலும் இது அரசியல் படம்தான். ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, ராதாரவி என பலர் இதில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ளார். படத்தினை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அரசியல் களத்தில் அடிக்கடி அடிபடுபவர் இவர். ஆகவே அவரது ரசனையை ஈர்த்தக் கதையில் அரசியல் விமர்சனத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.