கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்தே ஓடிடி குறித்த விவாதம் தமிழ் சினிமாவில் ஓயாமல் இருந்து வருகிறது. ஆனால், சில பல சலசலப்புகளைத் தாண்டி, ஓடிடி தளங்களில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதுகுறித்து சற்றே விரிவாக பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன் மலையாள படங்களை வெளியிடுவதற்காக பிரத்யேக ஓடிடி தளம் ஆரம்பிக்கப்போவதாக கேரள அரசு அறிவித்த உடனே, தமிழ் மொழிக்கும் தனி ஓடிடி தளம் ஏற்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என கோரிக்கையை எழுப்பினார் இயக்குநர் சேரன். இந்தக் கோரிக்கையை தமிழ் சினிமாவில் இருக்கும் பலரும் ஆதரிக்க தொடங்கினர்.
இந்த ஆதரவு குரலுக்கான பின்னணி சமீபகாலமாக ஓடிடி தளங்களில் அதிகரித்துள்ள தமிழ் சினிமாவின் பங்களிப்பின் காரணமாக எழுந்தது. ஓடிடி தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் மலையாள படங்களுக்கு நிகராக தமிழ் சினிமாவின் பங்களிப்பும் இருக்கிறது. என்றாலும், மலையாள சினிமா போல் அல்லாமல், நிறைய எதிர்ப்புகளையும் சலசலப்புகளையும் தாண்டியே ஓடிடி தளங்களில் தமிழ் சினிமா தனது இருப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது.
கொரோனா முதல் அலையின்போது போடப்பட்ட ஊரடங்கு காரணமாக திரையரங்கள் மூடப்பட கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட படங்கள் பெட்டிகளில் முடங்கி கிடந்தன. இதனால், பெரும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது தமிழ் சினிமா. நஷ்டத்தை சமாளிக்க மாற்று வழியாகத்தான் ஓடிடி தளங்களின் பக்கம் கவனத்தை திருப்பினர் தமிழ் சினிமாத் துறையினர். ஓடிடியை நாட தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பெரிதும் எதிர்ப்புகள் எழுந்தன.
இத்தகைய எதிர்ப்புகளை மீறி தமிழ் சினிமாவில் ஓடிடி-க்கான வரவை ஏற்படுத்தியவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டார். இதற்கு முன்பு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியான நிலையில் தமிழ் சினிமாவில் ஓடிடியில் வெளியான முக்கியமான படமாக இது அமைந்தது.
ஓடிடி-யின் மீதான திரையுலகினரின் ஆரம்பகட்ட பார்வை, அந்தத் தளங்கள் சிறு முதலீட்டுப் படங்களை வாங்கி வெளியிடுவதை போல் பெரிய பட்ஜெட் படங்களை ப்ரிமியர் வெளியீடாக ரீலீஸ் செய்யாது என்பதுதான். இந்த எண்ணத்தையும் மாற்றி அமைத்தவர் நடிகர் சூர்யா.
சுதா, கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துத் தயாரித்திருந்த 'சூரரைப் போற்று' படத்தை அமேசான் தளத்துக்கு விற்றார். இந்திய அளவில் ஓடிடி தளங்கள் வரலாற்றில் வெளியிடப்பட்ட முதல் பெரிய பட்ஜெட் படமாக அது அமைந்தது. படத்தின் வெளியீட்டுக்குப் பின், இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் தெரிவிக்க, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இவர்களைத் தாண்டி தமிழ் திரையுலகுக்குள்ளும் பெரிய விவாதமாகவே மாறிப்போனது ஓடிடி.
ஒருகட்டத்தில் சூர்யாவின் நெருங்கிய நண்பரும், அவரை வைத்து 5 படங்களை இயக்கியருமான இயக்குநர் ஹரி கடுமையான அதிருப்தியை பதிவு செய்தார். ஆனால், ''இப்போதைக்குத் திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை. ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நடைமுறைச் சிக்கலை உணர்ந்தே இந்த முடிவுக்கு துணிந்துள்ளேன்" என்று விளக்கம் கொடுத்தார். சூர்யா போன்ற சிலரின் தைரியமான ஓடிடி வெளியீடுகள் தற்போது தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்துள்ளது எனலாம்.
தமிழ் சினிமாவின் எல்லையை ஓடிடி விரிவுபடுத்தியது என்பதும் நிஜம். தமிழ் சினிமா என்றால் தென்னிந்திய எல்லைகளை தாண்டி ரஜினி, கமல் மட்டுமே தெரிந்திருந்தது. இணைய வளர்ச்சிக்குப் பிறகு அஜித், சூர்யா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட, அவர்களும் இந்தியா முழுவதும் பிரபலமாகினர்.
ஆனால், ஓடிடி தளங்கள் வளர்ச்சிக்கு பிறகு, தமிழ் சினிமாவுக்கான கிராப், வட இந்தியாவிலும் உயர்ந்துள்ளது. உதாரணமாக ஓடிடி மூலம் 'சூரரைப் போற்று' படத்துக்கு கிடைத்த வரவேற்பை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் படம் பல்வேறு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இந்தி ரசிகர்கள் அதிகம் பார்த்தனர். இதனால் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களுக்கு மற்ற மொழியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.
அதேநேரம், கொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்த தமிழ் ரசிகர்களும், தியேட்டர்களுக்கு செல்ல முடியாத ஏக்கத்தை ஓடிடி மூலம் போக்க தொடங்கினர். இதுபோன்ற காரணங்களால் நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'க/பெ ரண சிங்கம்' போன்ற படங்கள் அடுத்தடுத்த நேரடியாக ஓடிடி வெளியீடாக வந்தன.
கடந்த ஆண்டு மட்டும் 24 தமிழ்ப் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளிவந்துள்ளன. விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தாலும், 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு காரணமாக வெளியான 15 நாட்களுக்குள்ளாகவே ஓடிடியிலும் வெளியானது.
இதே பாணியை பின்பற்றி 'கர்ணன்', 'சுல்தான்' ஆகிய திரைப்படங்களும் திரையரங்கில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடிக்கு வந்தன. இதற்கிடையே, கொரோனா இரண்டாம் அலை மீண்டும்வர... தமிழ் சினிமா, ஓடிடி தளங்களை கெட்டியாக பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது. 'கர்ணன்' திரைப்படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் உருவான 'ஜகமே தந்திரம்' திரைப்படம், நேரடி ஓடிடி வெளியீடாக வந்தது. விமர்சனங்களை தாண்டி 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, தமிழ் சினிமாவில் புதிய மைல்கல்லாக அமைந்தது.
நாளடைவில் இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட நல்ல உள்ளடக்கம் கொண்ட 'மண்டேலா' போன்ற திரைப்படங்களும் ஓடிடி மூலம் தமிழ் சினிமாவின் தரத்தை உலகுக்கு பறைசாற்றின. இதனால் தொடர்ந்து தமிழ் படங்களில் ஆதிக்கம் ஓடிடியில் பெருகி வருகின்றன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக, இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படுவது சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் நயன்தாராவின் 'நெற்றிக்கண்', விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி', கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' என அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளிவர இருக்கின்றன.
தற்போது அடுத்தப் பாய்ச்சலாக ஓடிடி தளத்திற்காகவே பிரத்யேக திரைப்பட தயாரிப்புக்களை தொடங்கியிருக்கின்றனர் தமிழ் திரையுலகினர். இதிலும், நடிகர் சூர்யா முன்னோடியாக இருக்கிறார். தற்போது ஞானவேல் இயக்கத்தில், தான் நடித்து வரும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தப் படம் தற்போதுதான் எடுக்கப்பட்டே வருகிறது. இப்படி, தனது நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகும் நான்கு திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதுபோக மணிரத்னம் தயாரித்துள்ள 'நவராசா' போன்ற படங்களும் ஓடிடி வெளியீட்டை கையில் எடுத்துள்ளன. இதனால் நாளுக்கு நாள் ஓடிடியில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
சில நாட்கள் முன்பு, ''ஓடிடிதான் இனி எதிர்காலம். இயக்குநர்களுக்குப் பெரிய சாதகமான தளமாக இருக்கிறது. இரண்டு மணி நேரத் திரைப்பட வடிவத்துக்குப் பொருந்தாத பல சிந்தனைகள் உள்ளன. அவற்றை மெய்யாக்குவதற்கு ஓடிடியே நம்மிடம் இருக்கும் ஆயுதம். நீண்ட நேரம் ஓடக்கூடிய வெப் சீரிஸ், ஆந்தாலஜி திரைப்படங்கள் என எல்லா ரீதியிலும் நாம் நினைக்கும் கதைகளை சொல்ல ஓடிடி வழிவகை செய்துள்ளது. ஓடிடி வரவால், மாறுபட்ட கதைகள் மட்டுமல்ல, இயக்குநர்கள் தங்களின் படைப்புகளை இயக்கும் விதத்திலும் மாறுதல்கள் கிடைக்கும்" என்றார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம்.
ஓடிடிதான் இனி சினிமாவின் எதிர்காலம் என்பதை தாண்டி, தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரங்களை இழந்துள்ள எண்ணற்ற திரைப்படத் தொழிலாளர்களின் நலன்களையும், ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட சினிமாத்துறையின் தற்போதைய நலன் காக்க ஓடிடி தளங்கள் மறுக்க முடியாத தேவையாக மாறி இருக்கின்றன.