சிறப்புக் களம்

திரையும் தேர்தலும் 12: யாரும் நண்பருமில்லை... யாரும் எதிரியுமில்லை!

திரையும் தேர்தலும் 12: யாரும் நண்பருமில்லை... யாரும் எதிரியுமில்லை!

webteam

எந்த காங்கிரஸை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே காங்கிரஸோடு 1971-ல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இந்திரா காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரஸின் இந்த கூட்டணி 38 இடங்களில் வெற்றி வாகை சூடியது. அதே காங்கிரஸின் இன்னொரு அணியில் இருந்து போட்டியிட்ட காமராஜர் மட்டும் நாகர்கோவில் தொகுதியில் வெற்றிபெற்றார். இந்தத் தேர்தல் நடக்கும்போது திமுகவில்தான் இருந்தார் எம்ஜிஆர். அப்போது தயாரிப்பில் இருந்த படம் எம்ஜிஆர் நடிக்கும் 'அன்னமிட்ட கை'. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் "அன்னமிட்ட கை... நம்மை ஆக்கிவிட்ட கை". இந்திரா காங்கிரஸின் சின்னம் கை. அதை முன்னிலைப்படுத்தும் விதமாக எம்ஜிஆர் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப் படம்தான் எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது வெளிவந்த கடைசிப் படம். இதன்பிறகுதான் எம்ஜிஆர் அதிமுக-வை தொடங்கினார். இதன் பின்னான எம்ஜிஆர் படப் பாடல்கள் வேறு ஒரு வடிவம் எடுத்தன.

1974-ல் 'நேற்று இன்று நாளை' படம் வெளியாகிறது. எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி முழுமூச்சில் கட்சியை பலப்படுத்திக்கொண்டிருந்த இடைவெளியில் நடித்த படம் இது. இதில் இடம்பெற்ற "நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று" என்கிற பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல் பேசிய தீவிர அரசியல் இங்கே மிகவும் முக்கியமானது. முழுக்க முழுக்க மத்திய மற்றும் மாநில அரசை நேரடியாக தாக்கி எழுதப்பட்ட பாடல் அது.

"இந்தியாவின் தந்தையென்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழ்ந்தவருக்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்" - என்கிற வரிகள் காங்கிரஸ் இரண்டாக பிளந்தபொழுது காங்கிரஸ் கட்சியில் இருந்த பலரே காந்தியை கடுமையாக விமர்சிக்க, அதை குறிக்கும் நோக்கில் இந்த வரிகள் எழுதப்பட்டன. இதைத்தொடர்ந்து,

"வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்" - என்கிற வரிகள் அன்றைய திமுக அரசையும், அதன் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் ஊழல் பேர்வழிகள் என்று சொல்லும்வண்ணம் எழுதப்பட்டது.

"ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே
பொய் எத்தனைநாள் கைகொடுக்கும் மறந்துவிடாதே
ஒருநாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு" - என்கிற வரிகள் 1977-ல் வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இனி அதிமுக ஆட்சியே என்பதை பிரகடனப்படுத்துவதைப் போல கூறியிருப்பார்கள். அந்தவகையில் இவையெல்லாம் வெறும் பாடல்களாக மட்டுமே அல்லாமல், ஒரு அஜெண்டாவை சுமந்து எழுதப்பட்ட விஷயங்களாகவே இருந்தது. மக்களும் அதை வரவேற்று, கைதட்டி, விசிலடித்து மகிழ்ந்தனர்.

ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் படங்களின் பாடல்களில் கம்யூனிச தத்துவங்கள் நிறைந்து இருக்கும். 1964-ல் வெளியான 'படகோட்டி' படத்தில் இடம்பெற்ற, "கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்" பாடல் முழுக்க பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு ஆதரவான கருத்துகளே நிரம்பியிருக்கும். "பலர் வாழ வாழ சிலர் வாட வாட ஒருபோதும் தெய்வம் கொடுப்பதில்லை" என்கிற வரிகளையும் கவனியுங்கள். "வலுத்தவர்கள் எடுத்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்" என்று பாட்டாளிகளின் துயரங்களையும் பாடியிருப்பார்.

எம்ஜிஆர் தனது படங்களில் நடிக்கும் வேடங்களை நாம் அலசினால் இன்னும் சில விஷயங்கள் தெளிவாகும். 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படத்தில் சாதாரண ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. அதன்பின்னர் தமிழகத்தில் ரிக்‌ஷா ஓட்டும் அனைவரின் வண்டிகளிலும் எம்ஜிஆர் படம் தவறாது இடம்பெற ஆரம்பித்தது. முதலில் திமுகவிற்காக வாக்களித்த அவர்கள், எம்ஜிஆர் அதிமுக தொடங்கியதும் அந்தப்பக்கம் சாய்ந்தனர். இன்றும் சென்னையில் எஞ்சியிருக்கும் சில ரிக்‌ஷா ஓட்டிகள் எம்ஜிஆர் படத்தை சுமந்திருப்பதை காணலாம்.

அடுத்து 'படகோட்டி' படத்தில் மீனவன் வேஷம். "தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்" பாடல் கேட்டு கலங்காத நெஞ்சம் இல்லை அப்போது. மொத்த மீனவர்களும் எம்ஜிஆருக்கு ஆதரவாக எழுந்து நிற்கவைத்த பாடல் அது. அதேபோல் 'ஒளிவிளக்கு' படத்தில் நரிக்குறவர் வேஷமிட்டு அவர் பாடிய "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க" பாடல் இன்றும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான தேசியகீதம். "பாசிமணி ஊசியெல்லாம் விப்போமுங்க.. ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்" வரிகள் மிக முக்கியமானவை.

அதேபோன்று 1977-ல் வெளிவந்த 'மீனவ நண்பன்'. அதில் இடம்பெற்ற "நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்.. என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால்" பாடல் அப்பட்டமாக திமுகவிற்கு எதிராக எழுதப்பட்ட பாடல். இந்தப்படம் வெளிவந்தபோது எம்ஜிஆர் ஆட்சிக்கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்தார். கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் இரண்டு இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்று பொதுத்தேர்தலுக்காக அப்போதிருந்தே காத்திருக்க தொடங்கியது. அதற்கான முன்னேற்பாடுகள் எல்லாவற்றையும் எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலமாக செய்துகொண்டே இருந்தார்.

அதேபோல் எம்ஜிஆர் பாடல்களில் மற்றும் படங்களில் அறிஞர் அண்ணா முக்கிய இடம் வகித்தார். என்னதான் திமுக அண்ணாவால் தொடங்கப்பட்டாலும் கூட, திமுகவை விட அதிகமாக எம்ஜிஆரும் அதிமுகவுமே அண்ணாவின் உண்மையான தம்பிகள் என்பதை நிரூபிக்க எம்ஜிஆர் எல்லாவகையிலான முயற்சிகளை மேற்கொண்டார். இதன்மூலம் அண்ணாவின் மீது பெரும் அபிமானம் கொண்டிருந்த எல்லோருமே எம்ஜிஆரை எந்தவித கேள்வியுமின்றி ஆதரித்தனர்.

"மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்" என்கிற வரிகளில் தொடங்கி, "நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்.. பொது நலத்தில்தானே நாள்முழுக்க கண்ணாய் இருந்தார்" என தொடர்ந்து, "மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப்பாருங்கள்.. அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்" என்பது வரை அவர் புகழ் பாடாத இடமே இல்லை திரைப்படங்களில். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் தனது கட்சிக்கொடியிலேயே அண்ணாவின் உருவத்தை எம்ஜிஆர் பதித்திருந்தார். 1967-ல் திமுகவில் இருந்தபொழுது 'விவசாயி' என்றொரு படத்தில், "பறக்கவேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி" என்று பாடியவர், பின்னர் அதே கொடியை கோட்டையில் இருந்து கீழிறக்கினார்.

வெறும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று எம்ஜிஆர் பெயர் சூட்டியதின் பின்னணியில் கண்டிப்பாக எம்ஜிஆருக்கு இந்திய நாடாளுமன்ற அரசியல் மீதும் ஒரு கண் இருந்திருக்கவேண்டும் என்று பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் கட்சி தொடங்கியதிலிருந்தே இந்திரா காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே எம்ஜிஆர் ஆட்சியை பிடித்த மூன்றே வருடங்களில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதுவே 1984-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதே காங்கிரஸோடு கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்து வெற்றிவாகை சூடியது. அப்போது மேடையெங்கும்,"வீட்டைக் காக்கும் கை இது நாட்டைக் காக்கும் கை.. இந்தக் கை நாட்டின் நம்பிக்கை" என்கிற எம்ஜிஆர் பாடல் தெருவெங்கும் ஒலித்தது.

அரசியல் சதுரங்கத்திலே யாரும் நண்பருமில்லை. யாரும் எதிரியுமில்லை. பல திரைப்படங்களை விஞ்சும் திரைக்கதைகளை கொண்டதல்லாவா அரசியல்?

இத்தனை களேபரங்களுக்கு இடையில் திமுக தாக்குப்பிடித்துக் கொண்டுதான் இருந்தது. எம்ஜிஆர் இறக்கும் வரை அவரை ஆட்சிக்கட்டிலில் இருந்து கீழிறக்க முடியாத சூழலே நிலவியது. எம்ஜிஆரின் திரையுலக கவர்ச்சியும், அவரின் மீதிருந்த நன்மதிப்பும், கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் என்கிற பெயரும், பொன்மனச்செம்மல் என்கிற பட்டமும், புரட்சித்தலைவர் என்கிற அடைமொழியும் யாராலும் வெல்லமுடியாத சக்தியாக விளங்கிவந்தது. ஆனால், கால அரக்கன் நோய் ரூபத்தில் எம்ஜிஆரை தமிழகத்திலிருந்து பறித்தான்.

இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே திரை வழி தமிழக அரசியலையும், அரசியல் வழி தமிழ் சினிமாவையும் அலசுவதுதான். அதற்கு முழுமுதற் அடையாளமாக நம் கண்முன் இருப்பது எம்ஜிஆர் மட்டுமே. இதற்குப் பின்னும் எத்தனையோ திரையுலக பிரபலங்கள் இந்த தொடரில் வரப்போகிறார்கள். அவர்களின் அரசியல் சாதனைகளை நாம் பார்க்கத்தான் போகிறோம். ஆனால், எம்ஜிஆர் அளவிற்கு அவர்கள் புகழ் இங்கு ஒலிக்குமா என்று ஒரு கேள்வி எழுப்பினால் அது சந்தேகம்தான்.

எம்ஜிஆரின் மரணம் அரசியலில் மட்டுமல்ல திரைத்துறையில் கூட பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டே சென்றது. அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல. சிறந்த தயாரிப்பாளர். திறமையான இயக்குனர். அவர் இயக்கிய படங்கள் எல்லாமே 'இண்டஸ்ட்ரி ஹிட்' என அழைக்கப்படும் பெருமை வாய்ந்தவை. நல்ல தொழில்நுட்ப அறிவு வாய்ந்தவர். பல புதிய தொழில்நுட்பங்களை தனது படங்களில் தொடர்ந்து உபயோகித்து அதில் வெற்றியும் கண்டவர். அற்புதமான கேமரா அறிவு உள்ளவர். அவரது படங்களின் கதைகளின் சூத்திரம் ஒன்றுபோலவே இருந்தாலும் கூட, எந்தப்படத்தையும் தோல்விப்படமாக கொடுக்காதவர். அதற்கு காரணம் அவருக்குள் இருந்த திரைக்கதை அறிவு. பாடல்களை எப்படி உபயோகிக்கவேண்டும் என்கிற விஷயம் எல்லோருக்கும் கைகூடாது. ஆனால் எம்ஜிஆருக்கு அது கைவந்த கலை. அக்கலையை தன் வாழ்நாள் முழுக்க பயன்படுத்தி வெற்றிகொண்ட அந்த மனிதரின் இன்னுயிர் 1987, டிசம்பர் 24-ஆம் தேதி பிரிந்தது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய குழப்பங்களும், அதைத்தொடர்ந்து எதிர்பாரா ஒரு கொலையும் நிகழ்ந்து பெரும் ஆட்சிமாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. இடையில் தமிழ் சினிமாவும் சற்றே சில பின்னடைவுகளை சந்தித்தது.

திரை நீளும்...

- பால கணேசன்