சிறப்புக் களம்

எளியோரின் வலிமை கதைகள்-14: ரெடிமேட் ஆடைகளால் நலிவடையும் தையல் தொழில்

எளியோரின் வலிமை கதைகள்-14: ரெடிமேட் ஆடைகளால் நலிவடையும் தையல் தொழில்

webteam

''நாம தைச்சி கொடுக்குற டிரஸ்ஸ வெளியில யாராவது போட்டுகிட்டு வர்றத பார்க்கும்போது மனசுக்குள்ள சந்தோஷமா இருக்கும்.''

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பார்கள். அப்படி ஆடை பாதி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உடுத்திக் கொள்ளும் உடையில் அமைகிறது. அப்படிப்பட்ட உடைகளை தயாரிப்பது என்பது ஒரு கலை. நெசவு செய்யப்பட்டு வரக்கூடிய ஆடைகளை ஒவ்வொரு மனிதனுக்கும் தகுந்தாற்போல, மனிதர்களின் நெளிவு, சுளிவுகளை அறிந்து பொருத்தமாக தைத்துக் கொடுப்பது இந்த தையல் கலைஞர்களின் வேலை. ஒரு மனிதனின் ஆடை என்பது அவர்களை பல வகையில் அழகுபடுத்துவதுடன் எடுத்துக்காட்டவும் அமைகிறது. அப்படிப்பட்ட ஆடைகளை தயார் செய்கிற மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

கட கட கட... என வேகமாக சத்தமிட்டுக் கொண்டிருக்கும் தையல் மிஷினை உற்று நோக்கியபடியே தைத்துக் கொண்டிருந்தார் பால சரஸ்வதி. 42 வயதான அப்பெண் மிக நுணுக்கமாக, கவனமாக தையல் வேலையில் ஈடுபட்டிருந்தார். அந்த வேலைக்கிடையில் அவரை சந்தித்தோம்.

‘’எனக்கு திருமணமாகி 22 வருஷம் ஆகுதுங்க. கல்யாணம் ஆன புதுசுல என் கணவர் டிரைவர் வேலை செஞ்சிட்டு இருந்தார். ஒரு நாலு வருஷம் வேலை செஞ்சிருப்பார் அதுக்கு அப்புறம் அவருக்கு கை, கால் வரல. படுத்த படுக்கையா ஆகிட்டார். அப்பதான் எங்க அப்பா எனக்கு ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தார். முறையா தையல் பழக ஆரம்பிச்சேன். வேற எந்த வேலைக்கும் போறதுக்கு எனக்கு விருப்பமில்லை. எங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைங்க..ரொம்பவும் சிரமப்பட்டு தான் குடும்பத்தை நடத்திட்டு வந்தோம். இப்பயும் நடத்திட்டு வரேன். நானு லேடிஸ் டிரஸ்தான் அதிகமா தைப்பேன். அதுதான் எனக்கும் தெரியும்.

ஜாக்கெட், சுடிதார் அப்புறம் கவுன் இந்த மாதிரி துணிகள் தான் அதிகம் தைக்கிறது.15 வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஜாக்கெட் தைக்கிறதுக்கு 10 ரூபாய் கொடுப்பாங்க, ஒரு சுடிதார் தைக்க 15 ரூபாய் கொடுப்பாங்க. இந்த தொழில்ல நிரந்தரமாக வேலை இருக்குன்னு சொல்ல முடியாது. எனக்கும் வேற வேலை எதுவும் தெரியாது. அப்பல்லாம் நூல் விலை 2 ரூபாய் வித்துச்சி. இப்ப நூல் விலை 5 ரூபாய்க்கு மேல ஏறிடுச்சு. இந்த நிலையில் கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என் கணவரும் இறந்துட்டாரு. பதினைந்து வருஷம் முன்னாடி எங்க அப்பா வாங்கி கொடுத்த 4,000 ரூபா மிஷன வச்சிகிட்டுதான் நான் இன்னும் என் குடும்பத்தின் நடத்திக்கிட்டு வரேன்.

இப்ப என்னங்க ஒரு ஜாக்கெட்டுக்கு 70 ரூபாய் கொடுப்பாங்க. சுடிதார் தைச்சி கொடுத்தா 200 ரூபாய் கொடுப்பாங்க. ஒரு நாளைக்கு மூனு ஜாக்கெட் தான் தைக்க முடியும். சுடிதாரா இருந்தா ஒன்னு தான் தைக்க முடியும். எல்லா நாளிலும் இந்த வேலை இருந்தா கூட பரவாயில்லை தீபாவளி பொங்கல் அது மாதிரி பண்டிகை காலங்களில் ஏதாவது கொஞ்சம் வேலை இருக்கும். அந்த நேரத்தில் வரும் வருமானத்தை வச்சு குடும்பத்தை நடத்திட்டு வர்றோம். இந்த மெஷின் தான் எங்க நாலு பேரையும் வாழ வச்சுதுன்னு சொல்லலாம்.

பேங்க்ல ஒரு முறை லோன் வாங்கினேன். வேலை நிரந்தரமா இல்லை அதனால லோன் கூட கட்ட முடியல. கடன் அடிச்சிட்டு அதுக்கப்புறம் லோன் வாங்குறதையும் நிறுத்திட்டேன். இதுக்கிடையில எங்களை மாதிரியே கஷ்டப்படுற எவ்வளவோ தொழிலாளிங்க ரெடிமேட் துணிகள் தைக்கிறதுக்கு போயிடுவாங்க. சொற்ப காசுதான் கிடைக்கும். அதுவும் ரெடிமேட் துணி வந்ததுனால எங்ககிட்ட துணி தைக்க வர்றவங்களும் குறைஞ்சு போச்சு.

தைச்சி கொடுக்குற டிரஸ்ஸ யாராவது போட்டுகிட்டு எதிரில் வந்தா அது ஒரு மகிழ்ச்சியா இருக்கும். ஒருமுறை துணி தைக்க வந்தாங்கன்னா ரெகுலரா நம்ம கிட்டே தான் வருவாங்க. அதுவும் புடிச்சி போச்சுன்னா சொல்லவே தேவையில்லை. ஏதோ அவங்கள மாதிரி இருக்கிற ஆட்கள வச்சுகிட்டு தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருக்குன்னு சொல்லலாம்’’ என்றார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆடை அமைப்பு இருப்பதை நாம் அறிவோம். அப்படி விதவிதமான ஆடைகளை வடிவமைக்கும் தையல் கலைஞர்கள் மிகுந்த ரசனை உள்ளவர்கள். ஏழ்மை ஒரு பக்கம் அவர்களை இறுக்கிக் கொண்டிருந்தாலும் ஆடைகள் தயாரிப்பதில் அவர்கள் சோர்ந்து போவதில்லை. அப்படி சோர்ந்து போகாத ஒரு தையல் கலைஞர்தான் வடிவேல். அவரிடமும் பேசினோம்.

‘’20 வருஷத்துக்கு முன்னாடி நான் காஜா எடுக்கவும், பட்டன், கொக்கி கட்டவும் கத்துகிட்டேன். அப்ப எனக்கு சம்பளம் அஞ்சு ரூபா. கொஞ்சம், கொஞ்சமா வேலை கத்துக்கிட்ட நான், டெய்லர் ஆயிட்டேன். அப்போ எங்க முதலாளி ஒரு சட்டைக்கு நூறு ரூபா கூலி வாங்குவார். ஜாக்கெட்டுக்கு 25 ரூபாய். என்ன மாதிரி வேலை செய்றவங்களுக்கு ஒரு நாளைக்கு 150 ரூபாய் கூலி. சட்டையா இருந்தா 10 தைக்கனும், ஜாக்கெட்டா இருந்தா 15 தைக்கனும் ஒரு நாளைக்கு. அப்பதான் 150 ரூபாய் கூலி கிடைக்கும். அப்ப நிறைய வேலை வந்துச்சு இப்ப எல்லாம் வேலை ரொம்ப குறைஞ்சிடுச்சு.

பள்ளிக்கூடம் தொறக்கிற நாள், மற்றபடி விசேஷ நாள்லதாங்க வேலைக்கு கூப்பிடுறாங்க. எல்லா நாளும் வேலை இருக்கிறது இல்லை. வேலை இல்லாத நாள்ல கட்டிட வேலைக்கோ, கரும்பு வெட்டும் கூலி வேலைக்கோ போகிறோம். எனக்கு இரண்டு பொம்பள பசங்க ஒரு ஆம்பள பையன். இவங்களுக்கு படிக்கறதுக்கு வாங்குன கடனே ரெண்டு லட்சம் இருக்கு. அதை அடைக்க முடியல. வட்டி மட்டும்தான் கட்டிக்கிட்டு வர்றேன். இப்போ ஒரு சட்டை தைக்க 200 ரூபாய் கொடுப்பாங்க, ஜாக்கெட்டா இருந்தா 80 ரூபாய் கொடுப்பாங்க.

எல்லா நாளிலும் வேலை இருக்கிறது இல்லை. ஜாக்கெட் தைக்கிக்ற வேலையாச்சும் எப்பயும் இருக்கும். ஆனா அதுலயும் இப்ப ரெடிமேட் புகுந்திடுச்சு. என்ன மாதிரி கிராமத்தை ஒட்டி கடை வச்சிருக்கிற டெய்லர்களுக்கு எல்லாம் கொஞ்சம் வாழ்க்கை சிரமமா தான் ஓடுதூங்க. இப்ப இருக்கிற கம்ப்யூட்டர் உலகத்துல துணி தைக்க முடியாதுங்க. ஒட்டி தான் போட்டுக்கணும் போல இருக்கு’’ என்றார் ஆதங்கத்துடன் வடிவேல்.

-ஜோதி நரசிம்மன்