நிகோலஸ் பூரண் pt desk
சிறப்புக் களம்

T20 WorldCup| குர்பாஸ் To ஹொசைன்.. குரூப் பிரிவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் & டாப் 3 பௌலர்கள் யார்,யார்?

டி20 உலகக் கோப்பை வீரர்களைப் பொறுத்தவரையிலும் பல புதிய ஸ்டார்கள் இந்த அரங்கில் அவதரித்திருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பையில் இதுவரை கலக்கியிருக்கும் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் டாப் 3 பௌலர்கள் யார்?

Viyan

2024 டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. குரூப் சுற்று முடிந்து சூப்பர் 8 தொடங்கவிருக்கிறது. பல்வேறு அதிர்ச்சிகள் இந்த தொடரில் நடந்துகொண்டிருக்கின்றன. பல சிறிய அணிகள் பெரிய அணிகளை வெளியேற்றியிருக்கின்றன. இரண்டு முன்னாள் சாம்பியன்கள் முதல் சுற்றோடு நடையைக் கட்டியிருக்கின்றன. வீரர்களைப் பொறுத்தவரையிலும் பல புதிய ஸ்டார்கள் இந்த அரங்கில் அவதரித்திருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பையில் இதுவரை கலக்கியிருக்கும் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் டாப் 3 பௌலர்கள் யார்?

ரஹ்மானுல்லா குர்பாஸ்

பேட்ஸ்மேன் #1: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆப்கானிஸ்தான்

இன்னிங்ஸ்: 4

ரன்கள்: 167

சராசரி: 41.75

ஸ்டிரைக் ரேட்: 150.45

பெஸ்ட் ஸ்கோர்: 80

பேட்டிங் செய்வதே மிகவும் கடினமாக இருக்கும் இந்த உலகக் கோப்பையில் தன் அதிரடி ஆட்டத்தை அசால்டாகக் காட்டியிருக்கிறார் குர்பாஸ். முதல் போட்டியில் உகாண்டாவுக்கு எதிராக 76 ரன்கள் விளாசி இந்தத் தொடரை சிறப்பாக தொடங்கிய அவர், நியூசிலாந்துக்கு எதிராக அந்த அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கினார். ஆரம்பம் முதலே அசத்திய அவர் 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய அவர் தான் ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இருப்பதற்குக் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அடுத்த 2 போட்டிகளிலும் சேர்த்தே 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் இந்தத் தொடரின் டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார் குர்பாஸ்.

பேட்ஸ்மேன் #2: நிகோலஸ் பூரண், வெஸ்ட் இண்டீஸ்

இன்னிங்ஸ்: 4

ரன்கள்: 164

சராசரி: 41

ஸ்டிரைக் ரேட்: 150.45

பெஸ்ட் ஸ்கோர்: 98

27, 22, 17 என மிகவும் சாதுவாக இந்த உலகக் கோப்பையில் ஆடிக்கொண்டிருந்தார் பூரண். பேட்டிங் கடினமாக இருந்த போட்டிகளில் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைப்பதை மட்டுமே பிராதானமாக வைத்திருந்தார். கடைசி குரூப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சிக்கியது, ஒரிஜினல் பூரண் தன் விஸ்வரூபத்தைக் காட்டிவிட்டார். 53 பந்துகளில் 98 ரன்கள். மொத்தம் 6 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள் என அசல் அதிரடியைக் காட்டினார். அதுவும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் வீசிய ஒரே ஓவரில் 36 ரன்கள் பறக்கவிட்டு 'ஐ ஆம் பேக்' என்று சொல்லிவிட்டார். ஒரு அற்புதமான ரன் அவுட்டால் இந்த உலகக் கோப்பையின் முதல் சதத்தைத் தவறவிட்டுவிட்டார் பூரண்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ்

பேட்ஸ்மேன் #3: மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆஸ்திரேலியா

இன்னிங்ஸ்: 3

ரன்கள்: 156

சராசரி: 78.00

ஸ்டிரைக் ரேட்: 190.24

பெஸ்ட் ஸ்கோர்: 67*

ஸ்டாய்னிஸின் ஸ்டிரைக் ரேட்டைப் பார்த்தால் யாருமே இது லோ ஸ்கோரிங் உலகக் கோப்பை என்று சொல்லமாட்டார்கள். ஒவ்வொரு பௌலரையும் அடித்துத் துவைக்கிறார் இந்த ஹல்க். விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலுமே குறைந்தபட்சம் 30 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தடுமாறிக்கொண்டிருந்தபோது அநாயசமாக ஆடி அந்தப் போட்டியை வெல்லவும், இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையவும் காரணமாக இருந்தார் ஸ்டாய்னிஸ். இது போதாதென 6 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.

பௌலர் #1: ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஆப்கானிஸ்தான்

போட்டிகள்: 4

ஓவர்கள்: 14.2

விக்கெட்கள்: 12

எகானமி: 5.58

சிறந்த பந்துவீச்சு: 5/9

14 ஓவர்களில் 12 விக்கெட்டுகள். அதுவும் ஒவ்வொரு 7 பந்துக்கும் ஒரு விக்கெட். இப்படியொரு பந்துவீச்சை ஒரு உலகக் கோப்பையில் அதுவும் ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரிடம் இருந்து யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த அணியின் ஸ்பின்னர்கள் மீதே கவனம் இருக்கும்போது, இவர் படம் காட்டியிருக்கிறார். அதுவும் முதல் 3 போட்டிகளிலேயே 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். ஒவ்வொரு அணிக்கும் பவர்பிளேவிலேயே பெரிய சவாலாக விளங்கியிருக்கிறார் ஃபரூக்கி.

ஃபசல்ஹக் ஃபரூக்கி

பௌலர் #2: டிரென்ட் போல்ட், நியூசிலாந்து

போட்டிகள்: 4

ஓவர்கள்: 16

விக்கெட்கள்: 9

எகானமி: 3.68

சிறந்த பந்துவீச்சு: 3/16

தான் ஏன் ஜாம்பவான் என்பதை இந்த உலகக் கோப்பையிலும் நிரூபித்திருக்கிறார் டிரென்ட் போல்ட். நியூசிலாந்து அணி தடுமாறி குரூப் சுற்றோடு வெளியேறியிருந்தாலும் போல்ட் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார். 3.68 என்ற எகானமியில் அசத்திய வழக்கம்போல் 2 மெய்டன் ஓவர்களும் வீசினார். ஒவ்வொரு போட்டியிலுமே குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளாவது வீழ்த்தி தொடர்ந்து தன் பங்களிப்பைக் கொடுத்தார் அவர்.

பௌலர் #3: அகீல் ஹொசைன், வெஸ்ட் இண்டீஸ்

போட்டிகள்: 4

ஓவர்கள்: 15

விக்கெட்கள்: 9

எகானமி: 4.13

சிறந்த பந்துவீச்சு: 5/11

இந்தத் தொடர் தொடங்கும்போதே இடது கை ஸ்பின்னர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் எதிர்பார்க்கப்பட்டது. தன்னிடம் எது அணிக்குத் தேவைப்பட்டதோ அதைக் கொடுத்திருக்கிறார் அவர். உகாண்டாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி தன் சிறந்த டி20 பௌலிங்கையும் பதிவு செய்தார் அகீல். பவர்பிளேவில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய பௌலராக உருவெடுத்திருக்கிறார்.