சிறப்புக் களம்

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்!

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்!

Sinekadhara

இரும்புச்சத்து குறைபாடு என்பது உலகளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று. அனீமியா என்று அழைக்கப்படும் இந்த பிரச்னை ரத்தத்தில் ஹீமோகுளோபினை உருவாக்க போதுமான இரும்புச்சத்து இல்லாததைக் காட்டுகிறது.

இரும்புச்சத்து குறைபாடு பொதுவாக கர்ப்பிணிகளுக்கும், மாதவிடாய் பெண்களுக்கும் ஏற்படும். அதேசமயத்தில் வயதான ஆண் மற்றும் பெண்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. நீண்ட நாட்கள் இதே பிரச்னை தொடரும்போது அது உள் ரத்தக்கசிவு மற்றும் இதயம் செயலிழத்தல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. முறையான மருந்துகளை எடுத்துக்கொண்டால இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். ஆனால் சரியான நேரத்தில் பிரச்னையை கண்டறிவது அவசியம். சில அறிகுறிகள் தென்பட்டால் உடனே அனீமியா பரிசோதனை செய்வது நல்லது.

எப்போதும் சோர்வுடன் இருத்தல்

ரத்தத்தில் போதுமான ஹீமோகுளோபின் இல்லாதபோது, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதயமும் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை உடலுக்கு செலுத்த சிரமப்படும். இதனால் எப்போதும் ஒருவித சோர்வு இருந்துகொண்டே இருக்கும்.

சருமம் வெளிரிப்போதல்

ரத்தத்தில் போதுமான ஹீமோகுளோபின் இருந்தால்தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். ரத்தத்திற்கு போதுமான நிறமி கிடைக்காதபோது அது சருமத்தின் நிறத்தைக் குறைக்கிறது. இதனால்தான் மருத்துவர்கள் கண் மற்றும் உள்ளங்கைகளை சோதிக்கின்றனர்.

முடிஉதிர்வு பிரச்னை

இரும்புச்சத்து குறைபாட்டால் சருமம் வறட்சியாவதோடு, முடி உதிர்வு பிரச்னைகளும் அதிமாகும். மேலும் முடி வெடிப்பு ஏற்படுவதுடன், நக வெடிப்பும் ஏற்படும். இரும்புச்சத்து குறையும்போது போதுமான ஊட்டச்சத்துகள் முடிக்கு கிடைப்பது தடுக்கப்படும்.

மூச்சுவிடுவதில் சிரமம்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவால் ஆக்ஸிஜன் குறையும்போது, தசைகளுக்கும் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும். எனவே நடக்கும்போதும், வேலை செய்யும்போதும் மூச்சுவிடுவதில் ஒருவித சிரமம் ஏற்படும். இதயத் துடிப்பு நின்றுவிடுவதைப் போன்ற உணர்வும் அடிக்கடி ஏற்படும். இதயத்துடிப்பில் அடிக்கடி ஏற்றதாழ்வுகள் ஏற்படும்.

மருத்துவரை எப்போது அணுகவேண்டும்?

இரும்புச்சத்து குறைப்பாட்டுக்கான இரண்டு அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவரை அணுகுவது நல்லது. ரத்த பரிசோதனை செய்து அனீமியா இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம். மருத்துவர்கள் உணவு மாற்றமுறை மற்றும் மாத்திரைகளை பரிந்துரைப்பர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒருநாளைக்கு 8.7 மில்லிகிராமும், 19 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு 14.8 மில்லிகிராம் இரும்புச்சத்தும் ஒரு நாளைக்கு அவசியம்.