சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், பயணங்கள் மேற்கொள்ளும்போது கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் கொரோனாவின் அடுத்த அலை, ஒமிக்ரான் புதிய திரிபு BF.7 பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா உட்பட அண்டை நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.
குறிப்பாக இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் BF.7 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் குஜராத், இருவர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கடந்த புதன்கிழமை(21.12.2022) ஆலோசனை மேற்கொண்டார். இந்த துணை திரிபானது ஏற்கனவே ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் BF.7
முன்பே கண்டறியப்பட்ட ஒமிக்ரான் BA.5.2.1.7 வகையின் அடுத்த திரிபுதான் BF.7. அதாவது BA.5 திரிபிலிருந்து பிறழ்ந்து தற்போது இந்த திரிபு உருவாகியுள்ளது. ஆனால் இந்த BF.7 திரிபானது மற்ற வகைகளைவிட அதிவேகமாக பரவக்கூடியது. குறிப்பாக ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், தடுப்பூசி செலுத்தியவர்களும்கூட இந்த தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும், BF.7 திரிபானது முதன்முதலில் உருவான வுஹான் வைரஸை விட 4.4 மடங்கு அதிக வீரியம் கொண்டிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஒமிக்ரான் BF.7 அறிகுறிகள்
இந்த புதிய திரிபின் அறிகுறிகளும் மூச்சுக்குழாய் தொற்றின் அறிகுறிகளும் ஒரேமாதிரியாகவே இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவில் இதுவரை மிகப்பெரிய தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், இந்த புதிய வகை திரிபானது மிக வேகமாக பரவக்கூடியது என்பதாலும், இதன் இன்குபேஷன் காலம் மிகவும் குறைவு என்பதாலும் ஒமிக்ரானின் இந்த புதிய திரிபு அச்சத்தை அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது பின்பற்றப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர் நிபுணர்கள். இந்த கொரோனா தொற்றின் வீரியம் அதிகம் என்பதால், பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து அவரைச் சுற்றியுள்ள 10-18.6 பேருக்கு தொற்று ஏற்படலாம் என்கிறது ஆய்வுகள்.
இதன் தொற்று விகிதம் விரைவாக உள்ளதால், ஆர்டி- பிசிஆர் சோதனைகளில் கண்டறிவது கடினமாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த தொற்று எளிதில் பரவலாம் என்கின்றனர்.